Published:Updated:

விழுப்புரம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களைய பெண் காவலர்களுக்கு ரோந்து வாகனம், லேப்டாப்!

பெண் காவலர்களுக்கு ரோந்து வாகனம்.
பெண் காவலர்களுக்கு ரோந்து வாகனம். ( தே.சிலம்பரசன். )

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இன்று விழுப்புரம் மாவட்ட பெண் காவலர்களுக்கு இருசக்கர ரோந்து வாகனம் வழங்கப்பட்டது.

நாகரிகம் வளர்ச்சி அடைந்த இந்த சமூகத்தில், பல பெண்ணிய விடுதலை போராளிகளின் போராட்டங்களுக்கு பின் பெண்கள் ஆண்களுக்கு சமம், அவர்களுக்கும் இந்த சமூகத்தில் சம உரிமைகள் உண்டு எனும் நிலை எட்டப்பட்டது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களோ குறைந்தபாடில்லை. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள், வரதட்சணை கொடுமைகள், கொலை சம்பவங்கள் போன்றவை சமூகத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அரசால், தமிழகம் முழுவதும் பெண் காவல்துறை அலுவலர்களுக்கு ரோந்து வாகனங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.ராதாகிருஷ்ணன் வாகன ஆவணங்களுடன் சாவி வழங்கும் போது.
எஸ்.பி.ராதாகிருஷ்ணன் வாகன ஆவணங்களுடன் சாவி வழங்கும் போது.

அதன்படி இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த வாகனம் வழங்கும் நிகழ்ச்சி கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி விழாவாக நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் துணை ஆய்வாளர்களுக்கும் துணைகாவல் ஆய்வாளர் அல்லாத காவல் நிலையங்களில் பெண் தலைமை கான்ஸ்டபிள்களுக்கும் இந்த ரோந்து வாகனம் (PINK PATROL) வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வாகனங்கள் தலை கவசத்துடன் வழங்கப்பட்டுள்ளன. அதோடு சேர்த்து மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கோடு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாகனத்தை பெற்ற பெண் காவலர்கள் இனி ரோந்துப் பணிகளின் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வர்.

1051 எனும் அவசர எண்ணிற்கு பெண்களோ, குழந்தைகளோ உதவி கேட்டு அழைக்கும்போது முதல்நிலை காவலராக இந்த ரோந்து காவலர்கள் இருப்பார்கள். சம்பவ இடத்தில் நடக்கும் தகவல்களை உடனடியாக பதிவேற்றம் செய்வதற்காகவே அந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண் காவலர்களுக்கு வாகனத்தையும் மடிக்கணினியையும் வழங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்.

எஸ்.பி.இன்ஸ்பெக்டர் ரேவதி.
எஸ்.பி.இன்ஸ்பெக்டர் ரேவதி.

இது தொடர்பாக எஸ்.பி. ஆய்வாளர் ரேவதியிடம் நாம் பேசியபோது, ``பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைந்து, அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தமிழக அரசின் திட்டத்தின் கீழ் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று விழுப்புரம் மாவட்டத்திலும் 18 வாகனங்கள் மடிக்கணினியோடு பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் ஒன்றாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது.

அதற்கு எதிரான நடவடிக்கைகளை சிறப்பாகவே கையாண்டு வந்தோம். குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக ரோந்து வாகனங்கள் அளிக்கப்பட்டு அதற்காகவே பிரத்யேக 1051 எனும் அவசர எண்ணும் வழங்கப்பட்டுள்ளதால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேலும் குறைக்க முடியும் என நம்புகிறோம். 1051 எனும் அவரச எண்ணை மக்களிடம் கொண்டு சேர்பதரற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு