Published:Updated:

முயற்சி உடையாள் - 9 - திரைத்துரையில் தடம்பதிக்கலாம் - வழிகாட்டுகிறார் இயக்குநர் ஹலீதா ஷமீம்

முயற்சி உடையாள்
பிரீமியம் ஸ்டோரி
முயற்சி உடையாள்

படிப்பு முடிந்து ஆறு ஆண்டுகள் சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் திரைப் படங்களை இயக்க ஆரம்பித்தேன்.

முயற்சி உடையாள் - 9 - திரைத்துரையில் தடம்பதிக்கலாம் - வழிகாட்டுகிறார் இயக்குநர் ஹலீதா ஷமீம்

படிப்பு முடிந்து ஆறு ஆண்டுகள் சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் திரைப் படங்களை இயக்க ஆரம்பித்தேன்.

Published:Updated:
முயற்சி உடையாள்
பிரீமியம் ஸ்டோரி
முயற்சி உடையாள்

ஒரு காலத்தில் ஆண்களுக்கான கோட்டையாக இருந்த திரைத்துறை, இன்று பெண்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தொடங்கியிருக்கிறது. நடிகையாக மட்டுமன்றி, திரைக்குப் பின்னாலும் பெண்களின் வெற்றி பேசப்படும், பாராட்டப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதைப் போலவே, திரைத்துறையில் கால்பதிக்க விரும்பும் பெண் களின் மீதான விமர்சனங்களுக்கும் இங்கே பஞ்சமில்லை. வெற்றிபெறும் ஒவ்வொரு பெண்ணும், அவற்றை எல்லாம் கடந்து வந்தவர்களே...

திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்கள்... அவற்றை எதிர்கொள்ளும் வழிகள் என அனுபவ ஆலோசனைகளை வழங்குகிறார் `சில்லுக் கருப்பட்டி', `பூவரசம் பீப்பி', `ஏலே' படங்களின் இயக்குநர் ஹலீதா ஷமீம்.

இயக்குநர் ஹலீதா ஷமீம்
இயக்குநர் ஹலீதா ஷமீம்

குடும்பத்தின் நம்பிக்கையே அடிப்படை

``படிப்பு முடிந்து ஆறு ஆண்டுகள் சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் திரைப் படங்களை இயக்க ஆரம்பித்தேன். படிப்பதற்கும், உதவி இயக்குநராகப் பயிற்சி பெறவும் சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியம். நான் திரைத் துறைக்கு வந்தபோது, வாய்ப்புகள், பாதுகாப்பு குறித்த பல கேள்விகள் என் குடும்பத்தாருக்கு இருந்தன. ஷூட்டிங் செல்லும் இடங்களுக்கு பாதுகாப்பு கருதி என் அம்மா என் னுடன் வந்த காலமும் உண்டு. எல்லா வற்றையும் கடந்து, எனக்கான அடையாளத்தை நான் உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு மீண்டும், மீண்டும் கொடுத்துக் கொண்டே இருந்தேன். குடும்பத்தின் ஆதரவைப் பெற்றுவிட்டாலே நீங்கள் பாதி வெற்றி அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். குடும்பத்துக்காக ஆண்கள் செலவிடும் நேரத்தைவிட, பெண்கள் செலவிடும் நேரம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. திரைத் துறைக்கு வருபவர்கள் வேலை நேரத்தைத் துல்லியமாகத் திட்டமிட முடியாது. தினமும் தங்கள் குடும்பத்துக்கான நேரத்தைச் செல விடுவது சிரமம்தான். இதை குடும்பத்தாருக்குப் புரியவைக்க வேண்டும். அதே நேரம் ஷூட்டிங் இல்லாத நாள்களை குடும்பத்துடன் கொண் டாடலாம்.

ஏளனங்களைப் புறந்தள்ளுங்கள்

திரைத்துறையில் வெற்றி என்பது ஆண் களுக்கே போராட்டமாக இருக்கும்போது, பெண்ணுக்கு அது எப்படிச் சாத்தியம் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது. அது திரைத்துறையில் நுழையும் பெண்கள் மீதான ஏளனமாகப் பிரதிபலிக்கும். இயக்குநராகப் பயிற்சிபெறும் பெண்களின் திறமைகளைப் பார்க்காமல், நடிகைகளுக்கு வசனங்கள் சொல்லிக்கொடுக்கவோ, அல்லது ஆடைகளை சரி செய்யவோ தான் அவர்களைப் பெரும்பாலும் பயன் படுத்திக்கொள்ளப் பார்ப்பார்கள். பெண்களுக்கு டெக்னிகல் விஷயங்கள் தெரியாது என்றே நினைப்பார்கள். நானும் அந்தச் சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். இது போன்ற சூழலில், அமைதியாக இல்லாமல் நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், உங்கள் லட்சியத்தின் வீரியம் மற்றவர்களுக்குப் புரியும். உங்களைக் குறைத்து மதிப்பிடும் பார்வை மாறும்.

ஆண்களின் ஈகோவை அணுகுமுறையால் மாற்றுங்கள்

என்னதான் சமூக மாற்றங்கள் நிகழ்ந்தாலும், ஒரு பெண்ணுக்குக்கீழ் பணிபுரிவதில் இன்னும் சில ஆண்களுக்குத் தயக்கம் இருக்கிறது. திறமைக்கு ஆண், பெண் பேதமில்லை என்பதை உங்களின் அணுகுமுறை மூலம் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு வெளிப்படுத்திவிடுங்கள். பெண் என்பதற்காகப் பணிந்து செல்லாதீர்கள். தொழில்நுட்பங்கள் சார்ந்த விஷயங்கள் தெரியவில்லை என்றால், கற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டாதீர்கள். நூறு ஆண்கள் கூடி இருக்கும் ஓரிடத் தில் ஒரு பெண்ணாக நிற்பதே உங்களின் வெற்றிதான் என்பதை மறந்து விடாதீர்கள்.

பார்வையும் பாணியும் முக்கியம்

நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வு களையே நாம் திரைப்படங்களாகப் பார்க்கிறோம். ஒரு கதைக்கருவை நீங்கள் கையிலெடுக் கும் விதமும், உங்கள் பார்வையும், பாணியும் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். திரைத்துறை சார்ந்து இயங்குபவர்கள் நிறைய வாசிக்க வேண்டும், பயணம் செய்ய வேண்டும். நிறைய மனிதர்களைச் சந்தித்து, அவர்களின் குணங்களை, வாழ்க்கையை உள்வாங்க வேண்டும். அவையெல்லாம் உங்கள் படைப்பில் ஏதோ ஓரிடத்தில் நிச்சயம் பயன்படும், வெளிப்படும்.

முயற்சி உடையாள் - 9 - திரைத்துரையில் தடம்பதிக்கலாம் - வழிகாட்டுகிறார் இயக்குநர் ஹலீதா ஷமீம்

வருமானத்துக்கான வாய்ப்புகளை யோசியுங்கள்

சினிமா என்பது நிரந்தர வருமானம் இல்லாத ஒரு துறை. ஒரு வெற்றிப்படம் கொடுத்தாலும், உடனே அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. எனவே தொடர்ந்து வருமானம் ஈட்டுவதற்கான வழிகளையும் யோசியுங்கள். இயக்குநராகும் கனவுடன் வந்திருக் கிறேன், இயக்குநருக்கான பணியை மட்டுமே செய்வேன் என்றில்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். என்னுடைய திரைப்படத்துக்கான பணிகள் இல்லாதபோது, திரைத்துறை சார்ந்த மொழி பெயர்ப்பு, ஆடிஷன் போன்ற பணிகளைச் செய்ய நான் தயங்கியதில்லை. இத்தகைய கூடுதல் பணிகளைத் தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் திரைத்துறையில் உங்களால் நீண்டகாலம் பயணம் செய்ய இயலும்.

இடம், பொருள், சூழலுக்குப் பழகுங்கள்

திரைப்பட வேலைகளுக்காக நீங்கள் பல இடங்களுக் குப் பயணிக்க வேண்டியிருக்கும். எல்லா இடங்களிலும் முறையான கழிவறைகள், குளியலறைகள் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள வீடுகளில் அனுமதி பெற்று கழிவறையைப் பயன்படுத்தும் சூழலை நான் எதிர் கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போது திரைத்துறை யில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப் பதால் அடிப்படை வசதிகள் அதிகரித்துள்ளன என்று சொல்லலாம். இன்னும் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரும்போது, குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை, குழந்தைகள் விளையாடும் இடம் போன்றவையெல்லாம் உருவாக வாய்ப்புகள் அதிகம். எல்லா சூழலிலும் உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாதவர்கள் கதை கேட்கவோ, அல்லது தொழில் சார்ந்த வேலைகளுக்கோ உங்களை ஓரிடத்துக்கு வரச்சொன்னால் கவனமாக இருங்கள். காவலன் ஆப் போன்ற பாதுகாப்பு ஆப்களை மொபைலில் வைத்துக்கொள்வது நல்லது.''

- சாதிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism