Published:Updated:

`தினமும் எனக்கு 300 மிரட்டல் மெசேஜ்கள் வரும்!" - சர்வதேச ஊடக சுதந்திர விருது பெற்ற நேஹா தீக்‌ஷித்

நேஹா தீக்‌ஷித்
நேஹா தீக்‌ஷித்

நேஹா ஒவ்வொரு முக்கியப் பிரச்னையை கையிலெடுத்து எழுதும்போது, அவர் எதிர்கொள்ளும் எதிர்வினைகள் பல. ஆன்லைனில் நேஹா மிகவும் மோசமான தாக்குதலுக்கு ஆளானார்.

''பல மாதங்களாக நான் தேச துரோகி என்று அழைக்கப்பட்டு வந்ததற்கு முற்றுப்புள்ளியாக, விடுதலைப் போராட்ட வீரரின் பெயரிலான இந்த விருதை இப்போது நான் வாங்குகிறேன், சந்தோஷமாக உள்ளது!"

நேஹா தீக்‌ஷித்
நேஹா தீக்‌ஷித்

2016 -17ம் ஆண்டுக்கான சிறந்த பெண் பத்திரிகையாளருக்கான 'சாம்லி தேவி விருதை' பெற்றபோது, இந்தியாவின் பிரபல பெண் பத்திரிகையாளர் நேஹா தீக்‌ஷித் தன் உரையை இப்படித்தான் ஆரம்பித்தார்.

இப்போது, 2019ம் ஆண்டுக்கான 'சர்வதேச ஊடக சுதந்திர விருதை(International Press Freedom Award), ' பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம்(CPJ - Committee to Protect Journalists)' நேஹா தீக்‌ஷித்துக்கு வழங்கியுள்ளது. காவல்துறை நிகழ்த்திய சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைப் பற்றி, பல மாதங்களாக நேஹா தொடர்ந்து எழுதிவந்த அஞ்சாத எழுத்துகளுக்கான வெகுமதி, இந்த சர்வதேச விருது.

பல மாதங்களாக நான் தேச துரோகி என்று அழைக்கப்பட்டு வந்ததற்கு முற்றுப்புள்ளியாக, விடுதலைப் போராட்ட வீரரின் பெயரிலான இந்த விருதை இப்போது நான் வாங்குகிறேன், சந்தோஷமாக உள்ளது!
நேஹா தீக்‌ஷித்

இந்தியாவைச் சேர்ந்த ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளரான நேஹா தீக்‌ஷித், பல விருதுகளைப் பெற்ற பத்திரிகை ஆளுமை. அரசியல், பாலின சமத்துவம், சமூக நீதி குறித்த செய்திகளை அச்சு ஊடகம், தொலைக்காட்சி, ஆன்லைன் எனப் பல தளங்களிலும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகத் தந்துகொண்டிருப்பவர். 'தெஹல்கா' ஊடகத்தில் தொடங்கிய இவர் பயணம், 'இந்தியா டுடே' பத்திரிகையின் சிறப்புப் புலனாய்வுப் பத்திரிகையாளராக வேகமெடுத்தது. சர்வதேச ஊடகங்களான 'த நியூயார்க் டைம்ஸ்', 'அல்-ஜஸீரா' போன்றவற்றில் நேஹாவின் எழுத்துகள் பிரசுரமாயின.

2019-ம் ஆண்டுக்கான 'சர்வதேச ஊடக சுதந்திர விருது'க்கு நேஹாவைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் பற்றி அந்த அவார்டு கமிட்டி கூறும்போது, 'பல முக்கியப் பிரச்னைகளிலும் புலனாய்வுச் செய்திகளை தந்துகொண்டிருக்கும் நேஹா, குறிப்பாக காவல்துறையின் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் பற்றி வெளிக்கொண்டுவர கொடுத்த உழைப்பும் தைரியமும் அபாரமானவை.

நேஹா தீக்‌ஷித் கட்டுரை
நேஹா தீக்‌ஷித் கட்டுரை

மேலும் அரசியல் நோக்கங்களுக்காக சட்டத்துக்குப் புறம்பாக மக்கள் காவலில் வைக்கப்படுவதைப் பற்றியும் அவர் எழுதிவந்தார். அதன் விளைவாக, 2019ம் ஆண்டு ஜனவரி மாதம், ஐநா மனித உரிமை அமைப்பு அதைப் பற்றி விளக்கமளிக்க இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது' என்று குறிப்பிட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 31 பழங்குடியினச் சிறுமிகள், இந்துமயமாக்கப்படுவதற்காக குஜராத்துக்குக் கடத்திச் செல்லப்பட்டதை அம்பலப்படுத்தினார் நேஹா. உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்களை காவலில்வைக்க தேசிய பாதுகாப்புச் சட்டம்(National Security Act), எப்படி நோக்கம் தவறிப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் எழுதினார்.

உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பங்களைச் சந்தித்து நேஹா எழுதிய எழுத்துகள், காவல்துறையின் உள்நோக்கம் கொண்ட என்கவுன்டர்களின் பின்னணியைத் தோலுரித்தது.

நேஹா ஒவ்வொரு முக்கியப் பிரச்னையை கையிலெடுத்து எழுதும்போது, அவர் எதிர்கொள்ளும் எதிர்வினைகள் பல. ஆன்லைனில் நேஹா மிகவும் மோசமான தாக்குதலுக்கு ஆளானார். வன்புணர்வு மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் என வக்கிரம் கக்கியவர்கள், அவரின் பெர்சனல் தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டனர்.

நேஹா தீக்‌ஷித்
நேஹா தீக்‌ஷித்

'ஒரு நாளைக்கு 300 மிரட்டல் மெசேஜ்கள் எனக்கு வந்தன' என்கிறார் நேஹா. காவல்துறை மேற்கொள்ளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் பற்றி எழுதியபோது, காவல்துறை உயரதிகாரிகளால் நேஹாவின் குடும்பம் அச்சுறுத்தப்பட்டது.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலில் 180 நாடுகளில் 140வது இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில், அசாதாரண துணிவுடன் செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு சர்வதேச அளவில் வழங்கப்படும் 'ஊடக சுதந்திர விருது' நேஹாவுக்குக் கிடைத்திருப்பது சிறப்பு.

நேஹா தீக்‌ஷித் ட்விட்டர் பக்கம்
நேஹா தீக்‌ஷித் ட்விட்டர் பக்கம்

இந்தியப் பத்திரிகை துறைக்கு நேஹா தரும் பூஸ்ட் அப் இது!

அடுத்த கட்டுரைக்கு