Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: வடமாநில பெண் குழந்தைகளுக்கு உதவ வரும் 'சஹெலி'... புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடு!

saheli helpline
saheli helpline

வடமாநில தொழிலாளர்களின் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘சஹெலி’ என்ற பெயரில் சேவை மையம் நீலகிரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களில் ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு போதிய பணி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதிகள் இல்லை என்பது பெரும் குறையாகவே உள்ளது.

இந்தத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் தேயிலைத் தோட்டங்களிலேயே அமைத்து கொடுப்பதால் குற்றங்களும் அதிகரிக்கின்றன. மேலும், பெண்‌ குழந்தைகளின் பாதுகாப்பும்‌ கேள்விக்குறியாக உள்ளது.

tea estate workers
tea estate workers

குன்னூர் அருகில் உள்ள கிரேக்மோர் தனியார் தேயிலைத் தோட்டத்தில் மாயமான சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலமாக மீட்கப்பட்டது என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்தன.

வட‌ மாநில தொழிலாளர்களின் பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமையேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள 'சஹெலி' என்ற சேவையின் இலவச தொலைபேசி எண் சேவையை அறிமுகப்படுத்தினார்.

இது குறித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "பெற்றோர் வேலைக்குச் சென்ற பின்னர் அவர்களின் குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. அந்தக் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்கள் தயக்கமின்றி புகார் செய்திட 'சஹெலி' என்ற பெயரில் இலவச தொலைபேசி எண் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான எண் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரிரு நாளில் அந்த எண் அறிவிக்கப்படும்.

tea estate
tea estate

அதுவரை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். வடமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் மொழியிலேயே தெரிவிக்கலாம்.

மேலும் ஒரு பள்ளியில் இரண்டு குழந்தைகள் தூதுவர்களாகத் தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் பள்ளி தூதுவர்கள் மூலம் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். நேரடியாகத் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு