Published:Updated:

காவல் கொடுமைகள்: பாதுகாப்பு வளையத்தில் பாரத மாதா, தமிழ்த்தாய்; பரிதாப நிலையில் நிஜ தாய்கள்!

Police (File Pic) ( Vikatan )

கடவுள்கள், கற்பனை கதாபாத்திரங்கள், உருவகங்கள், தலைவர்களின் சிலைகள் உள்ளிட்ட விஷயங்களில் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிக் கலக்கும் தமிழகக் காவல்துறை, கண்முன்னே ரத்தமும் சதையுமாக நடமாடும் பெண்களையும் அப்பாவிகளையும் ஒரு துரும்பாகக்கூட மதிப்பதில்லை.

காவல் கொடுமைகள்: பாதுகாப்பு வளையத்தில் பாரத மாதா, தமிழ்த்தாய்; பரிதாப நிலையில் நிஜ தாய்கள்!

கடவுள்கள், கற்பனை கதாபாத்திரங்கள், உருவகங்கள், தலைவர்களின் சிலைகள் உள்ளிட்ட விஷயங்களில் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிக் கலக்கும் தமிழகக் காவல்துறை, கண்முன்னே ரத்தமும் சதையுமாக நடமாடும் பெண்களையும் அப்பாவிகளையும் ஒரு துரும்பாகக்கூட மதிப்பதில்லை.

Published:Updated:
Police (File Pic) ( Vikatan )

``காவல் நிலையத்தில், பொதுமக்களை அன்போடு அணுக வேண்டும். காவலர்கள், மக்களின் நண்பர்கள் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்'' என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக டி.ஜி.பி-யான லைலேந்திர பாபு இருவரும் மாறி மாறி முழங்குகிறார்கள். ஆனால், கயவாளித்தனம் புரையோடிப்போயிருக்கும் பெரும்பாலான காக்கிகளின் மனதை அவர்களால், இம்மியளவுகூட மாற்ற முடியவில்லை.

இதோ... அவசர காலங்களில் பெண்கள், காவல்துறையின் உதவியை உடனடியாகப் பெறக்கூடிய வகையில் `காவல் உதவி ஆப்'பை கடந்த திங்கள்கிழமையன்று அறிமுகப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 60-க்கும் மேற்பட்ட வசதிகள் இதில் இருப்பதாகப் பெருமையுடன் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

`காவல் உதவி ஆப்'பை அறிமுகப்படுத்திய மு.க.ஸ்டாலின்
`காவல் உதவி ஆப்'பை அறிமுகப்படுத்திய மு.க.ஸ்டாலின்

இதையெல்லாம் நினைத்து அழுவதா... சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஆம்... கண்ணீர் மல்க காவல்நிலையங்களுக்கு ஓடிச்சென்று, கதறி அழுதாலே, மனம் கரையாத கல்நெஞ்சக் காரர்கள்தான் காவல் துறையில் நிறைந்திருக்கிறார்கள். இது, எதிர்க்கட்சியாக இருக்கும்போது தெரிகிறது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வசதியாக மறந்துவிடுகிறது அனைவருக்குமே!

கடவுள்கள், கற்பனை கதாபாத்திரங்கள், உருவகங்கள், தலைவர்களின் சிலைகள் உள்ளிட்ட விஷயங்களில் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிக் கலக்கும் தமிழகக் காவல்துறை, கண்முன்னே ரத்தமும் சதையுமாக நடமாடும் பெண்களையும், அப்பாவிகளையும் ஒரு துரும்பாகக்கூட மதிப்பதில்லை. இந்தக் காக்கிகளின் கொடுமையால் அப்பாவிகள், ஏழைக்குடும்பங்கள் குறிப்பாக, பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.

இதற்கு வரலாற்றிலிருந்தெல்லாம் உதாரணங்களைத் தேட வேண்டியதில்லை... நேற்று, அதற்கு முன்தினம், இன்று என்று தினம் தினம் காவல்நிலையக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

காவல் கொடுமை - 1

வேலூரில் கடந்த மார்ச் 16-ம் தேதி நள்ளிரவில், தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் ஒருவரை, சமூகவிரோதக் கும்பல் ஒன்று ஆட்டோவில் கடத்திச்சென்று, கூட்டுப் பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவர், இந்த விஷயம் தொடர்பாக உடனடியாகக் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. மனதளவில் பெரிதாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாகச் சொந்த ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டார்.

அதேசமயம், உள்ளூர் காவல்துறையைச் சேர்ந்த நித்யானந்தம், சுரேஷ் மற்றும் பாபு ஆகிய மூன்று காவலர்களுக்கும் தகவல் தெரிந்திருக்கிறது. அதாவது, அடுத்த நாள் இரவில் ஒரு கும்பலை வளைத்தபோது, விஷயத்தை அவர்களாகவே கூறியுள்ளனர். ஆனால், அதைப் பற்றி அந்த மூன்று காவலர்களும் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

அவர்களிடம் கிடைத்ததை வாங்கிக்கொண்டு, விஷயத்தை அப்படியே அமுக்கிவிட்டார்கள். அதேசமயம், விஷயம் எப்படியோ மீடியாக்களுக்கு கசிந்து, செய்திகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்த, உயரதிகாரிகள் உத்தரவிட்ட பிறகு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கூடவே, விஷயத்தை மூடிமறைத்த மூன்று காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நடந்தது மாபெரும் கொடுமை. ஆனால், காசை வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்ட காக்கிகளுக்கு இடமாற்றம் மட்டுமே தண்டனை. ம்... நேரடியாகச் சென்று புகார் கொடுத்தாலே வாங்கிக்கொள்ளாத கயவாளி காக்கிகள் இருக்கும் நாட்டில், தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ரொம்ப ஓவர்தானே! ஆம், இப்படி நேரடியாகப் புகார் கொடுத்தும் அது சரிவர விசாரிக்கப் படாததால், திருவாரூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த சுதாகருக்கு நேர்ந்த துயரம் ரணத்தின் உச்சம்.

காவல் கொடுமை - 2

அய்யம்பேட்டையைச் சேர்ந்த சுதாவின் குடும்பம், வறுமைக்கு வாக்கப்பட்ட பல குடும்பங்களில் ஒன்று. கணவர் சுதாகரின் இருதய சிகிச்சை செலவுகளுக்காக, தன்னுடைய சகோதரரான பிரசாந்திடம் கடன் வாங்கியிருக்கிறார். பெரும்பகுதி தொகையைத் திருப்பிக் கொடுத்த நிலையில், மீதியைத் தர தாமதமாகியிருக்கிறது. ஆத்திரம் அடைந்த பிரசாந்த் மற்றும் அவருடைய மனைவி இருவரும் மார்ச் 30-ம் தேதி சுதாவின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததோடு, சுதாவையும், இதயநோயாளியான கணவர் சுதாகரையும் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

 Police
Police
Photo: Vikatan

இதையடுத்து, பேரளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் சுதாகர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மனவேதனை அடைந்த சுதாகர், காவல்நிலைய வாசலிலேயே மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். குத்துயிரும் குலையுயிருமாகத் திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதாகர், ஐந்து நாள் மரணப்போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார்.

இப்போது இவரின் குடும்பம் நிர்க்கதியாய் கதறி அழுது கொண்டிருக்கிறது. கண்ணீர் மல்க நம்மிடம் பேசிய சுதா, `பேரளம் காவல்நிலையத்துல நாங்க கொடுத்த புகாரை வாங்கி ஒரு ஓரமா வெச்சிட்டாங்க. ஒழுங்கா நடவடிக்கை எடுத்திருந்தா... இன்னிக்கு அவருக்கு இந்த நிலை வந்திருக்காது. மனசு வெறுத்துப்போயிதான் இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சிட்டாரு. உடம்புல பெரும்பகுதி கருகிப்போயிடுச்சு. அவர் பட்ட வேதனையைப் பார்த்து துடிச்சுப்போயிட்டேன். ரெண்டு புள்ளைங்களை வெச்சுக்கிட்டு எப்படி சமாளிக்கப்போறேன்னு தெரியலை'’ எனக் கதறும் சுதாவின் பாவம், அந்தக் காக்கிகளை ஒருபோதும் சும்மா விடாது!

தமிழ்த்தாய்
தமிழ்த்தாய்

காவல் கொடுமை -3

கடந்த மார்ச் மாதம், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், உறவினரால் தாக்கப்பட்டதில் கருசிதைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் உயிருக்கே ஆபத்து என்கிற சூழலில், மருத்துவர் அளித்த சான்றிதழோடு, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால், அதை வாங்கவே மறுத்திருக்கிறார்கள் போலீஸார். ஒரு வார தொடர் முயற்சிக்குப் பிறகே புகாரை கையில் வாங்கியுள்ளனர்.

புகாரை வாங்கவே ஒருவாரம் என்றால... நடவடிக்கை? ஆம், பல வாரங்களாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், இன்னமும் உயிரைக் கையில் பிடித்தபடிதான் நடமாடிக்கொண்டுள்ளனர். அதேசமயம், கர்ப்பிணி பெண்ணைத் தாக்கிய நபரோ... தெம்பாக நடமாடிக் கொண்டிருக்கிறார் ஊருக்குள். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துக் காவல்நிலையங்களிலும் இதே அவல நிலைதான். சாமான்ய குடிமக்கள் என்னதான் கொடூரமாகப் பாதிக்கப்பட்டாலும், அவர்களுடைய கூக்குரல் களுக்கு மரியாதையே இருப்பதில்லை. புகார்கள் கொடுத்தாலும், அதை வாங்குவதற்கு காவலர்கள் தயாராக இருப்பதில்லை. இதற்கு அனைத்து மகளிர் காவல்நிலையங்களும் விதிவிலக்கல்ல.

பாரத மாதா
பாரத மாதா

அதேசமயம், பாரத மாதா, தமிழ்த்தாய் போன்ற உருவகங்கள், இதிகாச பாத்திரங்களை யாரேனும் அவமதித்துவிட்டதாகப் புகார் வந்தால்... அவ்வளவுதான், பொங்கி எழுந்து வழக்குப்பதிவு செய்யத் தவறுவதில்லை, இந்தக் காக்கிகள்! சில ஆண்டுகளுக்கு முன்பு பட பூஜை ஒன்றில் சாமி படத்தின் முன்பு, நடிகை குஷ்பு செருப்பு அணிந்து அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்து அமைப்புகள் கொதித்தெழுந்து காவல்நிலையங்களில் புகார் அளித்தன. பல்வேறு மாவட்டங்களிலும் உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2005-ம் ஆண்டு, திருமணத்துக்கு முந்தைய உடலுறவு பற்றி இதே குஷ்பு கருத்து தெரிவித்தது சர்ச்சையானது. இந்திய கலாசாரத்தையே அவமதித்துவிட்டதாகத் தமிழகம் முழுக்கப் பல்வேறு காவல்நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்படி யேசு, நபியின் புகழுக்கு களங்கம், பெரியார் சிலை உடைப்பு என்று அளிக்கப்பட்ட புகார்கள் மீதெல்லாம் ஏராளமான வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். சமீபத்திய உதாரணமாக...

கடந்த ஜனவரி 26 குடியரசு தினவிழாவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகளில் சிலர் எழுந்து நிற்கவில்லை. இதைக்கண்டு பொங்கி எழுந்த தி.மு.க-வினர், `தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் எனத் தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையை மீறியது சட்டப்படி குற்றம்' எனப் புகார் அளித்தனர்.

ரிசர்வ் வங்கி சர்ச்சை
ரிசர்வ் வங்கி சர்ச்சை

வெற்றிலைப் பாக்கு வைத்து புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வீடியோ ஆதாரங்களைத் திரட்டி, படு சுறுசுறுப்பாக, விசாரணையில் இறங்கினர். இத்தனைக்கும் அந்தப் புகார் அளிக்கப்பட்டது ஆன்லைன் மூலமாகத்தான். நேரடியாகக்கூட யாரும் வரவில்லை. பாரத மாதா, தமிழ்த்தாய் போன்ற உருவகங்களுக்கெல்லாம் உடனே நடவடிக்கையில் இறங்கும் தமிழகக் காவல்துறையினர், கண்முன் நடமாடும் நிஜ தாய்களின் புகார்களை புறக்கணிப்பதும், அதன் காரணமாக உயிர்கள் ஊசலாடுவது, பறிபோவது தொடர்கதையாக இருப்பது... அநீதியின் உச்சம். சமூகநீதிக் காவலனே நாங்கள்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க ஆட்சியிலும்கூட அதே அவலம் தொடர்வது... சமூகநீதி என்று சொல்லுக்கே அடுக்காது.