Published:Updated:

தனிநபர், குடும்பம், சமூகம், அரசு... பாலியல் குற்றங்கள் குறைக்கச் செய்யவேண்டியவை! - உளவியல் பார்வை

பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்

"ஆளரவமற்ற இரவுப் பயணத்தின் கடைசி பஸ். பஞ்சரானால் என்ன செய்வது... பெருமழையில் இன்ஜின் செயலிழந்தால்... இந்த முன்ஜாக்கிரதை சிந்தனை எப்போதுமே வேண்டும்"

நெடுஞ்சாலைத் தனிமை, அடர்ந்த இரவு, பஞ்சரான டூ வீலர்... உதவ வந்தவர்கள், நம்பி ஏமாந்த வலி, பாலியல் வன்கொடுமை, ரணக் கொலை! தெலங்கானா பிரியங்கா ரெட்டிக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை, அவரது நிலையிலிருந்து யோசித்துப் பார்க்க நெஞ்சம் நடுங்குகிறது. பாலியல் வன்கொடுமைக்கான வாய்ப்பு ஏற்படுவதையும் அதைத் தவிர்ப்பது குறித்தும் மனநல ஆலோசகர் அசோகனிடம் பேசினோம்.

பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்

பாலியல் வன்கொடுமைக்கான சூழல் எது?

குற்றவாளிகளுக்குப் பெரும்பாலும் சாஃப்ட் டார்கெட்தான், சுலபமானது. பலவீனமானவர்கள், அப்பாவிகள், மனச்சோர்வு உடையவர்கள், கவனமற்றவர்கள் இவர்களைத்தான் சாஃப்ட் டார்கெட்டாகக் கொள்கின்றனர். எனவே, பெண்கள் தங்களின் மனதையும் உடலையும் எப்போதும் ஆரோக்கியமாகவும் பலம் மிக்கதாகவும் வைத்திருத்தல் அவசியம். தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையில் எத்தகைய ஆதிக்கமும் நொறுங்கிப் போய்விடும்.

பாலியல் குற்றம் நேராமல் தப்பிக்க..?

ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சிந்தனையோடு இருக்கின்ற இடத்தில்தான், அசட்டுத் தைரியம் வரும். தனியாக இருப்பவரைவிடக் கூட்டாக இருப்பவர்களின் இந்தத் தைரியமே, குற்றத்தின் முதல் புள்ளி. இவர்கள், சூழலைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ள முயல்வார்கள். நமது பாதுகாப்புக்கும் நம்மைச் சுற்றி நமக்கான கூட்டம் இருப்பதுதான் சரியானது. ஆபத்தான சூழல் என்றால் தனியாகச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. ரிஸ்க்கான பகுதிகளுக்குப் போகும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவுநேரம் அதிகரிக்க அதிகரிக்கத்தான் ரிஸ்க்கும் அதிகமாகிறது. பெண்ணுக்கு மட்டுமன்றி ஆணுக்கும் பிரச்னைதான்.

பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்

முன்கூட்டி தற்காத்துக்கொள்ளும் வழிகள் என்னென்ன?

தாங்கள் செல்லும் பகுதியில் தெரிந்தவர் எவரேனும் இருந்தால், அவரிடம் தகவலைச் சொல்லி வைத்துக்கொண்டு புறப்பட வேண்டும். உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யாராகவும் இருக்கலாம். அப்படிச்செய்தால், பாதுகாப்பு தேவைப்படும் சமயத்தில் தக்க நேரத்தில் அந்தத் தகவல் போதுமானதாக இருக்கும். தனியாக வெளியே செல்லும் பெண்கள் எப்போதும் முன்ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். தனியாகச் செல்லும்போது மட்டுமல்ல, குடும்பத்துடன் நண்பர்களுடன் எங்கே சென்றாலும், எப்போதும் இந்த முன்ஜாக்கிரதை உணர்வு வேண்டும்.

எந்தச் செயல்பாட்டுக்கும் சில ஆப்ஷன்கள் வைத்துக்கொள்ள வேண்டும். ஆளரவமற்ற இரவுப் பயணத்தின் கடைசி பஸ். நாம் அதில் பயணிக்கிறோம். அந்த பஸ் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது... பெருமழையில் இன்ஜின் செயலிழந்து நின்றுவிட்டால் என்ன வழி... இதுபோன்ற முன்ஜாக்கிரதை சிந்தனை எப்போதுமே இருக்க வேண்டும். இது முடியாவிட்டால் அது... என, உடனடியாக முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு இதைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

பாலியல் குற்றங்களைக் குறைக்க என்ன செய்வது?

முதலில், குழந்தை வளர்ப்பிலிருந்து தொடங்க வேண்டும். தாய் தன் பிள்ளையை வளர்க்கும்போதே பெண்ணும் ஆணும் சமம்தான், பேதமில்லை எனச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்பவர்கள்தான், நல்லெண்ணம் மேலோங்கி உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிந்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் முதலில் பாலியல் கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, ஜாக்கிரதை உணர்வைச் சொல்லித் தர வேண்டும். ஆனால், ஆசிரியர்கள், காவலர்கள் எனப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். இந்தக் கொடியநிலை மாற, எல்லோரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய கட்டாய மாற்றம் இது!

பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்

பாலியல் வன்கொடுமையின் உளவியல் என்ன?

பாலியல் உணர்வு விஷயத்தில் யாருமே இச்சையின் வடிகால் தேடுவார்கள். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி எது என்று சொல்ல முடியாது. இருந்தாலும், வயதும்கூட இங்கே கவனிக்க வேண்டியதே. சிறுவர்களின் இளைஞர்களின் இச்சை உணர்வை, அவர்கள் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். பையன் வெளிப்படையாக இருப்பான். பாலியல் உணர்வு தூண்டப்படுவதை, அவனது முகம் காட்டிக் கொடுத்துவிடும். அப்பட்டமாக முகத்தில் வெளிப்படுத்துவார்கள். மறைக்கத் தெரியாது. ஆனால், வயதான அப்பா தாத்தா போன்றவர்கள் முகத்தில் உணர்வைக் காட்ட மாட்டார்கள். சமயம் வாய்க்கும்போது, அதைப் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்பார்கள். அவர்களுள் பெரும்பாலானவர்கள், வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களே. தப்பினால் தப்பில்லை என்று சுஜாதா சொல்வார். விபத்து என்பது நாம் தப்புசெய்வது என்பதைத் தாண்டி, பிறரிடமிருந்து தற்காத்துக் கொள்ளத் தவறுவது. தற்காத்துக் கொள்ளுதலே குற்றங்களைத் தவிர்க்கும் வழி.

பெண்ணுக்கெதிரான குற்றங்கள் நேராமல் தவிர்க்க?

ரிஸ்க்கான தருணங்களை எப்படிச் சமாளிப்பது என்ற சமயோசித ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். குற்றங்களில் ஈடுபடத் துணிந்தவர்களின் முதல் ஆயுதம், கவனத்தைச் சிதறடித்தல். பர்சில் பணத்தை எடுத்துக்கொண்டிருப்போம், 'நூறு ரூபாய் கீழே விழுந்துவிட்டது' என்று ஒருவர் வந்து சொல்லுவார். கீழே குனிந்திருப்போம், பர்ஸ் திருடப்பட்டிருக்கும். எல்லாக் குற்றங்களும் கவனச் சிதறல்களிலிருந்து தொடங்குபவையே. உஷார் மனநிலை வேண்டும்.

பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்

பெண்ணுக்கெதிரான குற்றங்கள் தவிர்க்க அரசு என்னென்ன செய்யலாம்?

மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குக் காவலர்கள் உதவ வேண்டும். ஆபத்தான சூழலில் கண்காணிப்புக்கு ஏதேனும், யாரேனும் இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை வலுவாக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள்தான் இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் மிகப்பெரிய கருவியாக உள்ளன. முடிந்தளவுக்கு நெடுஞ்சாலையின் எல்லாப் பகுதிகளையும் பதிவு செய்யும்படி கேமராக்கள் அமைத்துக் கண்காணிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கென எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் உதவி எண்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

பாலியல் வன்கொடுமை சூழலில் யாரிடம் உதவி கேட்பது?

உதவிக்கு வருபவர்களை நம்புவது எப்போதுமே நல்லதுதான். ஆனால் நேரம், ஆள், அணுகுமுறை இவற்றைப் பொறுத்து, நாம் நம்மை உஷார்படுத்திக்கொள்ள வேண்டும். சூழல் சரியாக இல்லை என்ற நிலையில் முதல் சாய்ஸாக, அருகிலுள்ள தெரிந்தவர்களுக்குத் தகவல் கொடுப்பது அல்லது குற்றத்துக்கான வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தால் எந்தவிதத் தயக்கமும் இன்றி காவல்துறையின் எண்ணுக்கு அழைத்து தெரியப்படுத்துவதுதான் சூழலைப் பாதுகாப்பாகக் கடக்கும் வழி.

பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்

பாலியல் அசம்பாவிதங்கள் நேர்வதைத் தவிர்த்து தற்காத்துக்கொள்ள?

திருட்டு, வாகன விபத்துக்கு மட்டும்தான் பாதுகாப்பு எண் என்பதல்ல. அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதுதான் காவல்துறையின் முதல் கடமை. அதைக் காவலர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை என்றுமே உண்டு. சூழலறிந்து உதவி எண்ணில் தகவல் தெரிவித்துவிட்டால், ஆபத்து நேர்வதற்குள் காவல்துறை கட்டாயம் நெருங்கியிருக்கும். தொலைபேசி அணைக்கப்படுவதற்குள் ஜிபிஎஸ் ட்ரேஸ் செய்து தேடிவரும் வாய்ப்பும் இருக்கிறது. ஆபத்து காலக் காப்பாளர்கள் காவல்துறையினர்தான். அவர்களை நம்பி நமது பாதுகாப்புத் தேவையை முன்கூட்டியே தெரிவித்துவிடுவது நல்லது. அசம்பாவிதம் ஏற்படுத்துபவர்கள், போலீஸ் வந்துவிடுமே என பயப்படுவார்கள். அந்த பயத்தை ஏற்படுத்துவதுதான் குற்றம் நிகழ்வதைத் தள்ளிப்போடும் வழி.

பாலியல் குற்றங்களின் புறக்காரணங்கள்?

"ஜனத்தொகை கோடிக்கணக்கில் இருந்தாலும், Passing Population ஆக இருப்பதுதான் குற்றம் தொடர்வதன் காரணம். மக்கள் வெறுமனே கடந்துசென்று கொண்டேதான் இருக்கிறார்கள், சம்பவத்தையும் செய்தியையும். இதுவே குற்றவாளிகளுக்குச் சாதகமாக்குகிறது."

மனநல மருத்துவர் அசோகன்
மனநல மருத்துவர் அசோகன்

பாலியல் குற்றமிழைப்பவர்களைக் கொல்ல வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்... மரணதண்டனை தீர்வாகுமா?

அது, மக்களின் ஆவேசத்தால் எழும்பும் கருத்துகள். பாலியல் குற்றங்களில் எந்தவிதத் தலையீடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது. எந்தச் சார்புமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மரண தண்டனை அல்ல; தாமதமற்ற நீதிதான் குற்றவாளிகளைப் பயமுறுத்தும் பெரிய தண்டனை!

அடுத்த கட்டுரைக்கு