Published:Updated:

#MeTooவின் ஓராண்டு : பிரதமர் மோடி சொன்னதுபோல பெண்களின் கண்ணியம் காக்கப்படுகிறதா?

வலதுசாரி, இடதுசாரி, நடுநிலைகள் எனக் கொள்கைப் பாகுபாடில்லாமல் நடக்கும் பெண்கள்/சிறுவர்கள்/சிறுமிகள்/மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை, அவலங்களுக்கு விடிவெள்ளிதான் இந்த #MeToo.

#MeTooவின் ஓராண்டு : பிரதமர் மோடி சொன்னதுபோல பெண்களின் கண்ணியம் காக்கப்படுகிறதா?

வலதுசாரி, இடதுசாரி, நடுநிலைகள் எனக் கொள்கைப் பாகுபாடில்லாமல் நடக்கும் பெண்கள்/சிறுவர்கள்/சிறுமிகள்/மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை, அவலங்களுக்கு விடிவெள்ளிதான் இந்த #MeToo.

Published:Updated:

”பெண்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதிசெய்வோம்” என்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த துர்கா பூஜை மற்றும் தசரா விழாக் கொண்டாட்டத்தில் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

சுமார் ஒருவருடத்துக்கு முன்பு இதே அக்டோபர் மாதத்தில் நாட்டையே கொந்தளிக்கச் செய்த "MeToo" பாலியல் குற்ற விவகாரங்கள் தொடங்கி உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ சின்மயானந்தா விவகாரம் வரை ”கண்ணியம் என்றால் என்ன? பெண்களைக் கண்ணியத்துடன் நடத்துவது என்றால் என்ன?” என்கிற விரிவான இரு கேள்விகளை முன்வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெங்களூருவின் பரபரப்பான ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் சிக்னல் பகுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் வீடியோ அண்மையில் முகநூலில் வைரலானது. ஷார்ட்ஸ் அணிந்து பைக்கில் பயணம் செய்த ஒரு பெண்ணை முன்பின் அறியாத நபர் ஒருவர், “நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்... இந்தியாவின் உடையை அணிந்துகொள்ளுங்கள்” என்று இரண்டு கரங்களைக் கூப்பி வேண்டுகிறார்.

பெங்களூரு நபர்
பெங்களூரு நபர்

கெஞ்சிக் கேட்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் அருகில் இருந்த கடைக்குச் சென்று ”இவர் இப்படி உடை அணியலாமா?” என்று நியாயம் கேட்கிறார். நிகழ்பவை அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டிருந்த ஒருவரிடம் ,”நான் நன்கு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவன். நீங்கள் சொல்லுங்கள்... பெண்கள் இப்படி உடை அணிவது சரியா?” என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு மறுமொழி கூறும் வீடியோவைப் பதிவு செய்த நபர், ”அவர் எந்த உடை அணிய வேண்டும் என்று முடிவு செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்தியாவின் உடைதான் என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆடை முழங்கால் வரை மூடியிருந்தால், முழுக்கையையும் மறைத்திருந்தால் பெண்களைக் கண்ணியப்படுத்திவிடலாம் என்று இந்த நூற்றாண்டிலும் சிந்தனை அழுத்தப்பட்டுக் கிடப்பவர்களிடையே, `Me Too!’ என்று தங்கள் உடலால் ஒடுக்கப்பட்டதை, மனதால் நொறுக்கப்பட்டதை வெளிப்படுத்தியது தவறுதான் என்று சிந்திக்கும் வகையிலேயே கடந்த ஓராண்டு இருந்திருக்கிறது.

ஹார்வி வெயின்ஸ்டீன்
ஹார்வி வெயின்ஸ்டீன்

அமெரிக்காவின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 80க்கும் மேற்பட்ட நடிகைகள் கொடுத்த பாலியல் தொந்தரவுப் புகாரிலிருந்துதான் #MeToo இயக்கம் தொடங்கியது. அக்டோபர் 2017-ல் கைது செய்யப்பட்ட ஹார்வி, மே 2018-ல் பிணையில் விடுவிக்கப்பட்டார். இன்றளவும் தன் மீதான பெரும்பாலான பாலியல் குற்றச்சாட்டுகளை ஹார்வி மறுத்துவருகிறார்.

"தான் தவறு செய்யவில்லை அவை அத்தனையும் முழுச் சம்மத (consent) அடிப்படையில் நடந்ததே" என்றார். அவர் சிறையில் இருந்தது சிறிது காலம்தான் என்றாலும் ஒட்டுமொத்த ஹாலிவுட்டும் இணைந்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. திரைப்படத் தயாரிப்பிலிருந்து அவர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார். ஹார்வி மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து அவரது மனைவியும் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

ஆனால், இந்தியாவில் #MeToo அப்படியாக அணுகப்படவில்லை. "திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து என்னைப் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்" என்று திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி புகார் சொன்னதும் இந்தச் சமூகம் அவரிடம் முன்வைத்த முதல் கேள்வி, “இதை ஏன் நீங்கள் அவர் தவறு செய்ய முயற்சித்த நேரத்திலேயே சொல்லவில்லை?” என்பதுதான்.

வைரமுத்துவைப் போலவே நடிகர்கள் திலீப், அர்ஜூன், ராதாரவி இயக்குநர் சுசி கணேசன், நடன இயக்குநர் கல்யாண் எனப் பல்வேறு திரைப்படத்துறையினர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தென்னிந்திய திரைத்துறைப் பெண்கள் சங்கம் ஒருங்கிணைந்து இது தொடர்பாகக் குரல் எழுப்பியது. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் கூட தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பொதுவெளியில் அதுகுறித்து விளக்கவும் முன்வரவில்லை.

வைரமுத்து
வைரமுத்து

நடிகர் திலீப் பல்வேறு மலையாளத் திரைத்துறைச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு வெளியான, ’கம்மார சம்பவம்’ திரைப்படத்துக்கு முதல் நாள் அரங்கம் நிரம்பியிருந்தது. இன்றளவும் அவருக்கான ஸ்டார் வேல்யூ குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் மலையாள மக்கள். நடிகர் திலீப்பால் பாதிக்கப்பட்டிருந்த மலையாள நடிகைக்கு அந்த மக்கள் செய்த நியாயம் இதுதான். புகார் வைக்கப்பட்ட பிறகும்கூட, மேடையேறி சக நடிகையை அவதூறு செய்யும் அளவுக்கு நடிகர் ராதாரவிக்கான சுதந்திரம் இன்றளவும் இருக்கிறது.

ஊடகத்தில் பேசப்பட்ட புகார்களுக்கே இந்த நிலைதான் என்றபோது தமக்கு நேர்ந்த பிரச்னையை முகநூலில் பதிவு செய்துவிட்டு நியாயத்துக்காகக் காத்திருந்த #MeToo புகார்கள் காலப்போக்கில் கடக்கப்பட்டுவிட்டன. ஆதாரப்பூர்வமாக எங்களுக்கு எவ்விதப் புகார்களும் வரவில்லை. அப்படிப் புகார் தரப்படும் நிலையில் அதன்மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியது தேசியப் பெண்கள் ஆணையம்.

முகநூல் பதிவுகளையே புகார்களாக எடுக்க அவர்கள் தயாராக இல்லை. பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான கமிட்டிகளை (Internal compliance committee) வலுப்படுத்தின.

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்

அதே சமயம், கர்நாடக இசைத்துறையில் இருந்த பல்வேறு இசைக்கலைஞர்களின் மீது பாலியல் புகார் வைக்கப்பட்ட போது மியூசிக் அகாடமி தவிர வேறு எந்த சபாக்களும் இது தொடர்பாக வினையாற்றவில்லை. புகார் சொல்லப்பட்ட இசைக் கலைஞர்கள் ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், நாகை ஸ்ரீராம், மன்னார்குடி ஈஸ்வரன் உள்ளிட்ட கலைஞர்களின் பெயர்கள் மியூசிக் அகாடமியின் மார்கழி இசைவிழாவுக்கான பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

அனைத்து இந்திய இசைக்கலைஞர்கள் குழு உள்ளிட்டவற்றில் சுதா ரகுநாதன் உள்ளிட்ட பல முன்னணி இசைக்கலைஞர்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான கமிட்டியில் இருக்கிறார்கள். ஆனால், அதே கமிட்டியில் புகார் சொல்லப்பட்ட கலைஞர்களும் இருப்பதும், அவர்களிடம் #MeToo புகார்கள் குறித்து இன்றுவரை எவ்வித கேள்விகளும் கேட்கப்படாமல் இருப்பதும் இதில் இருக்கும் ஆகப்பெரும் முரண்.

இவை அத்தனையும் ஒருபக்கம் இருக்க, #MeToo புகார்கள் பரபரப்பான இந்த ஒருவருடகாலத்தில் நடந்த பல கொடூர பாலியல் குற்றங்களை கவனிப்போம். 17 வயதுச் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது வெளிப்படையாகக் கொலைமுயற்சியில் ஈடுபடும் அளவுக்கு உத்தரப்பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு இருந்தது. சிறுமிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்ச ரூபாயை உத்தரப்பிரதேச அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னாலும், வழக்கில் இந்த அளவுக்கேனும் நீதி கிடைக்க அந்தச் சிறுமி தனது தந்தையின் உயிரைப் பறிகொடுக்க வேண்டி வந்தது.

குல்தீப் சிங்
குல்தீப் சிங்

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் பாரதிய ஜனதா எம்.பி. சின்மயானந்த் மீது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டை முன்வைத்தார். சின்மயானந்த் தற்போது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவியும் காவலில் வைக்கப்பட்டிருப்பதுதான் இதில் ஆகப்பெரும் கொடுமை. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கச் சொன்ன பிரதமரின் கட்சி உறுப்பினர்களே இன்றளவும் சின்மயானந்துக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

 சின்மயானந்த்
சின்மயானந்த்

சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டும் இதில் அடக்கம். Mutual consent உட்படப் பல வாதங்கள் இதில் முன்வைக்கப்பட்டாலும் பெண்களின் சுயமரியாதை, பெண்ணுரிமை என்று பேசும் பெரும்பாலான செயற்பாட்டாளர்களே முகிலன் விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணை தரக்குறைவாகப் பேசியதற்கும் இழிவுபடுத்தியதற்கும் சமூக வலைதளங்கள் சாட்சி.

இதற்கிடையே இதுபோன்று #MeToo புகார் அளிக்கும் பெண்களுக்கு எதிராக இந்தியக் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில் பிண்டச்சோறு அளிக்கும் நிகழ்வுகள் போன்ற காமெடிகளும் கர்நாடகா மாநிலத்தில் அண்மையில் அரங்கேறி இருக்கின்றன.

பெண்களை எப்படி கண்ணியத்துடன் நடத்துவது என இவர்கள் எல்லோருக்கும் எப்படிப் பாடம் எடுக்கப் போகிறோம்? கலைஞர்களையும், அரசியல்வாதிகளையும், செயற்பாட்டாளர்களையும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் பார்வையிலிருந்து அணுகுவது தவறு என்கிற பொதுவாதம் பல்வேறு தளங்களில் வைக்கப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் கூட, குறைந்த அளவுக்கு நேர்மையுடன் நடந்துகொள்ள முடியாதவர்கள் பொதுவாழ்க்கையில் தாங்கள் மேற்கொள்ளும் செயற்பாட்டில், கலையில், அரசியல் பயணத்தில் என்ன நேர்மையுடன் நடந்துகொண்டுவிடக்கூடும்?

வலதுசாரி, இடதுசாரி, நடுநிலைகள் எனக் கொள்கைப் பாகுபாடில்லாமல் நடக்கும் பெண்கள்/சிறுவர்கள்/சிறுமிகள்/மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை அவலங்களுக்கு விடிவெள்ளிதான் இந்த #MeToo. எப்படியும் பேசமாட்டார்கள் என்னும் அசட்டு தைரியத்தில் நிகழ்த்தப்பட்ட வன்குற்றங்களுக்கு பதிலடியாக, பாதிக்கப்பட்டவர்கள் முன்னெடுத்த தொடக்கப்புள்ளி. இந்த வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் வரை, கண்ணியம் என்னவென்று ஆதிக்கச் சிந்தனைகளுக்கு உரைக்கும் வரை #MeToo ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism