Published:Updated:

`புற்றுநோயையும் ஜெயிப்பேன்!' - நம்பிக்கை பேசும் `நாப்கின்' வள்ளி 

கு.ஆனந்தராஜ்

என்னால, ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றமும் ஏற்றமும் நிகழ்ந்தால் போதும்.

`napkin' valli
`napkin' valli

மூலிகை நாப்கின் தயாரிப்பின் மூலம் தொழில்முனைவோராக வளர்ந்துவருபவர், திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த வள்ளி. நாப்கின் தயாரிப்பு குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவந்தார். புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை எடுத்துவரும் வள்ளி, பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும் ஏழைப் பெண்களுக்கு நாப்கின் தயாரிப்பு குறித்து இலவச பயிற்சி கொடுத்து வருகிறார். இதுகுறித்து, வள்ளியிடம் பேசினோம்.

`napkin' valli
`napkin' valli

``திருச்சி மாவட்டத்திலுள்ள `விழுதுகள்' அறக்கட்டளைக்காரங்க நாப்கின் பற்றி கிராமப்புறங்கள்ல விழிப்புணர்வு ஏற்படுத்தனுங்கிற நோக்கத்தோட என்னை அணுகினாங்க புற்றுநோய்க்கான சிகிச்சையை எடுத்துகிட்டிருந்தாலும், என் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. அதனால, பயிற்சி கொடுக்க ஒப்புக்கிட்டேன்.

`விழுதுகள்' அமைப்பினரே, பயிற்சிக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்கிக் கொடுத்தாங்க. செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் திருமணமான குடும்பப் பெண்கள் என 52 பேர் பயிற்சியில் கலந்துக்கிட்டாங்க. ஒரே நாப்கினை நீண்டநேரம் பயன்படுத்துவதால்தான் வெள்ளைப்படுதல் பாதிப்பு அதிகம் ஏற்படுது. அதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கு. அதுகுறித்தெல்லாம் விளக்கிச்சொன்னேன்.

`napkin' valli
`napkin' valli

மேலும், `நாப்கின் பயன்பாட்டில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வெள்ளைப்படுதலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கணும்'னு ஆலோசனை கொடுத்தேன்" என்கிற வள்ளி, 52 பெண்களுக்கும் நாப்கின் தயாரிக்கப் பயிற்சி கொடுத்திருக்கிறார்.

``இந்தப் பயிற்சியில் கலந்துகிட்டப் பெண்கள் எல்லோரும், தங்களின் தனிப்பட்ட குடும்பப் பிரச்னைகளைப் பகிர்ந்துகிட்டாங்க. அவங்களுக்கு என்னாலான ஆலோசனைகளைக் கொடுத்தேன். எனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருப்பது பற்றியும் விளக்கினேன். என் கதையைக் கேட்டு பெண்கள் பலரும் கலங்கினாங்க. மேலும், என் கதை உத்வேகம் கொடுப்பதாகவும் சொன்னாங்க. 

என்னால, ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றமும் ஏற்றமும் நிகழ்ந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே நாப்கின் தயாரிக்கிற தொழில் மூலம் என் குடும்பத்தைக் காப்பாத்திடுவேன்.
`நாப்கின்' வள்ளி

எனக்கு ஏற்பட்டதுபோல, புற்றுநோய் பாதிப்பு மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது. அதனால, விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கைப் பயிற்சிகளையும் கொடுக்க விரும்புறேன். எல்லாமே இலவசமாக! என்னால, ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றமும் ஏற்றமும் நிகழ்ந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே நாப்கின் தயாரிக்கிற தொழில் மூலம் என் குடும்பத்தைக் காப்பாத்திடுவேன்" என்கிறார் உத்வேகத்துடன்.