Published:Updated:

`எதிரியின் குண்டுகளுக்கு ஆண்,பெண் வேறுபாடு தெரியாது!' - அருணாச்சலில் இருந்து முதல் பெண் ராணுவ கர்னல்

`13 வருஷத்திற்கு முன் ராணுவத்தில் சேர்ந்தேன். எப்போதும் பதற்றமும், பரபரப்புமாகவே இருக்கும். இந்த நிமிஷம் உயிருடன் இருப்பது மட்டும்தான் நிஜம்'.

போனுங் டோமிங்
போனுங் டோமிங் ( twitter )

போனுங் டோமிங் என்ற பெண், அருணாசலப் பிரதேச மாநிலத்திலிருந்து இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ கர்னலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண் பாலின விகிதத்தில் பின்தங்கிய அருணாசலப் பிரதேசத்திலிருந்து ஒரு பெண் ராணுவ கர்னலாவதை, உற்சாகத்துடன் அந்த மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

போனுங் அளித்த பேட்டி ஒன்றில், ``ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது கனவு. ராணுவப் பயிற்சிக்குப் போகும்போது ஒரு பெண்ணுக்கு ராணுவப் பணிகள் சரிப்பட்டு வருமா எனப் பலரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள். போகவே வேண்டாம் என்றும் தடுத்திருக்கிறார்கள். ஆனால், நான் என்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்தேன். என் குடும்பமும் என் கனவுக்குத் துணையாக இருந்தது.

பெண் பிள்ளை என்றாலே அந்தக் குழந்தைக்குத் திருமணம் செய்து, காலகாலத்தில் பொறுப்புகளை முடிக்க வேண்டும் என்பது எல்லா அம்மாக்களுக்குமான கனவாக இருக்கும். ஆனால், என் அம்மா வழக்கமான ஒரு அம்மாவாக யோசிக்கவில்லை. என் மீது அவர்களுக்கு இருந்த எல்லா ஆசைகளையும், என்னுடைய கனவுக்காக விட்டுக்கொடுத்தார்.

நான் ஒரு பெண் அல்ல, இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன்
போனுங் டோமிங்

13 வருஷத்திற்கு முன் ராணுவத்தில் சேர்ந்தேன். எப்போதும் பதற்றமும், பரபரப்புமாகவே இருக்கும். இந்த நிமிஷம் உயிருடன் இருப்பது மட்டும்தான் நிஜம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, ராணுவ உடையை அணியும்போது நான் என் தேசத்துக்காக உழைக்கிறேன் எனும் பெருமை மனத்தில் நிற்கும்.

எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகுதான் ராணுவ கர்னலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ராணுவத்தைப் பொறுத்தவரை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் ஆண், பெண் வேறுபாடு. ஆனால், சீருடை அணிந்துவிட்டால் நாட்டைக் காக்க வந்த ஒரு வீரர் என்பது மட்டும்தான் மனதிற்குள் இருக்கும்.

நாட்டுக்காக உயிரைக் கொடுக்க துணிந்த பிறகு, ஆண் பெண் வேறுபாடு என்ன இருக்கு? இந்த நிமிஷம் போர் வந்தால்கூட துணிச்சலோடு போராடுவேன். எதிரிகளின் குண்டுகளுக்கோ, துப்பாக்கிகளுக்கோ ஆண், பெண் வேறுபாடு தெரியாது. நான் ஒரு பெண் அல்ல, இந்தியன். நான் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்பதை விட, இந்தியன் என்பதிலேயே பெருமைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

 போனுங் டோமிங் ராணுவ கர்னலாக தேர்வு செய்யப்பட்டதற்கு அருணாசல பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டு உட்படப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.