Published:Updated:

``முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது!'' - மோடி

‘முத்தலாக மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கமல், சச்சின் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மோடி அழைப்பு!
கமல், சச்சின் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மோடி அழைப்பு!

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருகிறது. முந்தைய பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் இந்தச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போது இந்த மசோதாவில் உள்ள சில ஷரத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில அம்சங்களை நீக்கிய பிறகு அப்போது மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் பா.ஜ.க கூட்டணிக்கு அப்போது பெரும்பான்மை இல்லாததால் இந்தச் சட்டம் நிறைவேறுவதில் சிக்கல் இருந்தது. தற்போது மீண்டும் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க அரசு முனைப்பு காட்டியது. அதன்படி முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மோடி
மோடி

இதையடுத்து மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். முத்தலாக் மசோதாவிற்கு எதிராக அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. முத்தலாக் சட்ட திருத்தம் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99 பேர் ஆதரவும், 84 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, "முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும் முத்தலாக் தடை சட்டம் உதவும். முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்து வாக்களித்த கட்சிகளுக்கும், எம்பிக்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது நாடே திருப்தியடைந்த ஒரு தருணம். பாலின சமத்துவத்திற்கான பயணத்தில் முத்தலாக் தடை மசோதா மைல் கல்லாக அமையும்!” எனத் தெரிவித்துள்ளார்.