Published:Updated:

“சிரமம் இல்லாத வேலை ஏதாச்சும் இருக்கா சாரே?” - பிரமிக்க வைக்கும் ரயில் ஓட்டுநர் கொரேத்தி

கொரேத்தி
பிரீமியம் ஸ்டோரி
கொரேத்தி

நம்மைப் பார்த்து பெண்கள் பலரும் ரயில்வே வேலைக்கு வந்தா நல்லதுதானே...’னு தோணின அந்த எண்ணம்தான், இத்தனை காலமா என்னை நம்பிக்கையோடு இயக்கிட்டிருக்கு

“சிரமம் இல்லாத வேலை ஏதாச்சும் இருக்கா சாரே?” - பிரமிக்க வைக்கும் ரயில் ஓட்டுநர் கொரேத்தி

நம்மைப் பார்த்து பெண்கள் பலரும் ரயில்வே வேலைக்கு வந்தா நல்லதுதானே...’னு தோணின அந்த எண்ணம்தான், இத்தனை காலமா என்னை நம்பிக்கையோடு இயக்கிட்டிருக்கு

Published:Updated:
கொரேத்தி
பிரீமியம் ஸ்டோரி
கொரேத்தி

கொரேத்தி... கேரளாவின் ஆச்சர்ய முகம். நமக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் ரயில் பயணம், ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிரைக் காக்கும் பொறுப்பிலுள்ள ரயில் ஓட்டுநர்களுக்கு மிகச் சவாலான பணி. கால் நூற்றாண்டாக இந்தப் பொறுப்பை உற்சாகம் குறையாமல் செய்துவரும் கொரேத்தி, தென்னக ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் ஒரே பெண் லோகோ பைலட். அவர் பணியாற்றும் ரயில்வே துறையில் சிறப்பு அனுமதி பெற்று, எர்ணாகுளம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவரை சந்திக்கக் காத்திருந்தோம்.

அடுத்தடுத்து ரயில்கள் கடந்ததும் நம்மை நோக்கி வந்தவர், “சாரே... நேத்து எர்ணாகுளம் - ஷொரனூர் ரூட்ல டியூட்டி. தொழில்நுட்ப கோளாறால ரயில் நடுவழியில நின்னுடுச்சு. ஏழு மணி நேரம் தாமதமாகி, அதிகாலையில மூணு மணிக்குத்தான் வீட்டுக்குப் போனேன். உங்களைக் காக்க வெச்சதுக்கு ஸாரி...” - கனிவான பேச்சுடன் நம்மை வரவேற்கிறார் கொரேத்தி.

“சிரமம் இல்லாத வேலை ஏதாச்சும் இருக்கா சாரே?” - பிரமிக்க வைக்கும் ரயில் ஓட்டுநர் கொரேத்தி

``எர்ணாகுளம் மாவட்டத்திலிருக்கிற வரப்புழாதான் என் சொந்த ஊர். டிப்ளோமா முடிச்சுட்டு கவர்ன்மென்ட் வேலைக்கு முயற்சி பண்ணிகிட்டே, ஐ.டி.ஐ-யில பயிற்சியாளரா வேலை செஞ்சேன். 24 வருஷங்களுக்கு முன்னாடி அசிஸ்டன்ட் லோகோ பைலட்டா ரயில்வே துறையில வேலை கிடைச்சது. ஆரம்பத்துல ரொம்ப சிரமமா இருந்துச்சு. வேற வேலைக்குப் போயிடலாம்னு நினைச்சு, தீவிரமா முயற்சி செஞ்சேன். அப்போ, ரயில்வே துறையில திரும்பின பக்கமெல்லாம் ஆண்கள்தான்.

‘நம்மைப் பார்த்து பெண்கள் பலரும் ரயில்வே வேலைக்கு வந்தா நல்லதுதானே...’னு தோணின அந்த எண்ணம்தான், இத்தனை காலமா என்னை நம்பிக்கையோடு இயக்கிட்டிருக்கு. நான் அசிஸ்டன்ட் லோகோ பைலட்டா இருந்த எட்டு வருஷத்துல, ஆண் பைலட்டுகளுடன் மட்டுமே இணைஞ்சு வேலை செஞ்சேன். அவங்க எல்லோர்கிட்டயும் நிறைய அனுபவங்களைக் கத்துக்கிட்டேன்” என்கிறவர், உதவி லோகோ பைலட் பணிக்குப் பிறகு, ஷன்டிங் லோகோ பைலட், சரக்கு ரயில் லோகோ பைலட், பயணிகள் ரயில் லோகோ பைலட் ஆகிய படிநிலைகளைக் கடந்து, தற்போது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் லோகோ பைலட்டாகப் பணியாற்றுகிறார்.

