Published:Updated:

``நான் ஏன் அக்காவைப் பார்க்க போகலை தெரியுமா?'' - பகிர்கிறார் நளினியின் தம்பி பாக்கியநாதன்

ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளைச் செய்வது அவருடைய அப்பா வழி உறவினர்களாக இருக்கலாம்!

நளினி
நளினி ( ச. வெங்கடேசன் )

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக 6 மாத பரோல் கேட்டிருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் பிரமுகர்களை சந்திக்கக் கூடாது, ஊடகங்களிடம் பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒரு மாதம் மட்டும் நளினிக்கு பரோல் வழங்கியது. சென்ற வார இறுதியிலிருந்தே, எப்போது வேண்டுமானாலும் நளினி பரோலில் வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி, 'புதன்கிழமையில் (24.7.2019) இருந்து சனிக்கிழமைக்குள் எப்போது வேண்டுமானாலும் நளினி பரோலில் வெளியே வருவார்' என்று சொல்லியிருந்தார். இந்த நிலையில், இன்று (25.7.2019) காலை நளினி பரோலில் வெளியே வந்தார்.

அந்த மாப்பிள்ளை லண்டனில் செட்டிலான இலங்கைத் தமிழராகவும் ஹரித்ராவின் தேர்வாகவும் இருப்பதற்கே நிறைய வாய்ப்பிருக்கிறது. அதன் காரணமாகத்தான், இந்தத் தகவல்கள் எதுவுமே நளினியின் நெருங்கிய சொந்தக்காரர்கள் யாருக்குமே தெரியவில்லை.

நளினியின் நெருங்கிய உறவினர்களுக்குக்கூட அவர் மகள் ஹரித்ரா திருமணம் செய்துகொள்ளும் மணமகன் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. 'நளினி சொன்னால்தான் தெரியும்' என்பதுதான் இந்த விஷயத்தில் அவர்களுடைய வார்த்தைகளாக இருக்கின்றன. அதனால், ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்வது அவருடைய அப்பா வழி உறவினர்களாக இருக்கலாம்.

'நான்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். அதில் ஒருவரை நளினி தேர்ந்தெடுப்பார்' என்பதும் இயல்பானதாகத் தெரியவில்லை. ஒருவரை மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்துவிட்டு, மற்ற மூவரையும் கடைசிக்கட்டத்தில் ரிஜெக்ட் செய்வது என்பதும் அத்தனை நாகரிகமான விஷயம் கிடையாது. இதற்கு எந்த மணமகன் வீட்டாரும் ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள். அதனால், யார் மாப்பிள்ளை என்பது ஏற்கெனவே முடிவான விஷயமாகவே இருக்க முடியும்.

நளினியின் அம்மா பத்மா
நளினியின் அம்மா பத்மா

அந்த மாப்பிள்ளை லண்டனில் செட்டிலான இலங்கைத் தமிழராகவும் ஹரித்ராவின் தேர்வாகவும் இருப்பதற்கே நிறைய வாய்ப்பிருக்கிறது. அதன் காரணமாகத்தான், இந்தத் தகவல்கள் எதுவுமே நளினியின் நெருங்கிய சொந்தக்காரர்கள் யாருக்குமே தெரியவில்லை. தவிர, ஹரித்ராவும் அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கிற மாப்பிள்ளையும் லண்டனில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். வேலூர் வந்து திருமணம் முடித்துக்கொண்டு லண்டன் சென்றுவிடுவார்கள் என்கிறார் நளினியின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.

நளினியின் அம்மா குடியிருக்கும் ராயப்பேட்டை பகுதியிலேயே ஹரித்ராவின் திருமணத்தை நடத்த அனுமதிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அது வி.ஐ.பி-க்கள் வசிக்கும் பகுதி என்பதால் பாதுகாப்பு பிரச்னைகள் வரலாம் என்று மறுக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகுதான் வேலூரில் திருமணத்தை வைத்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள்.

