Published:Updated:

`ட்ரோல் செய்வதற்காகவே ஃபாலோ செய்தார்கள்!’- ட்விட்டரிலிருந்து குஷ்பு வெளியேறியது ஏன்?

ட்விட்டர் பயன்படுத்துவதில் நன்மைகளை விட தீமைகள்தான் நிறைய இருக்கு என்பதை நான் அனுபவரீதியாகச் சொல்கிறேன்.

குஷ்பு
குஷ்பு

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் செலிபிரிட்டிகளில் ஒருவர் நடிகை குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு பா.ஜ.க கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும், தன்னுடைய அரசியல் செயல்பாடுகள் குறித்தும், எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் கருத்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

``2 நிமிடப் புகழுக்கு அலைபவர்கள்..."- மகளைக் கிண்டலடித்த நபரால் கொதிக்கும் குஷ்பு!
குஷ்பு
குஷ்பு

மதம் சார்ந்து தனிப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளான போது கூட `ஆம் நான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவள்தான்’ என்று கூறி குஷ்பு சுந்தர் என்று இருந்த ட்விட்டர் கணக்கை,'குஷ்பு சுந்தர் பா.ஜ.கவினருக்கு நக்கத் கான்' என்று பெயர் மாற்றம் செய்து தன்னை விமர்சித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்தவர்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 1.3 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட குஷ்பு, நேற்று திடீரென்று, எந்தக்காரணமும் தெரிவிக்காமல் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியேறி உள்ளார். இது குறித்து குஷ்புவிடம் பேசிய போது, ``நான் நானாக இருக்க விரும்புகிறேன். ட்விட்டர் பக்கத்தில் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. உண்மையைச் சொல்லணும்னா என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்தவர்களில் மிகவும் குறைந்த நபர்கள்தான் என்னுடைய ரசிகர்கள். சிலரின் செயல்பாடுகளே அதை எனக்கு உணர்த்தியிருக்கிறது. ட்ரோல் செய்வதற்காகவே ஃபாலோ செய்வர்கள் அதிகம், ட்விட்டர் பயன்படுத்துவதில் நன்மைகளை விட தீமைகள்தான் நிறைய இருக்கு என்பதை நான் அனுபவரீதியாகச் சொல்கிறேன்.

ட்விட்டர்
ட்விட்டர்

ட்விட்டர் பயன்படுத்த நம்முடைய முகவரி தேவையில்லை, அடையாளம் காண முடியாது என்பதற்காக பலர் தரமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர். பொது வாழ்வில் இருக்கும் பெண்களை விமர்சிக்க பயன்படுத்தும் வார்த்தைகளை, அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் பார்த்து உபயோகிப்பார்களா?.

இது போன்ற தரமற்ற விமர்சனங்கள் வரும் சூழலில் நான் என் இயல்பை மீறி பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அந்த டென்ஷன் தேவையில்லைனு தோணுச்சு. கடவுள் எனக்கு கொடுத்திருக்க குடும்பத்தோடு நிம்மதியா வாழவிரும்புறேன் அதனால்தான் ட்விட்டரிலிருந்து வெளியேறிட்டேன். என்னுடைய உண்மையான ரசிகர்கள் வெவ்வேறு வழிகளில் எப்போதும் என்னுடன் இணைப்பில்தான் இருப்பார்கள். 

குஷ்பு
குஷ்பு

ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேறிட்டாங்க. இனி குஷ்பு அரசியல் பேச மாட்டாங்க என்பது இல்ல. அரசியல் பேச ட்விட்டர் தாண்டி எத்தனையோ இடங்கள் இருக்கு. குஷ்புவின் அரசியலை இனி செயல்பாடுகளில் பார்ப்பீங்க" என்றார். கடந்த சில தினங்களுக்கு முன் குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் அவருடைய இரண்டாவது மகளை சிலர் தகாத வார்தைகள் பயன்படுத்தி விமர்சித்திருந்தனர், அவர்களுக்கும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்திலேயே கடுமையான பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.