Published:Updated:

அடங்க மறு: 11 - சிதைந்த முகமும் சிதையாத கனவுகளும்...

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி | ஓவியம்: ஜீவா

அடங்க மறு: 11 - சிதைந்த முகமும் சிதையாத கனவுகளும்...

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி | ஓவியம்: ஜீவா

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

``அவன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னபோது அவனுக்கு வயது 35, எனக்கு 15. ‘விருப்ப மில்லை’ என்று சொல்லக்கூட அவன் முகம் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி டெல்லி கான் மார்க்கெட் அருகேயுள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நான் காத்திருந்தேன். அப்போது அவனும், அவனுடைய சகோதரனின் மனைவியும் என்மீது அமிலத்தை வீசினார்கள். எரிந்த முகத்தை கைகளால் பொத்திக்கொண்டு கதறினேன். என் முகத்தசைகள் உருகி என் கைகளில் ஒட்டிக்கொண்டு வந்தன. நான் கதறி அழுதபடி அந்த மார்க்கெட் சாலையில் இங்குமங்கும் ஓடினேன். சாலையில் வந்த வாகனங்களில் அடிபட்டு விழுந்தேன். யாரோ ஒருவர் என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, என் வீட்டுக்கும் தகவல் சொன்னார். இரண்டரை மாதங்கள் மருத்துவமனையில் இருந் தேன். என் முகத்தில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். பார்வையைக் காப்பாற்றுவதற்காக நான் சுயநினைவோடு இருந்தபோதே என் கண்களை தைத்து மூடி னார்கள். பலநாள்கள் கழித்து முகம் பார்க்கும் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்... எங்கே போனது, என்னுடைய அந்த அழகான முகம்..? ‘இந்த முகத்தோடு வாழ்வதற்கு பதில் தற்கொலை செய்துகொள்ளலாம்’ என்று அழுதேன்.

கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

அவன் விரும்புவதாக என்னிடம் சொன்ன போதே என் பெற்றோரிடம் நான் அதைச் சொல்லியிருக்க வேண்டும். பயத்தில் மறைத்து விட்டேன். எரிந்துபோன முகத்துடன் இருந்த என்னைப் பார்த்து, ‘என் குழந்தைக்கு ஏனிந்த நிலைமை’ என்று அழுதுகொண்டிருந்தவர் களிடம் நடந்தவை அனைத்தையும் சொன் னேன். அப்போது, என் அப்பா சொன்ன ஒரு வார்த்தையை நான் எப்போதும் மறக்க மாட்டேன். ‘மகளே, உன்னுடைய இந்த முகத்தை ஒருநாள் நீ நேசிக்கத் தொடங்குவாய்'...’’

முகம் சிதைந்தாலும் தன்னம்பிக்கை சிதையாத லஷ்மி அகர்வால் வாழ்க்கையில் நடந்த துயரமான நிஜம் இது. தீபிகா படுகோன் நடிப்பில் 2020-ல் வெளி வந்த ‘சப்பக்’ படம், லஷ்மியின் வாழ்க்கைக் கதையை அடிப்படை யாகக் கொண்டதுதான்.

லஷ்மியின் மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்து நான்கு நாள்களுக்குப் பிறகு போலீஸார் அந்த ஆணை கைது செய்தார்கள். கைதான நான்கே வாரங்களில் ஜாமீனில் வெளியே வந்தவன், திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்து விட்டான். லஷ்மிக்கு நடந்த கொடுமை பற்றி அறிந்த பெண்கள் பலர் டெல்லியெங்கும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆசிட் வீச்சை மிகச் சாதா ரண குற்றமென ஒதுக்கித் தள்ளி குற்ற வாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதி மன்றம் விமர்சனத்துக்குள்ளானது. ஆசிட் வீச்சுக்கு எதிரான தனிச்சட்டம் அது வரை எதுவும் இல்லாத நிலையில், அதற்கென தனிச் சட்டத்தை உருவாக்க தேசிய பெண்கள் ஆணையம் முயன்றது. ஒரு பெண்ணின் மீது திட்டமிட்டு ஆசிட் வீசுவது பாலினம் சார்ந்த குற்றச் செயல் என்பது உரத்துச் சொல்லப் பட்டது.

அடங்க மறு: 11 - சிதைந்த முகமும் சிதையாத கனவுகளும்...

இந்த இடத்தில் காரைக்கால் வினோதினியையும் நினைவுகூர விரும்புகிறேன். சாஃப்ட்வேர் நிறுவன மொன்றில் வேலைபார்த்து வந்த பொறியியல் பட்டதாரி வினோதினியை, அவரின் அப்பாவின் நண்பனும் கட்டடத் தொழிலாளியுமான ஒருவன் காதலித்தான். இதற்கு வினோதினியும், அவள் குடும்பமும் மறுத்தபோதும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். வினோதினியின் குடும்பத்தார் அவன்மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக் கிறார்கள். 2012-ம் ஆண்டு தீபாவளி விடுமுறைக்கு பெற்றோரைப் பார்க்க வந்த வினோதினியின் முகத்தில் ஆசிட் வீசி, தன் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டான் அவன். வினோதினியின் ஒட்டுமொத்த முகமும் பொசுங்கியது. பார்வையும் போனது. எந்தச் சிகிச்சையும் பலனளிக்காமல் வலிகளோடே மரித்துப் போனார் வினோதினி. மகளை இழந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டார் வினோதினியின் அம்மா. சில வருடங்களில் அவரின் அப்பாவும் இறந்து போனார். குற்றவாளிக்கு காரைக்கால் நீதி மன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதிசெய்து சிறையில் அடைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இவை இரண்டும் அமில வீச்சு குறித்து அதிகம் பேசப்பட்ட சம்பவங்கள். பேசப் படாமலேயே, வெளியில் வராமலேயே சம்பந்தப்பட்ட பெண்களோடு கருகி காணாமல் போகும், பதிவு செய்யப்படாத நிகழ்வுகள் எத்தனையோ....

லஷ்மி அகர்வாலின் வழக்கு பதிவு செய்யப்படுகிற வரை ஆசிட் வீச்சு என்பது, ‘கொடுங்காயம் ஏற்படுத்துதல்’ மற்றும் அதற்கான தண்டனை குறித்துப் பேசுகிற பிரிவுகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. நிர்பயா மரணத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டிதான், ஆசிட் வீச்சு குற்றங்களின் கொடூரத்தை உணர்ந்து இந்திய தண்டனைச் சட்டத்தில் புதிய பிரிவுகள் உருவாக காரணமாக இருந்தது. 2013-ம் ஆண்டின் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 A, ‘குற்றம் செய்யும் எண்ணத்தோடு ஒரு பெண் மீது ஆசிட் வீசி கொடுங்காயம் விளை வித்தால் பத்து வருடங்களுக்கு குறையாத சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும்’ என்கிறது. அதே சட்டத்தின் 326 B பிரிவு, ‘ஒரு பெண்மீது ஆசிட் வீசினாலோ, அதற்கு முயன்றாலோ ஐந்து முதல் ஏழு ஆண்டு வரையிலான சிறை தண்டனை யோடு அபராதமும் விதிக்கப்படும்’ என்கிறது.

 ‘சப்பக்’ படத்தில் தீபிகா படுகோன் -  லஷ்மி அகர்வால்
‘சப்பக்’ படத்தில் தீபிகா படுகோன் - லஷ்மி அகர்வால்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் வழக்கில் எட்டு ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆசிட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிகளை உருவாக்கியதோடு, லஷ்மிக்கு மூன்று லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கியது. ஆசிட் வீச்சு வழக்கை மிக மோசமாகக் கையாண்ட அரசைக் கண்டித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு அரசாங்கம் உதவ வேண்டுமென உத்தர விட்டது.

ஆசிட் வீச்சால் உருவத்தையும் வாழ்வையும் தொலைத்த பெண்களின் மறுவாழ்வுக்காகப் பாடுபடும் ‘Chhanv Foundation’ (https://www.chhanv.org) எனும் அமைப்பை உருவாக்கினார் லஷ்மி. பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கில் விரைந்து நீதி கிடைக்கப் போராடினார். அந்த அமைப்பு நடத்திய அத்தனை போராட்டங்களிலும், ‘முகத்தை மூட வேண்டியவள் நான் அல்ல; என்மீது அமிலத்தை வீசியவனே. அவன் அமிலம் வீசியது என் முகத்தில்தான்; என் மன உறுதியில் அல்ல’ என்ற குரல் ஓங்கி ஒலித்தது. லஷ்மியை உலக நாடுகள் கௌரவித்தன. லஷ்மிக்கு, ‘சர்வ தேச வலிமையான பெண்’ விருதை அப்போதைய அமெரிக்க முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா வழங்கினார். லஷ்மியை ‘சிறந்த பெண்மணி’யாக பெண்கள் தினத்தன்று கௌரவித்தது ஐக்கிய நாடுகள் சபை. லஷ்மிக்கு விருந்தளித்து மகிழ்ந்தது, இந்திய அரசு.

அமிலத்தால் லஷ்மியின் முகத்தை மட்டுமே சிதைக்க முடிந்தது, அவனின் கனவுகளை அல்ல..!

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்

****

ஆசிட் வீச்சு... முன்னிலை மாநிலங்கள்!

ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் பெண்களில் பெரும்பான்மையினர் 11-30 வயதுப் பெண்களே...

நிரந்தர முகச்சிதைவு, பார்வை இழப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளின் தசைகளை அசைக்க முடியாமை, நோய்த்தொற்று, ஆயுளுக் கும் தொடரும் மன அழுத்தம் என உடல்ரீதியாக வும், மனரீதியாகவும் அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை.

கழிவறைகளைச் சுத்தம் செய்யும் விலை குறைவான அமில பாட்டில்கள்தான் பெண்களின் வாழ்க்கையைச் சிதைக்க நினைக்கும் ஆண் களுக்கு எளிய ஆயுதங்களாகின்றன.

ஆசிட் வீச்சு நிகழ்வுகள் உலகெங்கிலும் நடக்கின்றன. அதிகபட்ச அமில வீச்சுகள் நிகழ்வது தெற்காசியாவில்.

2016 முதல் 2018 வரை பதிவான அமில வீச்சுகள் மற்றும் அமில வீச்சு முயற்சிகளில் முன்னிலை வகிக்கும் இரு மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என்கிறது தேசிய குற்றப்பதிவு பணியகம்.

அமில வீச்சு அதிகம் நடக்கும் பெரு நகரங் களாக தேசிய குற்றப்பதிவு பணியகம் வெளி யிட்டுள்ள பட்டியலில் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக் கின்றன.