தாய்மாமனா என் அக்கா மகளோட கல்யாணத்துல நான் கண்டிப்பா கலந்துப்பேன்.
நளினியின் தம்பி பாக்கியநாதன்

நளினியின் அம்மா பத்மா, ''ஒரு மாசம் முழுக்க மககூட இருந்து கல்யாண வேலைகளைப் பார்க்கணும்'' என்று சொல்ல, நளினியின் தம்பி பாக்கியநாதனைத் தொடர்புகொண்டோம். ''இன்னும் நான் அக்காவைப் பார்க்கப் போகலைங்க. சனிக்கிழமைதான் கிளம்பணும்'' என்றவர், "அக்காவை நான் எப்பவுமே வெறும் அக்காவா மட்டுமே பார்த்ததில்லைங்க. அவங்க இன்னொரு அம்மாங்க எனக்கு. அப்பாவோட ஈமக்கிரியைக்காக வந்தப்போ அக்காவைப் பார்த்தது. அதோட இப்பதான் பார்க்கப்போறேன். தாய்மாமனா என் அக்கா மகளோட கல்யாணத்துல நான் கண்டிப்பா கலந்துப்பேன்.

நான் சொந்த பிசினஸ் எல்லாம் பண்ணலைங்க. ஒரு இடத்துல வேலைபார்க்கிறேன். டக்குனு 10 நாள் லீவு எடுக்க முடியாது. போன சனிக்கிழமையே அக்கா வந்துடுவாங்கன்னு எதிர்பார்த்தேன். கிட்டத்தட்ட 5 நாள் கழிச்சுதான் வந்திருக்காங்க. அதனால, இன்னிக்கு கண்டிப்பா அக்கா வந்துடுவாங்கன்னு நம்பி என்னால லீவு எடுக்க முடியலை. அந்தக் காரணத்தாலேதான் அக்காவைப் பார்க்கவும் போக முடியலை.

``அக்கா சீக்கிரமே விடுதலையாவாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.''
நளினியின் தம்பி பாக்கியநாதன்

எல்லாத்துக்கும் மேலே நான் தாயில்லாத ஒரு பெண் குழந்தையோட அப்பாங்க. அவளுக்கு ஸ்கூல், கிளாஸ் டெஸ்ட்னு நிறைய விஷயங்கள் இருக்கு. என் மகளைப் பார்த்துக்கணும்; அவளை ஸ்கூலுக்கு கூட்டிட்டிப்போய் விடணும்; அவளுக்கு சமைக்கணும்னு ஒரு அப்பாவா எனக்கு நிறைய கடமைகள் இருக்கு. ஆஃபீஸ்லேயும் லீவு கேட்கணும். சட்டுனு எல்லா பொறுப்பையும் விட்டுட்டுக் கிளம்பிட முடியாது இல்லைங்களா'' என்றவர் தன் அக்கா சார்பாக எல்லோரிடமும் சில வேண்டுதல்களை வைக்கிறார்.

''தன்னோட மகள் திருமணத்துக்காக அக்காவே வாதாடி இந்த பரோலை வாங்கியிருக்காங்க. நீதிமன்றத்தோட கருணையிலதான் இந்த பரோல் கிடைச்சிருக்கு. அதனால, இந்த நேரத்துல அக்கா நீதிமன்றம் சொன்ன கண்டிஷன்களுக்கு உட்பட்டு ஹரித்ராவுக்குத் திருமணத்தை முடிச்சு வைச்சுட்டுக் கிளம்பணும். அப்பதான், அக்கா சீக்கிரமே விடுதலையாவாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.

நளினி
நளினி

இதுக்கு அரசியல் பிரமுகர்களும் மீடியாக்களும் அக்காவைப் பார்க்கிறதை தவிர்த்துட்டா, அவங்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுக்க நான் நன்றிக்கடன் பட்டிருப்பேன்'' - நளினி தம்பியின் குரலில் இனியாவது அக்கா தன்னுடன் இருக்க வேண்டும் என்கிற வாஞ்சை மிகுந்து காணப்படுகிறது.