Published:Updated:

``சந்தோஷத்துல என்னையே கிள்ளிப் பார்த்தேன்!” - ஒருநாள் போலீஸ் அதிகாரியாகப் பதவியேற்ற கல்லூரி மாணவி

ஒருநாள் போலீஸ் - மாணவி நிவேதா

``பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் என்.சி.சி மாணவியான நிவேதாவை தேர்வு செய்தோம். குழந்தை பருவத்திலேயே தாயை இழந்த அவர் தந்தை மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கல்லூரி படிப்பு வரை வந்திருக்கிறார்.” - இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்

``சந்தோஷத்துல என்னையே கிள்ளிப் பார்த்தேன்!” - ஒருநாள் போலீஸ் அதிகாரியாகப் பதவியேற்ற கல்லூரி மாணவி

``பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் என்.சி.சி மாணவியான நிவேதாவை தேர்வு செய்தோம். குழந்தை பருவத்திலேயே தாயை இழந்த அவர் தந்தை மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கல்லூரி படிப்பு வரை வந்திருக்கிறார்.” - இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்

Published:Updated:
ஒருநாள் போலீஸ் - மாணவி நிவேதா

பெண்களின் பிரதிநித்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் அதனை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் கொண்டாட வேண்டும் என்று நினைத்த புதுச்சேரி காவல்துறை, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவரை ஒருநாள் கௌரவ நிலைய அதிகாரியாக (Station House Officer) நியமிக்கலாம் என்று முடிவெடுத்தது. அதற்காக, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவரும் நிவேதாவை தேர்வு செய்தது. மார்ச் 8-ம் தேதி மாணவி நிவேதாவை ஒருநாள் நிலைய அதிகாரியாக நியமித்த காவல்துறை, அவரை ரோல்கால் செய்ய வைத்து கள ஆய்வுக்கும் அனுப்பியது. போலீஸ் ஜீப்பில் கள ஆய்வு செய்த மாணவி நிவேதாவுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

ஒருநாள் போலீஸ் - மாணவி நிவேதா
ஒருநாள் போலீஸ் - மாணவி நிவேதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ச் 8-ம் தேதி காலை என்.சி.சி உடையில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்ற மாணவி நிவேதாவை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனும், எஸ்.ஐ சிவப்பிரகாசமும் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவரை காவல்நிலைய அதிகாரி இருக்கையில் அமரவைத்தனர். அதையடுத்து அவர், காவலர்களுக்கான ரோல் காலில் பங்கேற்று காவல்துறை பணிகள் என்ன என்பதை தெரிந்துகொண்டார். தொடர்ந்து காவல்நிலையத்தில் உள்ள அறைகளைப் பார்வையிட்டு, ஆவணங்களை அறிந்துகொண்டார். பின்னர் காவல்துறை ஜீப்பில் ஏறிச் சென்று, புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையத்துக்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களை விசாரித்து அதன் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாணவி நிவேதாவுக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், ``படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவி நிவேதா, என்.சி.சி-யில் கேடட் சார்ஜென்ட்டாக இருக்கிறார். இவருக்கு இந்த கௌரவ நிலைய அதிகாரி பதவியை அளித்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் புதிய முயற்சியானது நாளைய இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கும் பெண்களை ஊக்குவிப்பதுடன் பெண்களுக்கான அதிகாரத்தையும் வழங்கும்.

பெண்கள் காவல் அதிகாரியாகப் பொறுப்பெடுக்கும்போது, பெண்களின் பாதுகாப்பு, அதற்கு உண்டான நடவடிக்கைகள், மாற்றங்கள் ஆகியவற்றை அதிகமாகக் கொண்டுவரலாம். அதற்கு, நிவேதாவுக்கும், மற்ற இளம் பெண்களுக்கும் இந்த ஒரு நாள் முயற்சி ஊக்குவிப்பாக அமையும். வரும் காலங்களில் பெண்கள் அதிகாரத்துக்கு வந்து மேலும் முன்னேற, இது உத்வேகம் கொடுக்கும். மேலும் இந்த முயற்சி காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் போக்கும். காவல்துறையின் மீது நம்பிக்கையும் வளரும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

புதுச்சேரி சீனியர் எஸ்.பி தீபிகாவுடன் மாணவி நிவேதா
புதுச்சேரி சீனியர் எஸ்.பி தீபிகாவுடன் மாணவி நிவேதா

இந்த முயற்சி குறித்து நம்மிடம் பேசிய முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ``மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் ஒருநாள் நிலைய அதிகாரியாக மாணவி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சீனியர் எஸ்.பி தீபிகா ஆலோசனை வழங்கினார். அவரது ஆலோசனைப்படி உலக மகளிர் தினத்தன்று காலை முதல் மாலை வரை மாணவி ஒருவரை நிலைய அதிகாரியாக நியமித்து இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்த திட்டமிட்டோம். அதன்படி பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் என்.சி.சி மாணவியான நிவேதாவை தேர்வு செய்தோம்.

சிறுவயதிலேயே தாயை இழந்த நிவேதா தந்தை மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கல்லூரி வரை வந்திருக்கிறார். ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட நிவேதா நன்கு படிக்கக் கூடிய மாணவி. அதனால் எதிர்காலத்தில் அவர் நல்ல ஒரு ரோல் மாடலாக இருப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதனால்தான் அவரை நியமித்தோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், வைத்தியநாதன் - கலைவாணி தம்பதியின் மகளான நிவேதாவிடம் பேசினோம். ``திடீர்னு ஒருநாள் எங்க பிரின்சிபல் மேடம், `மீட்டிங் இருக்கு வா'ன்னு என்னைக் கூப்பிட்டாங்க. அப்போது அங்கு வந்திருந்த முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனோட இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் சார் என்னை இன்டர்வியூ பண்ணினார். அப்பா, அம்மா, குடும்பப் பின்னணி, படிப்புனு எல்லாத்தைப் பத்தியும் விசாரிச்சாரு. அதுக்கப்புறம் மகளிர் தினத்துக்காக என்னை ஒருநாள் நிலைய அதிகாரியா அப்பாயின்ட் பண்ணப் போறோம்னு அவர் சொன்னதும், என்னால நம்பவே முடியல.

என்.சி.சி கேம்பில் என் சூப்பர் சீனியர் எங்களுக்கு கமாண்ட் கொடுப்பாரு. அதேபோல கமாண்ட் கொடுக்கணும்னு எனக்கும் ஆசை. அதுக்காக நான் எவ்வளவோ காத்திருந்தும், அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கல.

ஒருநாள் போலீஸ் - மாணவி நிவேதா
ஒருநாள் போலீஸ் - மாணவி நிவேதா

என்றாலும், இந்த வாய்ப்பு இல்லைன்னா வேறு ஒரு வாய்ப்பு கண்டிப்பா கிடைக்கும்னு திரும்ப திரும்ப முயற்சி செய்துகிட்டே இருந்தேன். அப்போதான், பெரிய பெரிய அதிகாரிகளுக்கே கமாண்ட் கொடுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் அப்படீங்கிறது எவ்வளவு பெரிய பதவி. அதில் நானான்னு என்னை நானே கிள்ளிப் பாத்துக்கிட்டேன்.

அன்று காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் போனதும் எனக்கு ரொம்ப சிலிர்ப்பா இருந்துச்சி. காலையில் 8 மணிக்கு யார் யார் எங்கே போகணும்னு எல்லாருக்கும் ரோல்கால் கொடுத்துட்டு இன்ஸ்பெக்டர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினேன். அங்கிருந்த அதிகாரிகள் ஸ்டேஷனோட அன்றாட நடவடிக்கைகள் எல்லாத்தையும் எனக்குப் புரியற மாதிரி பொறுமையா சொன்னாங்க. அதேபோல ஜெனரல் டைரி, சி.எஸ்.ஆர் பற்றியும் எஃப்.ஐ.ஆர் எப்படி எழுதணும்னும் விளக்கமா சொன்னாங்க.

அதுக்கப்புறம் ரோல்காலில், நான் அனுப்பியவங்க எல்லாம் சரியா வேலை செய்றாங்களான்னு போலீஸ் ஜீப்ல எல்லா ஜங்ஷனுக்கும் போய் பார்த்துட்டு மறுபடியும் ஸ்டேஷனுக்கு வந்தேன். அங்க இருந்த ஃபைலை எல்லாம் ஆய்வு பண்ணேன். போலீஸ் அப்படீங்கறது எவ்வளவு பொறுப்புள்ள பதவின்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். அங்கிருந்த எல்லா அதிகாரிகளும் என்கிட்ட ரொம்ப அன்பா, ஃபிரண்ட்லியா நடந்துக்கிட்டாங்க. ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன் சார், எஸ்.பி தீபிகா மேடம் வந்து வாழ்த்துகள் சொன்னாங்க. அன்னைக்கு ஒருநாள் முழுக்க எனக்குக் கனவு மாதிரியே இருந்துச்சு. யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு.

புதுச்சேரியில் இதுவரைக்கும் இப்படி கௌரவ ஸ்டேஷன் ஹவுஸ் ஆஃபிஸர் போஸ்டிங் கொடுத்தது கிடையாது. முதல் முறையா எனக்குக் கிடைச்சிருக்கு. ஒருநாள்தான் ஸ்டேஷன் ஹவுஸ் ஆஃபீசரா இருந்தேன். ஆனா அந்த ஒருநாளில் சமூகத்தில் எனக்கான பொறுப்பை முழுமையாக உணர்ந்தேன்.

குடும்பம், குழந்தைகளை விட்டுட்டுத்தான் போலீஸ் நமக்காக 24*7 வேலை செய்யுறாங்க. நாம எல்லாரும் தனிமனித ஒழுக்கத்துடன் நடந்துகொண்டால் அவங்களோட பணிச்சுமையைக் குறைக்கலாம். எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்யணும் என்ற எண்ணத்தை எனக்குள் அந்த ஒருநாள் அனுபவம் ஏற்படுத்தியிருக்கு” என்றார் நம்பிக்கையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism