Published:Updated:

``நிர்பயா வழக்கை பெண்களின் வாழ்க்கையாகப் பார்த்தேன்!''- அமெரிக்க விருது பெற்ற பெண் அதிகாரி உருக்கம்

நிர்பயா வழக்கில் சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் முக்கிய குற்றவாளியைக் கண்டறிந்தவர்.

நிர்பயா வழக்கு
நிர்பயா வழக்கு

நிர்பயா என்ற பெயரை இந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. 2012-ம் ஆண்டு ஆறு பேர் கொண்ட கும்பலால், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு  ரத்தக் காயங்களுடன் சாலையோரத்தில் தூக்கியெறியப்பட்டவர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 நாள் சிகிச்சைக்குப் பிறகு பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பெரும் பரபரப்புக்கும் போராட்டங்களுக்கும் இடையே  இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை கையில் எடுத்தவர் பெண் காவல்துறை அதிகாரி சாயா சர்மா. சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம்சிங்கைக் கைது செய்தார். அடுத்த சில தினங்களிலேயே மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நிர்பயா வழக்கு மட்டுமின்றி, இரண்டு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்த பெண் குழந்தை வழக்கு, சுல்தான்பூர் கூட்டு பாலியல் வழக்கு என முக்கிய வழக்குகளில் துணிச்சலுடன் செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்தவர்.

சாயா சர்மா
சாயா சர்மா

தற்போது இந்திய மனித உரிமை ஆணையத்தின் துணை ஆணையராகப் பணியாற்றி வரும் சாயா சர்மாவுக்கு, நியூயார்க்கைச் சேர்ந்த `ஆசியா சொசைட்டி' என்ற அமைப்பு `ஆசியாவின் கேம் சேஞ்சர்' என்ற விருதை அறிவித்துப் பெருமைப்படுத்தியுள்ளது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாயா வழங்கியுள்ள பேட்டியில் ``நான் ஒரு பெண் என நினைக்காமல், குற்றங்களைக் களைய வேண்டிய அதிகாரி என்று மட்டுமே என்னை நான் நினைத்துக்கொள்வேன்.

சமுதாயத்தில் பரபரப்புக்குள்ளான எத்தனையோ வழக்குகளை நான் எதிர்கொண்டுள்ளேன். சில வழக்குகள் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்துள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, பெண்களின் நலனுக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது. 19 வருட காவல்துறைப் பணியில் எத்தனையோ வழக்குகளை விசாரித்து இருந்தாலும் நிர்பயா வழக்கு எனக்கு ஒரு அடையாளத்தைத் தந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

நிர்பயா விவகாரத்தை நான் வழக்காக மட்டும் பார்க்கவில்லை. மற்ற பெண்களின் வாழ்க்கையாகப் பார்த்தேன். அவர்களுக்கான மரண தண்டனை என்பது மற்ற பெண்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பு என்று நினைக்கிறேன். என்னுடைய பணியை மற்றவர்களுக்கு உதவக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.