Published:Updated:

`எல்லைகள் பிரித்தாலும் விண்வெளி இணைக்கும்!' - இஸ்ரோவைப் புகழ்ந்த பாகிஸ்தான் பெண் விஞ்ஞானி

சு.சூர்யா கோமதி

விண்வெளி ஆய்வை எந்த நாடு முன்னெடுக்கிறது என்பது முக்கியமல்ல, அதன்மூலம் மக்கள் என்ன பயனடையப் போகிறார்கள் என்பதே முக்கியம்.

நமீரா சலீம்
நமீரா சலீம் ( Twitter )

சந்திரயான் - 2  மிஷன், மொத்த இந்தியர்களையும் பெருமிதப்பட வைத்திருக்கிறது. 'சந்திரயான் வென்று வருவான்' என்று பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை நமீரா சலீம், " சந்திரயான் -2, விண்வெளித் துறையில் பெரிய பாய்ச்சல்" என்று இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Chandrayaan 2
Chandrayaan 2

நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய இஸ்ரோ, சந்திராயன் 2-வை நிலவின் தென்துருவப் பகுதிக்கு அனுப்பியது. செப்டம்பர் 7-ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி சில நிமிடங்களில் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் நிலை என்ன என்பது இதுவரையில் தெரியவில்லை.

நிலவின் தென்துருவப் பகுதி ஆராய்ச்சியில் கால்பதிக்கும் இந்தியாவின் முயற்சியை உலகமே உற்றுநோக்கியிருந்த சமயத்தில், லேண்டரில் இருந்து தகவல் கிடைக்காதது குறித்து பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

சந்திரயான் 2-வின் இந்தப் பின்னடைவை பாகிஸ்தான் கொண்டாடியது. 'INDIAFAILED' என்ற ஹேஸ்டேக்குகளும் பாகிஸ்தான் நெட்டிசன்களால் டிரெண்ட் ஆக்கப்பட்டது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃப்கத் உசைனும், இஸ்ரோ விஞ்ஞானிகளைக் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இந்தச் சூழலில், பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி விஞ்ஞானியான நமீரா சலீம் இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பெண் விஞ்ஞானி
பாகிஸ்தான் பெண் விஞ்ஞானி
Twitter

தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள நமீரா சலீம், "சந்திரயான் -2, தெற்காசியாவில் மட்டுமல்ல, விண்வெளி துறையிலேயே பெரிய பாய்ச்சலாகத் தெரிகிறது. அதற்காக இஸ்ரோவுக்கும் இந்தியாவுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். விண்வெளி ஆய்வை எந்த நாடு முன்னெடுக்கிறது என்பது முக்கியமல்ல, அதன்மூலம் மக்கள் என்ன பயனடையப் போகிறார்கள் என்பதே முக்கியம். இது இந்தியாவின் தோல்வி இல்லை. இந்தியாவின் வழிகாட்டுதல். பூமியில் இருக்கும் அரசியல் எல்லைகள் நம்மை பிரித்தாலும் விண்வெளி நம்மை இணைக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.