Published:Updated:

நெருப்பாற்றில் நீந்தி சாதித்த ஆனி... குழந்தையுடன் கைவிடப்பட்டவர் எஸ்.ஐ ஆன கதை!

ஆனி சிவா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனி சிவா

துன்பத்தை மட்டுமே சந்தித்து வந்த சமுதாயத்திலிருந்து முதல் முறையாகக் கிடைக்கும் இந்தப் பாராட்டும் மகிழ்ச்சியும், புது அனுபவமாக இருக்கிறது

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சப் இன்ஸ்பெக்டர் ஆனி சிவா. கடந்த ஜூன் 25-ம் தேதி வர்க்கலா காவல் நிலைய எஸ்.ஐ-யாகப் பதவி ஏற்றவர், “முன்பு நான் ஐஸ்க்ரீம், எலுமிச்சை ஜூஸ் விற்ற அதே ஏரியாவில் இன்று எஸ்.ஐ-யாக வந்து நிற்கிறேன்” என்று தன் முகநூலில் பதிவிட்டது வைரலாக, அவரது போராட்டக் கதை வெளிச்சத்துக்கு வந்தது.

கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, தான் காதலித்தவரை பெற்றோரின் எதிர்ப்பை யும் மீறி திருமணம் செய்து கொண்டார் ஆனி. கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்தபோது, ஆனியையும் அவரின் எட்டு மாதக் கைக் குழந்தையையும் அநாதரவாக விட்டுவிட்டு அவர் கணவர் சென்றுவிட்டார். அதன் பிறகு, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வேலை, வீடு வீடாகச் சென்று மசாலாப் பொருள்கள் விற்பனை, வர்க்கலா பீச்சில் ஐஸ்க்ரீம், எலுமிச்சை ஜூஸ் விற்பனை என ஆனி தனக்கும் தன் குழந்தைக்கும் பசியாற்ற எடுத்த முயற்சிகள் பல. கிட்டத்தட்ட 14 ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு, இன்று ஆனியின் வாழ்க்கை நமக்கு சப் இன்ஸ்பெக்டராக அறிமுகப்படுத்துகிறது. நெருப்பாற்றில் நீந்திக் கரை சேர்ந்திருக்கும் ஆனி சிவாவிடம் பேசினோம்.

“துன்பத்தை மட்டுமே சந்தித்து வந்த சமுதாயத்திலிருந்து முதல் முறையாகக் கிடைக்கும் இந்தப் பாராட்டும் மகிழ்ச்சியும், புது அனுபவமாக இருக்கிறது’’ என்று பேசத் தொடங்கினார் ஆனி.

நெருப்பாற்றில் நீந்தி சாதித்த ஆனி... குழந்தையுடன் கைவிடப்பட்டவர் எஸ்.ஐ ஆன கதை!

``வயதின் வேகத்தில் அறிவு வேலை செய்யவில்லை. 18 வயதில் காதல் திருமணம் செய்தேன். கைக்குழந்தையோடு அவர் என்னை விட்டுச் சென்றபோது, என் அம்மாவும் அப்பாவும் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘படிப்பை வைத்து பிழைத்துக்கொள்ளட்டும்’ என்று சொல்லி விட்டார் அப்பா. ஆனால், அப்போது நான் அந்தப் படிப்பை முடிக்கக்கூட இல்லை. பாட்டி வீட்டில் சில மாதங்கள் தங்கி வீடு வீடாக சமையல் மசாலாப் பொருள்களும் சோப்பும் விற்றேன். அது தோல்வியில் முடிய, லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வேலையை சில நாள்கள் பார்த்தேன். ஒருவரிடம் பாலிசி கேட்கச் சென்றபோது, ‘நான் சொல்வதைக் கேள், இப்போதே ஐம்பதாயிரம் பாலிசி எடுக்கிறேன்’ என்று ஆபாசமாகப் பேசினார். அழுதுகொண்டே அங்கிருந்து வந்து விட்டேன்.

அந்தக் காலகட்டத்தில் அறிமுகமான ஓர் அக்காவும் நானும் சேர்ந்து, வர்க்கலா பீச்சில் எலுமிச்சை ஜூஸ், ஐஸ்க்ரீம் விற்கிற கடையைத் தொடங்கினோம்.

ஒருநாள் அந்த அக்காவின் கணவர் குடித்துவிட்டு வந்து, எங்கள் சேமிப்பை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். மீண்டும் உடைந்துபோனேன்” என்றவர் தொடர்ந்து பகிர்ந்த சம்பவங்கள், தனித்து வாழும் ஒரு பெண்ணிடம் இந்தச் சமூகம் எந்தளவுக்குக் கோர முகம் காட்டுகிறது என்பதற்கு மற்றொரு வாக்குமூலம்.

‘‘குழந்தையுடன் தனியாக இருந்த எனக்கு, யாரும் வீடுகொடுக்க முன்வரவில்லை. அப்போது ஒரு பெண், அவர் வீட்டில் ஒரு போர்ஷனை எனக்கு வாடகைக்குத் தந்தார். அவரின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார். விடுமுறைக்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவரின் கணவர், வந்த மறுநாளே தன் மனைவி மொபைலில் இருந்து எனக்கு போன் செய்து வக்கிரமாகப் பேசினார். இப்படி வாழ்க்கை முழுக்கப் பல அனுபவங்கள். தற்கொலைவரை கூட யோசித்திருக்கிறேன்.

வறுமை, குழந்தை என ஏற்கெனவே தவித்துக் கொண்டிருந்த எனக்கு, ஆண்களின் கண்களின் இருந்து தப்புவதும் பெரும் போராட்டமாகிப் போக, என் தலைமுடியை பாய் கட் செய்துகொண்டேன். ஏற்கெனவே ஸ்போர்ட்ஸில் இருந்த ஆர்வத்தால் பேன்ட், ஷர்ட் உடை பழகிய எனக்கு, ஹேர் கட்டும் சேர்ந்தபோது பார்வைக்கு ஆண் போலவே ஆனேன். சொல்லப் போனால், பஸ்ஸில் செல்லும் போது பெண்கள் அருகில் அமர்ந்தால் அவர்கள் என்னை அதிர்ந்து பார்ப் பார்கள். ‘நான் பெண்தான்...’ என்றதும் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்’’ என்று சிரிக்கும் ஆனி, தன் மகனை வளர்க்கப்பட்ட கஷ்டங் களைச் சொல்லும்போது குரல் உடைகிறார்.

‘‘நான் படிப்பு, பசி, வேலை என்று அலைந்துகொண்டே இருந்தபோது, என் மகன் சிவ சூர்யாவிடம் விளையாட்டாகப் பேசி, சிரித்த பொழுதுகள் என்பதே இல்லாமல் போனது. அதனால் அவன் இரண்டு வயது வரை பேசவே இல்லை. வீடு கிடைக்காமல் திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு நாள்கள் நானும் என் குழந்தையும் உறங்கி யிருக்கிறோம். விளையாட்டுப் பொருள் களைக் கண்டால், என் பிள்ளை என்னிடம் வாங்கித் தரச்சொல்லி கை நீட்டியது இல்லை. ஆனால், உணவுப் பொருள்களைக் கண்டால் அழ ஆரம் பித்துவிடுவான். அந்தளவுக்குப் பசியின் கொடுமையை அனுபவித்திருக்கிறான், அனுபவித்திருக்கிறோம். அவனுக்குச் சாப்பாடு கொடுக்க முடியாத நாள்களை எல்லாம் கடந்திருக்கிறேன்’’ என்று கலங் கும் ஆனியை, அவர் பையன் ‘அப்பா’ என்றுதான் அழைக்கிறார்.

‘‘ஒருமுறை விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படம் பார்த்தபோது, படத்தில் அவர் மகள் அவரை அப்பா என்று அழைப்பதைப் பார்த்த என் பையன், அதிலிருந்து என்னையும் ‘ப்பா’ என்று அழைக்க ஆரம்பித்தான். பேன்ட், ஷர்ட், ஹேர்கட் என்றிருந்த அம்மாவை, அப்பா என்று அழைக்க அவனுக்குத் தோன்றியிருக்கலாம். நானும் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுட்டேன். இப்போதுவரை என்னை ‘அப்பா குட்டா’ என்றுதான் அழைக்கிறான். ஏழாம் வகுப்புப் படிக்கும் அவனையும் என்னை யும் சேர்த்துப் பார்ப்பவர்கள், அண்ணன், தம்பியா என்று கேட்பார்கள்’’ என்ற ஆனி, கஷ்ட காலத்திலிருந்து காக்கி உடையை வந்தடைந்த பாதையைப் பகிர்ந்தார்.

‘‘இந்த எஸ்.ஐ வேலையும் போராடிக் கிடைத்தது தான். 2014-ல், என் தூரத்து உறவினர் ஷாஜி சேட்டன், கேரளத்தில் நேரடி மகளிர் எஸ்.ஐ தேர்வு நடப்பதாகச் சொன்னார். தேர்வுக்கு ஒன்றரை மாதமே இருந்தது. மகன் அரசுப் பள்ளியில் படித்த தால், அவனுக்கு அங்கேயே மதிய உணவு கிடைத்து விடும். எனவே, அவனைப் பற்றிய கவலை கொஞ்சம் குறைந்திருந்தது. அந்த ஒன்றரை மாதமும் தினமும் 20 மணி நேரம் படித்து, எஸ்.ஐ தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றேன். அதே வருடம், கான்ஸ்டபிள் தேர்விலும் வெற்றி பெற்றேன். 2016-ல் கான்ஸ்டபிள் வேலை கிடைத்தது.

நெருப்பாற்றில் நீந்தி சாதித்த ஆனி... குழந்தையுடன் கைவிடப்பட்டவர் எஸ்.ஐ ஆன கதை!

ஆனால், 2014-ல் எழுதிய எஸ்.ஐ தேர்வில் வெற்றி பெற்றும் அரசின் பணி நியமன நடைமுறைகளில் இருந்த சில சிக்கல்களால் அந்தப் பணியில் சேர முடியவில்லை. ஐந்து வருடங்கள் சட்டப் போராட்டம் நடத்தினேன். சுப்ரீம் கோர்ட் வரை சென்றேன். ஒருவழியாக 2019-ல் எஸ்.ஐ போஸ்டிங் போட்டார்கள். பத்து மாதங்கள் பயிற்சி முடித்து, கொச்சி சென்ட்ரல் ஸ்டேஷனில் எஸ்.ஐ போஸ்டிங் கிடைத்தது. கடந்த ஜூன் 25-ம் தேதி வர்க்கலாவில் போஸ்டிங். என் மகன் கொச்சியில் படிப்பதால் அங்கேயே போஸ்டிங் வேண்டி கோரிக்கை வைக்க, இப்போது மீண்டும் கொச்சியிலேயே போஸ்டிங் போட்டிருக்கிறார்கள்” என்ற ஆனி சமூக வலைதளத் தில் வைரலான பின்னர் மோகன்லால், சுரேஷ்கோபி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் முதல் பல தரப்பின ரிடமும் இருந்து அவருக்கு வாழ்த்து குவிந்திருக்கிறது.

“நான் அனுபவித்த கொடுமைகளுக்கு எல்லாம் இந்தச் சமூகம்தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு பெண் பாதுகாப்பின்மையால் தவிக்கும் தவிப்பை நான் அறிவேன். எனவே, இந்த காக்கி உடையில் அப்படிப்பட்ட பெண்களுக்கு உதவுவதை என் முதன்மைக் கடமையாக ஏற்பேன். ஒரு பொது இடத்தில் ஒரு பெண் அமர்ந்திருக்கும் விதத்தைப் பார்த்தாலே அவருக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று என்னால் அறிந்துகொள்ள முடியும். அவரிடம் சென்று, விசாரித்து, உதவுவேன். பணி என்பதையும் தாண்டி, இதை என் சமூகக் கடமையாக நினைக்கிறேன்’’ என்று உளப்பூர்வமாகச் சொல்கிறார் ஆனி. 32 வயதில் முழு நம்பிக்கை திரட்டி எழுந்து நிற்கும் ஆனிக்கு வாழ்த்துகள்!