Published:Updated:

தற்கொலை... பிரச்னைகளுக்கான முடிவல்ல, ஆரம்பம்!

நந்தினி
பிரீமியம் ஸ்டோரி
நந்தினி

தற்கொலையில் உயிரிழப் பவர்களின் குடும்பத்தாரின் வலியை, வேதனை யைப் பேசும் இந்தப் புத்தகம், நந்தினியின் சொந்த வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு.

தற்கொலை... பிரச்னைகளுக்கான முடிவல்ல, ஆரம்பம்!

தற்கொலையில் உயிரிழப் பவர்களின் குடும்பத்தாரின் வலியை, வேதனை யைப் பேசும் இந்தப் புத்தகம், நந்தினியின் சொந்த வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு.

Published:Updated:
நந்தினி
பிரீமியம் ஸ்டோரி
நந்தினி

தற்கொலை என்பது வலியிலிருந்து விடுதலை தருவதில்லை, அந்த வலியை வேறொருவருக்குக் கடத்துகிறது என்றொரு பொன்மொழி உண்டு. தற்கொலைக்குத் துணிபவருக்கு அது ஒரு நொடி முடிவு. அவரைச் சார்ந்தவர்களுக்கோ ஆயுள் தண்டனை. தற்கொலையில் உறவை, நட்பை இழந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்திருப்பார்கள்.

நந்தினி முரளியின் ‘லெஃப்ட் பிஹைண்டு - சர்வைவிங் சூசைடு லாஸ்’ புத்தகத்தை வாசித்தால் அது புரியும். தற்கொலையில் உயிரிழப் பவர்களின் குடும்பத்தாரின் வலியை, வேதனை யைப் பேசும் இந்தப் புத்தகம், நந்தினியின் சொந்த வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு.

``உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத் தின்படி ஒவ்வொரு வருஷமும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து உயிரிழக்குறாங்க. ஒவ் வொரு 40 விநாடிக்கும் உலகத்துல ஏதோ ஒரு மூலையில ஒருவர் தற்கொலையில் இறக்கிறார். ஒவ்வொரு 41 விநாடிக்கும் ஒரு குடும்பம் அந்த வலியை அனுபவிக்கத் தள்ளப்படுது, என்னை மாதிரி...’’ புள்ளிவிவரத்தின் சாட்சியாக நிற்கும் நந்தினி முரளி, மதுரையில் வசிக்கும் லைஃப் கோச். பத்திரிகையாளர், எழுத்தாளர்.

``சென்னையிலதான் பிறந்து, வளர்ந்தேன், படிச்சேன். சைக்காலஜி, இங்கிலீஷ்னு ரெண்டு சப்ஜெக்ட்ல போஸ்ட் கிராஜுவேஷன் முடிச் சேன். என் கணவர் டாக்டர் முரளி, பிரபல யூராலஜிஸ்ட் (சிறுநீரக மருத்துவர்). கல்யாணமானபோது அவர் புதுச்சேரி ஜிப்மர்ல ஜெனரல் சர்ஜனா இருந்தார். அப்புறம் டெல்லி எய்ம்ஸ்ல யூராலஜி படிக்க சீட் கிடைக்கவே, நானும் அவர்கூட டெல்லிக் குப் போயிட்டேன்.

தற்கொலை... பிரச்னைகளுக்கான முடிவல்ல, ஆரம்பம்!

யூராலஜி சென்டர் ஆரம்பிக்கப் போறதா சொல்லி, டாக்டர் சேதுராமன்தான் என் கணவரை மதுரைக்குக் கூப்பிட்டார். அங்கேயே செட்டிலாயிட்டோம். முழு மன சோடு என் கணவருக்கு அவருடைய வேலை யில சப்போர்ட் பண்ணிட்டிருந்தேன். கொஞ்சநாள் டீச்சர் வேலை பார்த்தேன். அழகப்பா யுனிவர்சிட்டியில ஜெண்டர் ஸ்டடீஸ்ல பிஹெச்.டி பண்ணினேன். எல்.ஜி.பி.டி கம்யூனிடியோடு வொர்க் பண்றது, எனக்குப் பிடிச்ச விஷயங்களை எழுதுறதுனு ஆக்டிவ்வா இருந்தேன். எங்களுக்கு குழந்தை இல்லை. ஆனாலும், ரெண்டு பேருமே அதை ஒரு குறையா நினைச்சதில்லை. லைஃப் நல்லா போயிட்டிருந்தது. அப்படியே போகும்னுதான் நினைச்சேன். ஆனா...’’ அமைதியாகிறார் நந்தினி. அந்த நிசப்தம் தானாகக் கலைய காத் திருந்தோம். வருடங்கள் கடந்தும் மறையாத வலியை விழுங்கித் தொடர்கிறார் நந்தினி.

``2017-ம் வருஷம், ஏப்ரல் 27... தன் துறையில நம்பர் ஒன்னா இருந்த டாக்டர் முரளி வாழ்க்கையை முடிச்சுக்கிட்டார். அதை நான் தற்கொலைனு சொல்ல மாட்டேன். அப்படிச் சொன்னா தற்கொலையை நாம ஒரு குற்றமா பார்க்கறோமோன்னு தோணுது. முரளிக்கு டிப்ரெஷன் இருந்தது. ஆனா, அவர் இப்படியொரு முடிவெடுப்பார்னு யாரும் எதிர்பார்க்கலை.

அதுவரைக்கும் தற் கொலைங்கிற விஷயத்தை அவ்வளவு நெருக்கத்துல பார்த்ததில்லை. பத்திரிகை செய்திகள்ல படிச்சதுதான். டாக்டர் முரளியின் தற்கொலை சமுதாயத்துல எப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பும், அதைச் சுற்றி என்ன மாதிரியான கிசுகிசுக் கள் கிளம்பும், யூகத்துல யாரெல்லாம் என்னவெல் லாம் பேசுவாங்க, எழுது வாங்கன்னு பயந்தேன். இதைத் தற்கொலைனு வெளியில சொல்றதா அல்லது ஹார்ட் அட்டாக் மாதிரி ஏதாவது சொல்லி சமாளிச்சிடறதானு நிறைய கேள்விகள்.

திருநங்கை ரேவதியும் நானும் ஃப்ரெண்ட்ஸ். திருநங்கை சமூகத்துல அவங்க இன்னொரு திருநங் கையைத் தத்தெடுக்கிறது வாடிக்கை. அப்படி ரேவதி தத்தெடுத்த திருநங்கை தற் கொலை பண்ணி இறந்துட் டாங்க. ரேவதி அதை என் கிட்ட பகிர்ந்தபோது என்னால அதைக் கேட்டுக்க முடிஞ்சதே தவிர, அவங்களுடைய வலியை முழுமையா உணர முடியலை. ஆனா, நான் அதே மாதிரியான அனுபவத்தை எதிர்கொண்டபோதுதான் அந்த வலி எனக்குப் புரிஞ்சது. அப்பதான் தற்கொலைகளைப் பற்றி பேசுறதோட பின்னணியில உள்ள மிகப் பெரிய மனத்தடை புரிஞ்சது. அதைப் பத்தி பேசணும்னு அந்த நிமிஷம்தான் முடிவெடுத் தேன்...’’ தழுதழுக்கும் குரலில் தவிப்பு அடங்காதவராகச் சொல்லி நிறுத்தும் நந்தினி, கணவரை இழந்த முதல் ஒரு வருடத்துக்கு துயரிலிருந்து மீள மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

``ஈடுசெய்ய முடியாத இழப்புதான்... தற்கொலை செய்துகிட்ட அந்த நபரைச் சார்ந்த மத்தவங்க வாழ்ந்துதானே ஆகணும்...அதுலேருந்து மீண்டு வாழ்க்கையை மறுபடி மாத்தி அமைச்சுக்க முயற்சி செய்தேன். அப்பதான் கார்லா ஃபைன் எழுதின ‘நோ டைம் டு சே குட்பை’ புத்தகம் பத்தி தெரிய வந்தது. அவங்க கணவரும் நியூயார்க்ல பெரிய யூராலஜிஸ்ட். கார்லாவும் என்னை மாதிரியே ஒரு ஜர்னலிஸ்ட். 30 வருஷங்களுக்கு முன்னாடி அவங்க கணவரும் தற்கொலையில இறந்திருக் கார். அவங்க தன் அனுபவங்களை புத்தகமா எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சதும் எனக்கு மிகப் பெரிய ஆறுதலா இருந்தது. கார்லாவோட புத்தகத்தைப் படிச்சதும் நான் ஏன் என் அனுபவத்தைப் புத்தகமா கொண்டு வரக் கூடாதுனு யோசிச்சேன். தற்கொலை செய்து இறந்துபோறவங்களுடைய குடும்பத்தாருக்கு ஒருவித குற்ற உணர்வு இருக்கிறதைப் பார்க்கலாம். தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருத்தருடைய பிரச்னையில்லை. சமுதாயத்தை, குடும்பத்தை, நாட்டையே பாதிக்கிற பிரச்னை. உலகமே இதை ஒரு குற்றச் செயலாதான் பார்க்குது. தற்கொலை செய்துகிட்டவங் களுடைய குடும்பத்தாரை, ‘ஐயையோ விட்டுட்டீங்களா... கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே’ங்கிற மாதிரியான கேள்விகளால குற்ற உணர்வுக்குத் தள்ளுது. இதுல பாலினபேதமும் இருக்கு. ஒரு பெண் தன் உறவை தற்கொலையில இழக்கும்போது, ‘நீதான் சரியா கவனிக்கலை... நீ சரியான அம்மா இல்லை, மனைவியா உன் கடமைகளை ஒழுங்கா செய்யலை’னு கமென்ட் அடிப்பாங்க.

தற்கொலை... பிரச்னைகளுக்கான முடிவல்ல, ஆரம்பம்!

என் கணவரோடு 32 வருஷங்கள் வாழ்ந்திருக்கேன். அவர் தன் வேலையை எவ்வளவு நேசிச்சார்னு எனக்குத் தெரியும். அவருக்கு நான் என்னால முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் பண்ணியிருக்கேன். இவ்வளவு செய்தும் காப்பாத்த முடியலையேனு வருத்தப் பட்டிருக்கேனே தவிர, குற்ற உணர்வு இல்லை. இந்த அனுபவங்களை எல்லாம் வெச்சு எழுதினதுதான் ‘லெஃப்ட் பிஹைண்டு'. இது என் கணவரின் தற்கொலையைப் பத்தி பேசுற புத்தகமில்லை. அவர் போனபிறகு, அந்த இழப்புலேருந்தும் சோகத்துலேருந்தும் நான் எப்படி மீண்டேன்னு பேசுற புத்தகம்...’’ அசாத்திய மன உறுதியோடு மீண்டிருப்பவர், கணவரின் முதல் நினைவுநாளில் இன்னொரு நல்ல முயற்சியையும் தொடங்கியிருக்கிறார்.

``டாக்டர் முரளி இறந்த அதே நாள்ல ‘ஸ்பீக்’ என்ற பெயர்ல ஓர் அமைப்பை ஆரம்பிச்சேன். மதுரையில எம்.எஸ்.செல்லமுத்து டிரஸ்ட் அண்டு ரிசர்ச் ஃபவுண்டேஷன்ல மனநலத்துக் கான பிரிவு இருக்கு. அதுல என்னுடைய ஸ்பீக் அமைப்பு மூலமா தற்கொலை தடுப்புக் கான விழிப்புணர்வு விஷயங்களைச் செய்யுறேன். கடந்த வருஷம் அக்டோபர் 10-ம் தேதி மனநல நாளன்னிக்கு மதுரையில ஒரு ஹெல்ப் லைனையும் ஆரம்பிச்சிருக்கோம். அது தற் கொலை மட்டுமல்லாம பொதுவான மனநல பிரச்னைகளுக்கானது’’ என்பவர், தனது ஸ்பீக் முன்னெடுப்பின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களைத் தொடர்ந்து வருகிறார்.

உலகளாவிய பிரச்னையான தற்கொலை யைத் தடுப்பதில் ஒவ்வொருவரின் குரலும் முக்கியமானது. உரக்க குரலெழுப்புவோம்

SPEAK2us மனநல ஹெல்ப்லைன் எண்: 93754 93754