Published:Updated:

அடங்க மறு - 4 - அரை நூற்றாண்டுக்கு முன்... அமெரிக்காவை உலுக்கிய ஒருத்தி!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்... - சமத்துவப் போராளி ரோசா பார்க்ஸ் (Rosa Parks) 1913-2005

அடங்க மறு - 4 - அரை நூற்றாண்டுக்கு முன்... அமெரிக்காவை உலுக்கிய ஒருத்தி!

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்... - சமத்துவப் போராளி ரோசா பார்க்ஸ் (Rosa Parks) 1913-2005

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா


உலகமே வியந்து பார்க்கும் நாடு... ‘யு.எஸ்’ என்று அழைக்கப்படும் அமெரிக்கா. ஆனால், அந்த நாட்டில் நிலவும் இனப்பாகுபாடு, உலகமே வெறுப்புடன் பார்க்கும் கேவலமான ஒரு விஷயம்.

1940-களில், மான்ட்கோமரி (Montgomery) பேருந்து நிறுவனம், ‘ஆப்பிரிக்க -அமெரிக்க இன மக்கள், பின்கதவு வழியாக மட்டுமே பேருந்தில் ஏற வேண்டும்; கடைசி வரிசை இருக்கைகளில்தான் அமர வேண்டும்; வெள்ளையர்கள், முன்கதவு வழியாக ஏறி பேருந்தின் மத்தியப்பகுதி வரையிலும் அமரலாம். கூடுதலாக வெள்ளையர்கள் ஏறினால், பின்பகுதியிலிருக்கும் அமெரிக்க - ஆப்பிரிக்க இன மக்கள் எழுந்து இடமளிக்க வேண்டும்; ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை வாகன ஓட்டிகளாக நியமிக்க முடியாது’ என்றெல்லாம் அறிவித்தது.

சட்டபூர்வமான இந்தக் கொடுமைகளைத் தாண்டி, பலவிதமான வன்முறை களையும் வெள்ளைக்கார வாகன ஓட்டிகள் செய்துவந்தனர். பேருந்தி லிருந்து அடித்து வெளியேற்றுவது, ஆளரவமற்ற இடங்களில் இறக்கி விட்டுச் செல்வது என்று அந்தக் கொடுமைகளின் பட்டியல் வெகு நீளம்.

இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக பெண்ணொருத்தியின் குரல், அரை நூற்றாண்டுக்கு முன்பே ஓங்கி ஒலித்தது. அவர்... ரோசா பார்க்ஸ்.

அமெரிக்க அரசியல் சாசனத்தின் 13-வது சட்டத் திருத்தம், அடிமைமுறையை நீக்கி விட்டது என்றாலும், இனவெறியில் ஊறிப்போயிருந்த வெள்ளைக்காரர்கள், ஆப்பிரிக்க - அமெரிக்க இன மக்களை சமமாக நடத்துவதற்கு மனதளவில் தயா ராகவே இல்லை. அவர்களுக்கு எதிரான கறுப்பு விதிகளை உருவாக்கி, அந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவிடாமல் சட்டங்கள் போட்டே தடுத்தனர். அவர்கள் எங்கெங்கு வேலை செய்யலாம்; என்ன சம்பளம் என்பதையெல்லாம் அந்த அடக்கு முறை சட்டங்களே தீர்மானித்தன. அவர்களை வாக்குரிமையற்ற பிரஜைகளாக்கியதோடு, பொது இடங்களில் அவர்களைப் பிரித்தாளவும் சட்டபூர்வமாகவே வழி வகைகள் செய்தனர் வெள்ளை இன வெறியர்கள்.

கு கிளக்ஸ் க்ளான் (Ku Klux Klan - KKK) என்ற ரகசிய வெள்ளை இன வெறிச்சங்கம், அமெரிக்காவின் தென்பகுதியில் ஆப்பிரிக்க - அமெரிக்க இன மக்களை வாழ விடாமல் வெறியாட்டம் நடத்தியது. இருப்பிடங்களையும் பள்ளிக்கூடங் களையும் அடித்து நொறுக்கியது. பெண்களை வன்புணர்வு செய்தது. எதிர்த்துக் கேட்ட இளைஞர்களை, தூக்கில் தொங்க விட்டது. பொது பூங்காக்களில் அனுமதி மறுக்கப்பட்டது. உணவகங்களும் தியேட்டர் களும் இனவாரியாக பிரிக்கப்பட்டன. ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் தங்கும் இடங்கள், கழிவறைகள், மின்தூக்கிகள், கேளிக்கை பூங்காக்கள் என எல்லா இடங் களிலும் இந்த மக்களுகக்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன. தனி சுடுகாடுகளும்கூட!

அடங்க மறு - 4 - அரை நூற்றாண்டுக்கு முன்... அமெரிக்காவை உலுக்கிய ஒருத்தி!

இத்தகைய கொடும்சூழல் நிலவிய காலகட்டத்தில் ஆசிரியர் அம்மாவுக்கும், தச்சர் அப்பாவுக்கும் மகளாகப் பிறந்தார் ரோசா. ரோசாவின் கொள்ளுத் தாத்தா, ஐரிஷ் இனத்தவர். கொள்ளுப்பாட்டி, அமெரிக்கப் பழங்குடியின அடிமை. தன் பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு, தாயுடன் வசிக்கத் தொடங்கியபோதுதான், பிறப்பால் தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் அவமானத்துக்குள்ளாவதை உணரத் தொடங்கினார் ரோசா.

அலபாமா மாநிலத்தில் ஆசிரியர் கல்லூரி யில் பயின்ற ரோசா, பேருந்துகளில் பயணித்த போதுதான் ‘கறுப்பர் உலகம், வெள்ளையர் உலகம்’ என உலகம் இரண்டாக இருப்பதை உணர்ந்தார்.

1932-ல் ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களின் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கத்தின் (NAACP) உறுப்பினரான ரேமண்ட் பார்க்ஸை மணந்த ரோசா, உள்நாட்டு உரிமைகள் இயக்கத்தின் அலபாமா பகுதி செயலாளராக, அவ்வியக்கத்தின் தலைவரான எட்கர் நிக்சனுடன் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

அலபாமாவைச் சேர்ந்த ரெஸி டெய்லர் கூட்டு வன்புணர்வு வழக்கின் புலனாய்வில் சிறப்பாகப் பணியாற்றியவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பாலியல் வழக்குகள் தொடர்பான புலனாய்வுகளில் ஈடுபட்டார். 1940-களில் பெண் வாக்காளர்களின் அமைப்பை உருவாக்கி ஆப்பிரிக்க - அமெரிக்க இனப் பெண்களுக்கு மட்டுமல்லாது, வெள்ளையின ஏழைப் பெண்களுக்கான வாக்குரிமைக்காகவும் பாடுபட்டார்.

1943-ம் ஆண்டு. அரசுப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார் ரோசா. பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு இருக்கையில் அமரச் சென்றபோது, ‘நகரப்பேருந்து விதிப்படி நீ கீழே இறங்கிச்சென்று பின்வழியில் உள்ளே வர வேண்டும்’ என்றார் ஓட்டுநர் ஜேம்ஸ். ஆனால், கீழே இறங்கி பின்வழியில் பேருந்துக்குள் ஏறுவதற்குள் பேருந்தைக் கிளப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் ரோசாவின் மனதில் ஆறாத வடுவாக பதிவானது. இனி, ஜேம்ஸ் ஓட்டும் பேருந்தில் ஏறுவதில்லை என அப்போது முடிவெடுத்தார்.

அடங்க மறு - 4 - அரை நூற்றாண்டுக்கு முன்... அமெரிக்காவை உலுக்கிய ஒருத்தி!

காலம் உருண்டோடியது. 1955, டிசம்பர் மாதம். மாலை 6 மணி. கிளீவ்லாண்ட் அவென்யூ வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் ஏறிய ரோசா, ஏற்கெனவே தன்னை அவமதித்த ஜேம்ஸ்தான் அதன் ஓட்டுநர் என்பதைக் கவனிக்கவில்லை. அடுத்த நிறுத்தத்தில் நிறைய வெள்ளையினப் பெண்கள் பேருந்தில் ஏறினர். அவர்களுக்கு இருக்கைகளை கொடுக்கும்படி உத்தரவிட்டார் ஜேம்ஸ். ஆப்பிரிக்க - அமெரிக்க இனப்பெண்கள் அனைவருமே எழுந்து நிற்க, ரோசா மறுத்தார்.

அதே 1955-ம் ஆண்டில், ‘வெள்ளையினப் பெண்ணை அவமானப்படுத்திவிட்டார்’ என்று குற்றம்சாட்டப்பட்டுக் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட 14 வயது எம்மெட் டில் என்ற தங்கள் இனச் சிறுவனின் நினைவு வந்தது ரோசாவுக்கு. அதேநேரம், ஓட்டுநர் ஜேம்ஸ், போலீஸுக்குத் தகவல் சொல்ல, ரோசா கைது செய்யப்பட்டார். பத்து டாலர் அபராதமும் நான்கு டாலர் செலவுத் தொகை யும் தரவேண்டுமென உத்தரவிட்டது நீதி மன்றம். ரோசா மேல்முறையீடு செய்ததன் எதிர்விளைவு, அவருக்கும் கணவருக்கும் வேலை பறிபோனது.

இத்தகைய சூழல், அந்த இன மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, அலபாமா கல்லூரி பேராசிரியர் ஒருவரின் முயற்சி காரணமாக, ‘பேருந்து புறக்கணிப்புப் போராட்டம்’ ஆரம்பமானது. அந்த இன மக்களுக்கான மத ஆலயங்களும் இதில் தங்களை இணைத்துக் கொண்டன.

`ஆப்பிரிக்க - அமெரிக்க இன ஓட்டுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்; மக்களை கண் ணியத்தோடு நடத்த வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, திங்கட் கிழமை ஒருநாள் மட்டும் அந்த நிறுவனத்தின் பேருந்துகளைப் புறக்கணிக்க முடிவெடுத்தனர் மக்கள். ஆப்பிரிக்க - அமெரிக்க இன ஓட்டுநர் களுடைய வாடகை காரில் பயணித்தனர். 40,000 பேர் நடந்தே வேலைக்குச் சென்றார்கள். சிலர், வேலை செய்யும் இடத்துக்குச் செல்வதற் காக, 20 மைல் தூரம் வரையிலும்கூட நடந்தார்கள். ஒரேயொரு நாள் பேருந்து புறக்கணிப்பு என்று திட்டமிடப்பட்டிருந் தாலும், மக்களின் பேரெழுச்சி காரணமாக... ஓராண்டைத் தாண்டியும் போராட்டம் தொடர்ந்தது. ஆம், 381 நாள்களாக மக்கள் ஆதரவளித்தனர். பிற வாகனங்களிலும், நடந்தும் பணிக்குச் செல்வதைத் தொடர்ந்தனர்.

அடங்க மறு - 4 - அரை நூற்றாண்டுக்கு முன்... அமெரிக்காவை உலுக்கிய ஒருத்தி!

இந்த விஷயம் நாடு கடந்து உலகம் முழுக்கவே பரவி, ரோசா... பெருமையோடு பார்க்கப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் அமெரிக்க உள்நாட்டு உரிமைகள் இயக்கத்தின் தலைவர் எட்கர் நிக்சன் ஆகியோர், ‘மான்ட்கோமரியின் மிகச் சிறந்த பிரஜை’ என்று ரோசாவைப் பாராட்டி னார்கள்.

ரோசாவின் மேல்முறையீட்டு வழக்கை, வேண்டுமென்றே தாமதப்படுத்தியது நீதி மன்றம். எத்தனை நாள்களுக்குத்தான் பேருந்தில் செல்லாமல் இருப்பார்கள் என்று நினைத்தது நீதிமன்றம். ஆனால், 381 நாள்களாக புறக்கணிப்புத் தொடரவே, பேருந்துகள் ஷெட்டில் நின்றன. வணிகரீதியாக அந் நிறுவனங்கள் கையைச் சுட்டுக்கொண்டன. இறுதியாக, ‘பேருந்துகளிலும், பொது இடங் களிலும் நடைபெறும் இன ஒதுக்கல்கள், அரசியல் சாசனத்திற்கு எதிரானவை’ என்று அறிவித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம். மக்கள் உரிமைக்கான இயக்கத்தின் அடையாளமானார் ரோசா.

டெட்ராய்ட் நகரில் வீடுகள் வழங்குவதில் இருந்த இன ஒதுக்கல் தொடங்கி, தன் இன மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ரோசா, 92-வது வயதில் மரணமடைந்தார். அன்றைய தினம் டெட்ராய்ட் மற்றும் மான்ட் கோமரி நிறுவன நகரப் பேருந்துகளின் முன் வரிசை இருக்கைகள், மறைந்த ரோசாவுக் கென பதிவு செய்து, தங்களது அஞ்சலியைத் தெரிவித்தன அந்தப் பேருந்து நிறுவனங்கள். ரோசா புதைக்கப்பட்ட வுட்லான் கல்லறை, ‘ரோசா எல். பார்க்ஸ் சுதந்திரக் கல்லறை’ என்று அழைக்கப்படுகிறது. டெட்ராய்டின் 12-வது தெரு ‘ரோசா பார்க்ஸ் பொலிவாட்’ என்று இன்றைக்கும் அழைக்கப்படுகிறது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ரோசா வின் பெயரில் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. மிச்சிகனில் அமைந்துள்ள பெருமைக்குரிய பெண்களின் அரங்கில் ரோசா பார்க்ஸின் மக்கள் உரிமைப் போராட் டத்தை கௌரவிக்கும் வகையில் அவருடைய புகைப்படம் பதிக்கப்பட்டுள்ளது.

`சமத்துவம்' என்கிற சொல் இருக்கும் வரைக்கும், வரலாற்றில் நீடித்து நிலைத் திருப்பார் ரோசா.

போர் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism