Published:Updated:

"அவ பக்கத்துல இருக்கும்போதே என் உயிர் போயிடணும்!"- பரோலில் வந்திருக்கும் நளினி குறித்து அம்மா பத்மா

நளினி, பத்மா (நளினியின் அம்மா)
News
நளினி, பத்மா (நளினியின் அம்மா) ( File Photo )

"இன்னைக்கு, நாளைக்குனு இழுத்துட்டே போகுதே தம்பி. அடுத்த பத்து நாள்ல அவ ஜெயிலுக்குத் திரும்பிட்டா மறுபடி அவளைப் பார்க்கற வரைக்கும் ஒவ்வொரு நாளும் ரணம்தான்!"- நளினியின் அம்மா பத்மா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கால் நூறாண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி பரோலில் வந்திருக்கிறார். மகளுடன் அடுத்த சில நாட்களைக் கழிக்க இருக்கும் நளினியின் அம்மா பத்மாவிடம் பேசினேன்.
"நான் பேசற ஒவ்வொரு வார்த்தையும் யாருக்காவது அதிகமாத் தெரிஞ்சா கருணைகூர்ந்து அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க... அளவாப் பேசறதுக்கே இப்ப எங்கிட்டத் தெம்பு இல்ல!"
என பேசத் தொடங்கினார் பத்மா.

"டிசம்பர் 23 ம் தேதி முதல்வர் தனிப்பிரிவுல பரோல் கேட்டு மனு கொடுத்தேன். 'எனக்கு வயசு 80 தாண்டிடுச்சு. இப்பவோ எப்பவோனு இருக்கேன். அதனால வாழ வேண்டிய வயசையெல்லாம் ஜெயில்ல தொலைச்சுட்ட என் மகளுடன் கொஞ்ச நாள் இருக்க ஆசைப்படறேன்'னு மனுவுல எழுதியிருந்தேன். என்னுடைய கண்ணீர் மனு அவரை என்னவும் செஞ்சதோ என்னவோ மறுநாளே அரசாங்கத்துகிட்ட இருந்து சாதகமான பதில் கிடைச்சது. அடுத்த ரெண்டாவது நாள் பரோல்ல வெளியில வந்துட்டா என் பொண்ணு. அந்த உத்தரவு கிடைச்ச அந்தப் பொழுது எனக்கு முதலமைச்சர்தான் கடவுள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நளினி
நளினி

நான் கேட்டதும் என் மகளை அனுப்பி வச்சதுக்கு முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் முதல்ல என் அடிமனசுல இருந்து நன்றியை சொல்லிக்கறேன். இப்ப பொண்ணு கூட வேலூர்ல இருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன். கொரோனா காரணமா கடந்த ரெண்டு வருஷம் பார்க்கவே முடியலை.

ஜெயில்ல இருந்து வெளியில வந்த அந்த நிமிஷம், ‘அப்பா, கடவுளே. என் மகளைத் திரும்பவும் பார்க்க வச்சதுக்கு நன்றிப்பா’னு வானத்தைப் பார்த்து அழுதேன். ஏன்னா, விடியற ஒவ்வொரு நாளும், ‘இன்னிக்கு நமக்கு ஏதாச்சும் ஆகிடுச்சுன்னா? மகளைப் பார்க்காமலே போயிடுவேனா? இப்படி என்னவெல்லாமோ நினைக்கத் தோணுதுய்யா, வயசாகிட்டே போகுதுல்ல.

வீட்டுக்கு வெளியில பத்து போலீஸ்க்கு மேல இருக்கத்தான் செய்றாங்க. ஆனாலும் இந்தா அவளுக்குப் பிடிச்சதைச் சமைச்சுத் தர்றேன். எனக்கு என்ன வேணும்னு அவ சமைச்சுத் தர்றா. அவ மடியில சாஞ்சு தூங்கறேன். என் மடியில அவ தூங்கறா. ஆனாலும் மனசு கண்டதையும் நினைக்குது. இப்பக் கூட விட மாட்டேங்குது.

பத்மா, நளினி
பத்மா, நளினி

சமயத்துல, இப்படி இவ பக்கத்துல இருக்கறப்பவே உயிர் போயிடக் கூடாதான்னு நினைக்கிறேன். இன்னைக்கு, நாளைக்குனு இழுத்துட்டே போகுதே தம்பி. அடுத்த பத்து நாள்ல அவ ஜெயிலுக்குத் திரும்பிட்டா மறுபடி அவளைப் பார்க்கற வரைக்கும் ஒவ்வொரு நாளும் ரணம்தான்'' எனக் கண் கலங்கிய பத்மா சிறு ஆசுவாசத்துக்குப் பின் தொடர்ந்தார்.

"இன்னும் ஒரு வாரத்துக்கு என் மனசு நிறைஞ்சு இருக்கும். இந்த அபலைத் தாய்க்கு இப்படியொரு மகிழ்ச்சியைத் தந்த முதல்வர், அதே மகிழ்ச்சியை எனக்கு மிச்சமிருக்கிற கொஞ்ச நாளைக்கும் கிடைக்கிற மாதிரி செய்யணும். முதல்வர் செய்வார்ங்கிற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு. அவரைத்தான் மலை போல நம்பியிருக்கேன்" என முடித்த பத்மாவின் வார்த்தைகள் மட்டுமல்ல மனமும் முதல்வரின் அந்த ஒரேயொரு செயலை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.