டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சில மணி நேரத்தில், இவர் தனது ட்விட்டரில் மதரீதியாகப் பலரை விமர்சித்திருந்த கருத்துகளின் ஸ்கிரீன்ஷாட்கள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட், டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக, மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தால் பிப்ரவரி 7-ம் தேதி நியமிக்கப்பட்டார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதற்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் வேளையில், இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தினரைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் சில வருடங்களாகக் கூறி வந்த கருத்துகளும், மகாத்மா காந்தியின் இறப்பு குறித்து இவர் பகிர்ந்திருந்த கருத்துகளும் இப்போது விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.
சாந்திஸ்ரீ துளிப்புடி, இஸ்லாம் மக்களை `ஜிகாதி'கள் என்றும், கிறிஸ்துவர்களை `அரிசி பைக்காக மாறியவர்கள்' என்றும் கூறியுள்ளதுடன், காந்தியின் கொலைக்கு ஆதரவாகவும், அவரை கொலை செய்த நாதுராம் கோட்சேவை பாராட்டியும் தனது ட்விட்டரில் கருத்திட்டுள்ளார்.
மேலும் இவர் ஜே என்.யு மாணவர்களை `நக்சல்கள்' எனவும், `தோல்வியாளர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவரின் ட்விட்டர் கணக்கு திங்கள்கிழமை மாலை முதல் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.
சாந்திஸ்ரீ துளிப்புடிக்கு இப்போது 59 வயது ஆகிறது. இவர் ஜே.என்.யு-வின் முன்னாள் மாணவர். அங்கு அவர் தனது எம்.பில், மற்றும் சர்வதேச உறவுகளில் பிஹெச்.டி முடித்துள்ளார். 1988-ல் கோவா பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கியவர், 1993-ல் புனே பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

தொடர்ந்து அவர் பல்வேறு கல்வி அமைப்புகளில் நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். மேலும் அவர் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) போன்றவற்றில் பணிபுரிந்துள்ளார். 29 பிஹெச்.டி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
ஜே.என்.யுவின் தற்காலிகத் துணை வேந்தராகப் பொறுப்பேற்றிருந்த எம்.ஜெகதேஷ் குமார், கடந்த வாரம் யுஜிசியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சாந்திஸ்ரீ ஜேன்.என்.யுவில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.