Published:Updated:

`பெண்கள் மாலைக்கு மேல் ஏன் வெளியில் போகணும்?' - சர்ச்சையில் தேசிய பெண்கள் ஆணைய சந்திரமுகி

பிரதமர் மோடியுடன் சந்திரமுகி
பிரதமர் மோடியுடன் சந்திரமுகி

இந்த விவகாரம் நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான சந்திரமுகி இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்துள்ள கருத்து, கண்டனங்களைப் பெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்துவது இந்தச் சமூகத்துக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டனங்களைப் பெற்றுவருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், பதான் பகுதியில் கோயிலுக்குச் சென்ற 50 வயதுப் பெண்ணை, பூசாரியும் இன்னும் சிலரும் சேர்ந்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் பிறப்புறுப்பில் கடுமையாகத் தாக்கியதில், அவர் உயிரிழந்தார்.

Woman Abuse (Representational Image)
Woman Abuse (Representational Image)

இந்த விவகாரம் நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான சந்திரமுகி இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்துள்ள கருத்து, கண்டனங்களைப் பெற்று வருகிறது.

உயிரிழந்த 50 வயதுப் பெண்மணி, அங்கன்வாடி ஊழியர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தனது வீட்டிலிருந்து கோயிலுக்குச் சென்ற அவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரின் குடும்பத்தினர் அச்சத்துடன் அவரைத் தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அருகில் உள்ள காவல் நிலையில் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில், அன்றிரவு சுமார் 11 மணியளவில், காரில் வந்த மூன்று ஆண்கள், காணாமல்போன பெண்ணை அரை நிர்வாணக் கோலத்தில் அவர் வீட்டு வாசலில் போட்டுவிட்டுச் சென்றனர். அந்தப் பெண்ணின் உடலில் உயிர் இல்லை.

அப்பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக இருக்கும் பாபா சத்யநாரைன் தாஸ், அவரின் இரண்டு கூட்டாளிகளான வேத் ராம் மற்றும் டிரைவர் யஷ்பால் மீது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற இரண்டு குற்றவாளிகளும் புதன்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

crime
crime

உயிரிழந்த பெண்ணுக்கு 5 குழந்தைகள். தன் குடும்பத்தை வேலைக்குச் சென்று காப்பாற்றி வந்திருக்கிறார் அந்தப் பெண். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், ``ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அருகிலுள்ள கோயிலில் பிரார்த்தனை செய்ய வீட்டிலிருந்து சென்றார். பூசாரி சத்தியநாரைன் தாஸ், வேத் ராம் மற்றும் யஷ்பால் ஆகிய மூன்று பேரும் அவரை கோயில் வளாகத்திலேயே வன்கொடுமை செய்துவிட்டு, நள்ளிரவில் ஒரு காரில் அவர் உடலைக் கொண்டுவந்து வீட்டு வாசலில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்" என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் போலீஸ் தரப்பு தாமதம் செய்ததாகவும் இன்னொரு புகார் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக அவர் வீட்டுக்கு தேசிய பெண்கள் ஆணையம் அனுப்பிய இரண்டு பிரநிதிகளில் ஒருவர், சந்திரமுகி தேவி. அங்கு சென்றபோது பேசிய சந்திரமுகி, ``இந்தப் பெண் மாலைக்கு மேல் ஏன் வெளியில் போனார்? வெளியே போகாமல் இருந்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்" என்று கூறி அதிர வைத்தார்.

மேலும் அவர் கூறுகையில், ``இது, திட்டமிட்டு செய்த கொலை. முதலில், மாலை நேரத்தில் தனியாக வந்திருக்கக் கூடாது. அப்படியே வந்திருந்தாலும் குடும்பத்தின் ஓர் ஆண் பிள்ளையை துணைக்கு அழைத்துச் சென்றிருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆரம்பத்தில் இருந்தே இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் கூறியதை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார் சந்திரமுகி. இவரது கருத்து குறித்து இயக்குநர், நடிகை பூஜா பட் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மாவிடம் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்ப, ``சந்திரமுகி தேவியின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்கள் விருப்பப்படி செல்ல அனைத்து உரிமைகளும் உண்டு. பெண்கள் செல்லும் இடங்களைப் பாதுகாப்பாக வைப்பது சமூகம் மற்றும் அரசின் கடமை" என்றிருக்கிறார்.

சந்திரமுகி
சந்திரமுகி
`மௌனி' மோடி, `பப்பு' ராகுல்... தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மாவின் ட்விட்டர் சர்ச்சை!

இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் கோரப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ .50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

- ஆனந்தி ஜெயராமன்
அடுத்த கட்டுரைக்கு