அரசியலில் பெண்களின் பகிர்வு சம அளவு இருப்பது மட்டுமே, சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் பெண்களின் தரப்பு நியாயங்கள், பெண்கள் நலத்திட்டங்கள் ஆகியவைக் குறித்த கோரிக்கைகள் உரத்து ஒலிப்பதற்கான ஒரே வழி. இதோ, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது தமிழக அரசு.
தவிர, சென்னை மாநகராட்சி வார்டுகளிலும் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசியலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் கேட்க ஆரம்பித்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. அரசியலில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவிகிதம் கேட்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்த அறிவிப்பு அரசியலில் ஈடுபாடுள்ள பெண்களுக்கு நற்செய்தி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசுகையில், ``கடந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பளித்தது அனைவருக்கும் தெரியும். இந்த அறிவிப்பு பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியே என்றாலும், ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பிருந்த தி.மு.க., அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் அப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடவில்லை. ஆனால், தற்போது தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தகுந்த விஷயம்.
நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், 40 சதவிகித இடங்களை காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு வழங்க உள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார். இப்படி பெரிய கட்சிகள் பெண்களுக்கு 50 சதவிகிதம் என அறிவித்தால்தான் மற்ற கட்சிகளுக்கும் பெண்களுக்கு 50 சதவிகிதம் தருவதற்கான ஒரு நிர்பந்தம் ஏற்படும்.

பெண்களைப் பொறுத்தவரை, இந்த வாய்ப்பை, அரசியலில் தாங்கள் அதிகம் பங்கெடுப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரம், அரசியலில் ஈடுபட விரும்புகிற மற்றும் ஈடுபடும் பெண்கள், தங்களுடைய வீட்டு ஆண்கள் தன் அரசியல் வாழ்க்கையில் தலையிடாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குக் கொஞ்சம் காலமெடுக்கும் என்றாலும், பெண்கள் அரசியலில் சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான தேவைகளும் தீர்வுகளும் கிடைக்கும்'' என்கிறார் அழுத்தமாக.