Published:Updated:

`8 நகரங்கள் மட்டுமல்ல... நாடு முழுவதும் நிர்பயா நிதி பயன்பாடு!' - அமைச்சர் ஸ்மிருதி இரானி

இதற்கு முன் 8 நகரங்களில் மட்டுமே நிர்பயா நிதி செலவிடப்பட்டு வந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்தவர் மருத்துவ மாணவி நிர்பயா. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பாலியல் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக `நிர்பயா நிதியுதவி' வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

Vikatan
நிர்பயா நிதி
நிர்பயா நிதி

நிர்பயா நிதி என்ற ஒன்று உருவாக்கப்பட்ட பின் 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,000 கோடி ரூபாயும் அடுத்த ஆண்டு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இத்திட்டம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, ஹைதராபாத் ஆகிய 8 இடங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வதில் தொடங்கி, பொது இடங்களில் சிசிடிவி கேமரா வைப்பது, மருத்துவச் செலவுக்கு உதவுவது என 18 திட்டங்களின் கீழ் 8 நகரங்களிலும் நிர்பயா நிதி செலவிடப்பட்டு வந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

நாடு முழுவதும் பெண்களுக்கான வன்முறை நிகழும்போது 8 நகரங்களில் மட்டும் இந்தத் திட்டம் செயல்படுவது போதுமானது அல்ல எனப் பல்வேறு தரப்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, ``நிர்பயா நிதியானது இனி நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மூலமாகவும் கடத்தல் தடுப்புப் பிரிவு துறையின் மூலமாகவும் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் வகையில் செலவிடப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதை வரவேற்று நாடு முழுவதுமுள்ள ஏராளமான பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.