Published:Updated:

``ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் போறோம்!" - சுபஶ்ரீயின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது?

2019-ல் ஐ.டி பெண் சுபஶ்ரீயின் உயிரிழப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் சுவடு மறைவதற்குள், பேனர் கலாசாரத்தால் இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த நிலையில், சுபஶ்ரீயின் நினைவுதினத்தையொட்டி அவரின் பெற்றோரிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி, சென்னையில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்று, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஐ.டி நிறுவனப் பணியாளரான சுபஶ்ரீ, பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அ.தி.மு.க பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்கு வருகை தரும் கட்சிப் பிரமுகர்களை வரவேற்கும் வகையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒன்று, சுபஶ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. அவரது உயிரைப் பறித்த பேனர் கலாசாரத்துக்கு எதிராகவும், சுபஶ்ரீயின் மரணத்துக்கு நீதி கிடைக்கவும், அடுத்த சில தினங்களுக்கு இந்தச் செய்திதான் பிரதானமாக ஒலித்தது. ஓர் உயிரைப் பறித்த பாவத்துக்கு எந்த வகையிலும் பரிகாரம் தேடவில்லை, அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

சுபஶ்ரீ
சுபஶ்ரீ

வீடு தேடிச் சென்று சுபஶ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள், `ஃப்ளெக்ஸ் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று காட்டமாகக் குரல் கொடுத்தனர். அந்தப் பேச்சும், பொதுமக்களின் கோபக்கனலும் காலப்போக்கில் நீர்த்துப்போனது. அதற்கு உதாரணமாகியுள்ளன, சமீபத்திய இரண்டு உயிர்ப்பலிகள். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பேனர் சரிந்ததில், சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அம்மணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி என்பவர் உயிரிழந்தார். அந்த மரணத்தின் சுவடு மறைவதற்குள், அண்மையில் விழுப்புரத்தில் மற்றுமோர் உயிர்ப்பலியும் ஏற்பட்டது. அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் நடும்போது, மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.

சுபஶ்ரீ உயிரிழந்தபோது, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், பேனர் கலாசாரத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்தார், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின். ஆனால், இப்போது அவருடைய ஆட்சியில் அவரின் கட்சியினராலேயே பேனர் கலாசாரத்தால் ஓர் உயிர் பறிபோயுள்ளது. ``இதுபோன்ற ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே இத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது. கழகத்தினர் என் வேண்டுகோளை ஏற்றுச் செயல்பட வேண்டும்" என்று அறிக்கையின் மூலம் மட்டுமே எதிர்வினையாற்றினார் ஸ்டாலின். இதுபோன்ற கண்டன அறிக்கைகளை வெளியிடுவதாலும், இழப்பீடுகளைக் கொடுப்பதாலும் மட்டுமே சம்பந்தப்பட்ட குடும்பங்களின் துயரினை முழுமையாகப் போக்கிவிட முடியுமா? பெருமைக்காகவும் விளம்பரத்துக்காகவும் செய்யப்படும் இதுபோன்ற பேனர் கலாசாரத்தினால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்?

சுபஶ்ரீ பெற்றோர்
சுபஶ்ரீ பெற்றோர்
dev
திருமண வரவேற்பு நிகழ்ச்சி; திமுக கட்சிக் கொடி நடும் பணி; 13 வயது சிறுவன் பலியான சோகம்!

``பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் பேனர் வைக்கும் விஷயத்தில் அரசியல் கட்சியினர் வேறுபாடு இன்றி தவறான முன்னுதாரணத்துக்கு எடுத்துக்காட்டாகவே நடந்து கொள்கின்றனர்" என்ற ஆதங்கக்குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இதில், பொதுமக்களாகிய நமக்கும் பொறுப்புணர்வு இருப்பதைப் பல நேரங்களில் மறந்து செயல்படுகிறோம். எனவேதான், கண்டனத்துக்கும் வேதனைக்கும் உரிய நிகழ்வுகளாக, உயிர்ப்பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது பேனர் கலாசாரம். சுபஶ்ரீயின் பெற்றோர் ரவியும் கீதாவும், இதே காரணங்களை ஆதங்கத்துடன் முன்வைக்கின்றனர். ஒரே மகளைப் பறிகொடுத்த இவர்களின் மனக்குமுறல் இன்னும் தணியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சுபஶ்ரீயின் இறப்புக்குப் பிறகு சில மாதங்களா எங்கேயும் போகாம என் கணவரும் நானும் வீட்டிலேயேதான் முடங்கியிருந்தோம். தினமும் அவ நினைப்பாவே அழுதுகிட்டிருந்தேன். எனக்கு டிப்ரெஷன் அதிகமானதால, கும்பகோணத்திலிருக்கும் என் சகோதரி வீட்டுல கொஞ்ச நாள்கள் என்னைப் பார்த்துகிட்டாங்க. சக மனுஷங்களைப் பார்த்துப் பழகினா, பாரம் குறையும்னு மறுபடியும் நானும் என் கணவரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். நாங்க ரெண்டு பேரும் இயல்புநிலைக்குத் திரும்புறதுக்குப் பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும்.

சுபஶ்ரீ பெற்றோர்
சுபஶ்ரீ பெற்றோர்
dev

பொண்ணு இறந்ததிலிருந்து இப்பவரைக்கும் அவ ரூம்ல எந்தப் பொருளையும் நாங்க எடுக்கவோ இடத்தை மாற்றிவைக்கவோ இல்ல. விபத்து நடந்தப்போ அவ மாட்டியிருந்த ஹெல்மெட் உட்பட சுபஶ்ரீ சம்பந்தப்பட்ட பொருள்கள் எல்லாமே போட்டது போட்டபடியேதான் இருக்கு. அந்த ரூமும், சுபஶ்ரீ பயன்படுத்திய பொருள்களும்தாம் அவளோட ஞாபகமா இருக்கு. தினமும் அவ புகைப்படத்துக்குப் பூஜை செய்துட்டுதான் வேலைக்குக் கிளம்புவோம். தினமும் தூங்குறதுக்கு முன்னாடி அவ ரூமுக்குப் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து, அவளை நினைச்சுப் பார்ப்போம்.

கல்யாணமாகி ஆறு வருஷங்களுக்குப் பிறகு, எங்களுக்கு வரமா பிறந்த குழந்தை அவ. ஒரே பொண்ணுங்குறதால அவ மேல ரொம்பவே பாசம் வெச்சிருந்தோம். வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்யணும்; தன் கூடவே எங்களை எப்போதும் வெச்சுப் பார்த்துக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டா. ஆனா, எங்களைத் தனிமையில தவிக்க விட்டுட்டுப் போயிட்டா. உயிர் உள்ளவரை அவ இழப்பிலிருந்து எங்களால மீள முடியாது. நடைப்பிணம்போலத்தான் வாழ்ந்துட்டிருக்கோம். சின்னதா ஒரு ஸ்டேஷனரி ஷாப் நடத்திட்டிருக்கேன். அதை சுபஶ்ரீதான் எனக்கு வெச்சுக்கொடுத்தா. என் கடைக்குப் பொருள்கள் வாங்க வரும் ஸ்கூல், காலேஜ் பிள்ளைகளைப் பார்த்து மகளோட இழப்பிலிருந்து மீள முயல்கிறேன்.

சுபஶ்ரீ பெற்றோர்
சுபஶ்ரீ பெற்றோர்
dev
"நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது!" - பேனர் விவகாரம் குறித்து சுபஸ்ரீ பெற்றோர் குமுறல்

எங்களுக்கு ஆறுதலா என் அம்மா எங்களுடன் இருந்தாங்க. சில மாதங்களுக்கு முன்பு அவங்களும் இறந்துட்டாங்க. சுபஶ்ரீயின் நண்பர்கள் பலரும் இப்பவரை எங்களுக்கு நம்பிக்கையா இருக்காங்க. எப்போதும் சுபஶ்ரீ நினைப்பாவே இருக்கு. வெளியிடங்களுக்குப் போகவும் மத்தவங்களோடு இயல்பா பழகவும் சிரமமா இருக்கு. ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்...!" என்ற கீதாவின் கண்களில் மகளை இழந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் கலங்கும் நீர் பெருக்கெடுக்கிறது.

தங்களுக்கு நேர்ந்த துயரம் பிறருக்கு ஏற்படக் கூடாது என்று அக்கறையுடன் பேசுகிறார் சுபஶ்ரீயின் தந்தை ரவி. ``சுபஶ்ரீ இறப்புக்குப் பிறகு ஃப்ளெக்ஸ் பேனர் வைக்குறது தொடர்பா தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஓரளவுக்கு நடவடிக்கை எடுத்திருக்கு. ஆனா, அது இன்னும் கடுமையாக்கப்படணும். சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்வுகள்னு எதுக்கெடுத்தாலும் வீட்டு வாசல்லயும் தெருவுலயும் பேனர் வைக்குறாங்க. அதிகாரிகளால ஒவ்வொரு தெருவுக்கும் போய் யார் பேனர் வெச்சிருக்காங்களான்னு கவனிச்சுக்கிட்டே இருக்க முடியுமா? நம்ம சந்தோஷத்துக்காக, மத்தவங்களுக்குத் தொந்தரவு கொடுக்குற வகையில பேனர் வைக்குறது தவறுதானே? இந்த விஷயத்துல பொதுமக்களாகிய நமக்குத்தான் சுய பொறுப்புணர்வு அதிகம் இருக்கணும்.

சுபஶ்ரீ பெற்றோர்
சுபஶ்ரீ பெற்றோர்
dev

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில, உயரமான இடத்துலயோ, எதிர்பாராத வகையில கீழே விழுகிற மாதிரியோ பேனரை வைக்காதீங்க. சாலைப் பயணத்துல எங்கயாச்சும் பேனர் வைக்கப்பட்டிருந்தா, நான் உடனே போலீஸ்ல தகவல் சொல்லுவேன். அவங்க சம்பவ இடத்துக்குப் போய் பேனரை அப்புறப்படுத்திட்டு, எனக்குத் தகவல் சொல்லுவாங்க. பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்குறவங்களுக்கு அபராதம் விதிக்குறது, ஜாமீன்ல வெளிவரும் சட்டப்பிரிவுகள்ல வழக்குப் பதிவு செய்றதுல பெரிசா அர்த்தமே கிடையாது. இதுபோன்ற விஷயங்களை யாரும் செய்யாத வகையில, கடுமையான சட்டம் இயற்றி, தப்பு செய்றவங்களுக்கு ஜாமின்ல வெளிவர முடியாத வகையில தண்டனை கொடுக்கப்படணும்.

பேனரால ஏதாச்சும் அசம்பாவிதம் நிகழ்ந்தா, அப்போ மட்டும் பலரும் ஆதங்கத்துடன், அக்கறையுடன் குரல் கொடுக்குறாங்க. அதன் பிறகு எல்லோரும் இந்த விஷயத்தை மறந்துடுறாங்க. மகளை இழந்துட்டு நாங்க அனுபவிக்கும் வலியை, யாரும் எதிர்கொள்ள வேண்டாம்னு அனுபவத்துல சொல்லுறோம். மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு நீதிமன்றத்துல ரிட் மனு தாக்கல் செஞ்சோம். நீதிமன்றம் வழிகாட்டுதல்படி, அப்போதைய மாநகராட்சி அதிகாரிகள் எங்களைக் கூப்பிட்டுப் பேசினாங்க. பிறகு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தாங்க. அதோடு அந்த வழக்கும் முடிச்சு வைக்கப்படவே, இந்த விஷயத்தை எல்லோரும் மறந்துட்டாங்க. இனி எப்படிக் கத்திக் கூப்பாடு போட்டாலும் எங்க மக திரும்பி வரப்போறதில்ல. எங்களோட துயரத்தை எப்படி விவரிக்குறதுனே தெரியல" என்று அங்கலாய்ப்புடன் முடித்தார் ரவி.

சுபஶ்ரீ பெற்றோர்
சுபஶ்ரீ பெற்றோர்
dev

வரும் முன் தடுக்க வேண்டிய அரசு, இத்தனை உயிர்ப்பலிகள் நிகழ்ந்த பிறகு, இப்போதாவது பேனர் கலாசாரத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட குடும்பங்களின் கதறல்கள், ஆட்சியாளர்களுக்கு அழியாத களங்கத்தை ஏற்படுத்திவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு