தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தினந்தோறும் சாகசம்... திக் திக் தருணங்கள்... நிஜ ‘உயரே’ நாயகி சோனியா

சோனியா
பிரீமியம் ஸ்டோரி
News
சோனியா

என் தம்பி தான் பைலட்டாக ஆசைப் பட்டான். ஒருகட்டத்துல எனக்கும் பைலட்டாகும் ஆசை வந்தது

“வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” என்று ஆதங்கத்துடன் கேட்கும் சூர்யாவின் லட்சியத்தை நோக்கிய வெறி பிடித்த ஓட்டத்தையும், சாமானிய மக்களுக்கு விமானப் பயணம் எவ்வளவு சவாலானது என்பதையும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கண்முன் நிறுத்தியது.

விமானத்தில் பயணிப்பதுகூட நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஓரளவுக்குச் சாத்திய மாகிவிட்ட நிலையில், விமானத்தை இயக்கும் பணியானது பலருக்கும் எட்டாக் கனவுதான். அவர் களில் ஒருவரான சோனியா ஜெயின், கனவைத் துரத்திப் பிடித்து, தமிழகத்தில் இளம் வயதிலேயே பயணிகள் விமானத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற சாகச மங்கை. விமானப் போக்குவரத்துத் துறையில் தற்போது கமாண்டர் (கேப்டன்) பொறுப்பில் கலக்கும் சோனியா, சென்னைப் பெண். விமானி கேரக்டரில் பார்வதி நடித்த ‘உயரே’ மலையாளப் படத்தை நினைவூட்டு கிறது சோனியாவின் கதை.

“என் தம்பி தான் பைலட்டாக ஆசைப் பட்டான். ஒருகட்டத்துல எனக்கும் பைலட்டாகும் ஆசை வந்தது. ப்ளஸ் டூ படிக்கும்போதே, சென்னை ஏர்போர்ட்டுல கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் கோர்ஸ் படிச்சேன். ரேபரேலியில் பி.எஸ்ஸி ஏவியேஷன் கோர்ஸ் படிச்சப்போ, கமர் ஷியல் விமானங்களை இயக்குறதுக்கான எல்லாப் பயிற்சிகளையும் பெற்றேன். எங்க ஜெயின் சமூகத்துல பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. ஆனா, என் வீட்டுல எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துதான் வளர்த்தாங்க. பைலட்டா போறேன்னு தெரிஞ்சதும் சொந்தத்துலயே ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் வந்துச்சு. ஆனா, பெற்றோர் என்னை விருப்பப்பட்டதைப் படிக்க அனுமதிச்சாங்க. 2006-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துல வேலை கிடைக் கவே, சென்னைத் தலைமையிடத்தைத் தேர்வு செஞ்சேன்”

- 19 வயதிலேயே பயிற்சி விமானியாகப் பணியைத் தொடங்கிய சோனியா, கோ-பைலட்டாக ஏழு ஆண்டுகள் அனு பவத்துடன், கடந்த ஆறு ஆண்டுகளாக கமாண்டராக இருக்கிறார்

“பெண்கள் மிகக் குறைவாக இருக்குற இந்தத் துறையில, உயர்பொறுப்புலயும் ஆண்கள்தான் அதிகம் இருக்காங்க.

கோ-பைலட்டா இருக்கும்போதே, பைலட்டுடன் இணைஞ்சு விமானம் ஓட்டணும், விமான இயக்கத்துக்கான எல்லாத் தொழில்நுட்பங்களையும் கண் காணிக்கணும், சிக்கலான தருணங்கள்ல பைலட்டுடன் விவாதிச்சு ஒருமித்த முடிவுகளை விரைவா எடுக்கணும். இதையெல்லாம் சரியா கடைப்பிடிச்சதால, எனக்கான வளர்ச்சியும் நல்லபடியா அமைஞ்சது.

வெளிநாடுகளுக்கான விமானங்களைத்தான் அதிகம் ஓட்டியிருக்கேன். விமான நிலைய ஓடுபாதை யில இருந்து கிளம்பினதும், சென்றடைய வேண்டிய தூரத்தைப் பொறுத்து சராசரியா 25,000 – 40,000 அடி உயரத்துல வளிமண்டல பரப்பில் விமானத்தைச் சீரா இயக்குவோம். இப்போ உள்நாடு மற்றும் சில வெளி நாடுகளுக்கு, ஏர் பஸ் 319, 320, 321 வகை விமானங்களை சராசரியா 39,000 அடி உயரத் துல இயக்குறேன்.

எங்க வேலையில ஒவ் வொரு விஷயத்துக்கும் கால்குலேஷன் தேவைப்படும். மழைக்காலத்துல மேகக் கூட்டங்கள் அதிகம் இருக்கும். கோடைக்காலத் துல வளிமண்டலத்துல பலமான காற்று வீசும். பனிக் காலத்துல பாதை சரியா தெரியாது. இதுபோன்ற எல்லாவிதமான சவாலான சூழல்கள்லயும் சாதுர்யமா விமானம் ஓட்டின அனுபவம் எனக்கு உண்டு.

விமானத்தை இயக்கும் போது மனசுல வேறு எண்ண ஓட்டங்களும் குழப்பங்களும் இருக்கக் கூடாது. அதிகாலை, பகல், நள்ளிரவுனு விமானம் புறப்படும் நேரம் மாறுபடும். அதனால, தூக்கம், சாப்பிடுற நேரம், ஓய்வு மற்றும் குடும்பத்துக்கான நேரம் எல்லாமே அடிக்கடி மாறும்.

சோனியா
சோனியா

வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் முழு உடல் பரிசோதனையில தகுதி பெறணும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுல வெற்றி பெறணும். 15 நாள்களுக்கு ஒருமுறை எனக்கு விமான வழித்தடம் மாறும். வாரத்துல ஆறு நாள்கள் பணி, ஒருநாள் விடுமுறை. விமானத்துல ஏறிட்டா, பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களின் முதல் இலக்கு. அதுக்காக, ஒவ்வொரு நொடியும் கவனமுடன் செயல்படணும்.

கோ - பைலட்டா இருந்தப்போ, சென்னையில இருந்து நான் இயக்கிய விமானம் 34,000 அடி உயரத்துல துபாய் நோக்கிப் போயிட்டு இருந்துச்சு. எங்களுக்கு நேரெதிர்ல லங்காவை நோக்கி தவறான பாதையில இன்னொரு விமானம் வந்துச்சு. எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, வெறும்

12 நொடிகள் மட்டுமே இருந்த நிலை யில, சமயோஜிதமா முடிவெடுத் தோம். எங்க விமானம் கீழ் நோக்கி இயக்கப்பட, எதிர்ல வந்த விமானம் மேல் நோக்கி இயக்கப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுச்சு. இப்படியான த்ரில்லிங் அனுபவங் களை நிறையவே எதிர்கொண்டிருக் கேன்”

- சாகச அனுபவத்தையும் சிரித்த படியே கூறுபவருக்கு, கோவிட் காலத்தில் சவால்கள் கூடியிருக் கின்றன.

லாக்டெளன் நேரத்தில் ‘வந்தே பாரத்’ சிறப்பு விமானத்தை இயக்கியவர், பல மணிநேரம் பி.பி.இ கிட் கவச உடை அணிந்தவாறுதான் விமானங்களை இயக்குகிறார். கடந்த ஒன்றரை வருடத்தில் 40 முறைக்கும் மேல் கோவிட் பரிசோதனை செய்துகொண்டவருக்கு, ஒருமுறை கோவிட் தொற்றும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 15 வருடங்களில் 7,000 மணி நேரத்துக்கும் அதிகமாக விமானத்தை இயக்கியிருப்பவர், சிறந்த பணி சேவைக்காக மத்திய, மாநில அரசு களின் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். சிங்கப்பூர், துபாய் உட்பட 20 நாடுகளுக்கு விமானங் களை இயக்கியிருப்பவர், கமாண்டருக்கான பணித்திறனை நிறைவு செய்து, செக் பைலட் பொறுப்புக்கான புரொமோஷனுக் குக் காத்திருக்கிறார்.

உரையாடலின் இடையே இடை மறித்த மகன் ஆரவ் கும்பட்டுக்கு, ஆன்லைன் வகுப்புக்கான வழி காட்டுதல்களைக் கூறிவிட்டு தொடர்ந்தவர், “வீட்டுல இருக்கும் போது பக்கா இல்லத்தரசியா எல்லா வேலைகளையும் கவனிப்பேன். அதேசமயம், ‘உன் குழந்தையைக் கவனிச்சுக்க வீட்டுல இருக்க வேண்டியதுதானே? இனியும் வேலைக்குப் போகணுமா?’னு இன்னும்கூட எதிர்மறை பேச்சுகள் தொடருது.

விமானியா ஆரம்பிச்சு, பெரிய பொறுப்புக்கு உயர்ந்துட்ட சூழல்லயும்கூட இதுமாதிரியான பேச்சுகள் தொடர்றதுதான் சின்ன வருத்தத்தை உண்டாக்குது. ‘கரியர், வீடு ரெண்டையும் சரியா பேலன்ஸ் பண்ணிக்கோ. நீ இல்லாதப்போ வீட்டுப் பொறுப்புகளை நாங்க பார்த்துக்கிறோம்’னு கணவரும், குடும்பத்தினரும் ஊக்கம் கொடுக்குற தாலதான் ரெண்டு தளத்திலும் திறம்பட செயல்பட முடியுது”

- உற்சாகமாகச் சொல்லும் கேப்டன் சோனியாவின் முகத்தில் கம்பீரம்!