“எங்களுக்குத் திட்டமிட்ட வேலை நேர மெல்லாம் இருக்காது. ரெண்டு மூணு நாள் களெல்லாம் இடைவிடாம டியூட்டி பார்த்த அனுபவமும் உண்டு. இப்போ, எர்ணாகுளம் - திருவனந்தபுரம், எர்ணாகுளம் – ஷொரனூர், எர்ணாகுளம் – குருவாயூர் ஆகிய வழித்தடங் களுக்கிடையே மாறி மாறி எனக்கு டியூட்டி இருக்கும். அவசர நேரத்துல திடீர்னு வேற ரூட்லயும் ரயிலை இயக்கச் சொல்லுவாங்க. நாங்க சாப்பிடவும் தூங்கவும் நேரங்காலமெல் லாம் கிடையாது. ரயில் இன்ஜின்ல சராசரியா 40 டிகிரி வெப்பம் தகிக்கும். புதுசா பொருத்தப் படுற இன்ஜின்கள்ல மட்டும்தான் ஏ.சி இருக்கும். அதனால, பெரும்பாலான நேரம் உஷ்ணத்தோடுதான் டிரைவ் பண்ணுவோம்...” வியர்வையைத் துடைத்தவாறே பணிச்சவால் களை விவரிக்கிறார்.

நம்முடன் அவர் பேசிக்கொண் டிருந்தபோது ஆழப்புழா ரயில் கிளம்பத் தயாராகவே, அந்த இன்ஜினிலிருந்து இறங்கி, மற்றொரு ரயிலுக்குள் நம்மை அழைத்துச் சென்றார். இன்ஜின் பெட்டியில் ஏறி இறங்குவது எளிதல்ல. ஒவ்வொருமுறையும் அதில் ஏறி இறங்கும் போது உடல் சோர்வாகும். இன்ஜின் பகுதியில் (Pilot Room) கழிவறைகள் இருக்காது. இதனால், பணி நேரத்தில் ஏதாவது பெரிய நிலையத்தில் ரயில் சில நிமிடங்களுக்கு நிற்கும்போதுதான், இவர்களால் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியும். மாதவிடாய் காலத்தில் பெண் ஓட்டு நர்கள் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. ரயிலை இயக்கும்போது பெரும்பாலான ஓட்டு நர்களும் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது வருத்தமான உண்மை.

“சிரமம் இல்லாத வேலை ஏதாச்சும் இருக்கா சாரே?” - பிரமிக்க வைக்கும் ரயில் ஓட்டுநர் கொரேத்தி

“இந்தச் சிரமங்களையெல்லயாம் எப்படிச் சமாளிக்கிறீங்க?” என்றதும், “சிரமம் இல்லாத வேலைனு ஏதாச்சும் இருக்கா சாரே?” என்று மென்சிரிப்புடன் தொடர்ந்தார்... “ஓட்டும் போது இன்ஜின் சத்தம் கணீர்னு ஒலிச்சுகிட்டே இருக்கும். அவசர தேவைக்காகச் சிலர் அபாயச் சங்கிலியை இழுப்பாங்க. தொழில் நுட்பக் கோளாறால உதவிக்கு ஆட்கள் எளிதா வர முடியாத இடத்துலகூட ரயில் நின்னுடும். என்ன நடந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் கவனம் சிதறாம வேலை செய்யணும். ஒரு இன்ஜின்ல ஏறிட்டா, பயண தூரம் முடியுற வரைக்கும் லோகோ பைலட் தான் முழு பொறுப்பு. அதனால, பயணிகளின் நலனுக்காக விரைவாகவும் பொறுமையுடனும் சிக்கலைச் சரிசெஞ்சு ரயிலை இயக்கணும். என்னோட டியூட்டியில பெரிசா அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டதில்லை. ஆனா, தற்கொலை செய்துக்க தண்டவாளத்துல சிலர் நிற்பாங்க. விசிலடிச்சு, ஹாரன் அடிச்சு எவ்வளவோ எச்சரிக்கை செஞ்சாலும் சிலர் நகராம ரயில் மோதி இறந்துடுவாங்க. அடுத்த சில தினங் களுக்கு அந்த மரணத்தின் நினைப்பாவே இருக்கும்” - அமைதியாகிறார் கொரேத்தி.

விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவரின் கணவர், தற்போது எர்ணாகுளத்தில் பஞ்சாயத்து அலுவலராகப் பணியாற்றுகிறார். இவர்களின் மூத்த மகள் கல்லூரிப் படிப்புக்குத் தயாராகிறார். இளைய மகள் 11-ம் வகுப்பு படிக்கிறார்.

“லோகோ பைலட்டுக்குக் கீழுள்ள படி நிலைகள் உட்பட பல பிரிவுகள்லேயும் இப்போ நிறைய பெண்கள் வேலை செய்யு றதைப் பார்க்குறப்போ பெருமையா இருக்கு. இந்த வேலையில பாலின பேதமெல்லாம் கிடையாது. பொறுமையோடு ஆத்மார்த்தமா உழைச்சா சிறப்பான வளர்ச்சி உண்டு. பிடிச்ச துறையில வேலை செய்வோம், வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டுவோம்” என்று மகிழ்ச்சியுடன் முடித்தவருக்கு, வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism