Published:Updated:

``நான் இந்தப் பூமிக்குச் சொந்தமானவள்!" - அன்னை தெரசா! #RememberingMotherTeresa

தெருக்களில், மரணித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இடமளித்தார் தெரசா. இடம் போதவில்லை; கல்கத்தாவின் (கொல்கத்தா) தலைமைச் சுகாதார அதிகாரியைச் சந்தித்து, இடம்கோரினார். காளிகாட் என்ற கோயிலின் மண்டபம் அவருக்கு அளிக்கப்பட்டது. `பிறர் அன்பின் பணியாளர்' அமைப்பின் முதல் இல்லம் அதுதான்!

Mother Teresa
Mother Teresa ( Raghu Rai / Magnum Photos )

1948. கல்கத்தாவின் குடிசைப் பகுதிகளுக்குள், வெள்ளைச் சேலை அணிந்திருந்த கிறித்துவப் பெண் துறவி ஒருவர், `ஏழைகளிலும் ஏழைகளுக்காக'ச் சேவை செய்யும் நோக்கில் நுழைந்தார். அவரது வெள்ளைச் சேலையின் ஓரத்தில் நீல நிறத்தில் கோடுகள் போடப்பட்டிருக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெண் தன் சேவைகளுக்காகத் தனி அமைப்பைத் தொடங்கினார். கல்கத்தாவில் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, `பிறர் அன்பின் பணியாளர்' (Missionaries of Charity) என்றழைக்கப்பட்டது. அந்த அமைப்பைத் தொடங்கிய அந்தக் கிறித்துவத் துறவிப்பெண், அன்னை தெரசா.

`பிறர் அன்பின் பணியாளர்' (Missionaries of Charity) அமைப்பு பசியால் வாடுபவர்கள், உடையின்றி வாழ்பவர்கள், வீடற்றவர்கள், நடைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள், பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள், யாராலும் வேண்டப்படாதவர்கள், யாராலும் விரும்பப்படாதவர்கள், யாராலும் கவனிக்கப்படாதவர்கள், சமூகத்திற்குப் பாரமெனக் கருதி, விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்காகத் தொடங்கப்பட்டது.

கல்கத்தாவின் குடிசைப்பகுதிகளில் ஏழைகளுக்காகப் பணிசெய்த அன்னை தெரசா இந்தியாவில் பிறந்தவர் அல்ல. தற்போதைய வடக்கு மேசிடோனியாவில் பிறந்தவர். அவர் பிறந்தபோது, அவரது பெற்றோர் சூட்டிய பெயர், ஆக்னஸ் கோன்ஜா போன்ஜாஷ்யு. சிறுவயதிலேயே, கிறித்துவ மதத்தின் மீது தீவிர ஈடுபாடுகொண்டிருந்த அவர், அயர்லாந்தின் `லொரெட்டோ சகோதரிகள்' என்ற அமைப்பில் இணைந்து, மதத்தைக் கற்றுக் கொண்டார். அந்த அமைப்பின் கட்டளையை ஏற்று, இந்தியாவில் டார்ஜிலிங் வந்தார், ஆக்னஸ்.

மதம் பற்றிய கல்வி முடிந்த பிறகு, துறவியாகத் தன் வாழ்க்கையைத் தொடர முடிவுசெய்த ஆக்னஸ், தன் பெயரைத் `தெரசா' என மாற்றிக்கொண்டார். புவியியல் ஆசிரியராக, தேவாலயம் நடத்திய புனித மேரி பள்ளியில் பணியைத் தொடங்கிய அவர், பிற்காலத்தில் அந்தப் பள்ளியின் முதல்வரானார்.

Mother Teresa
Mother Teresa
Terry Fincher/ Hulton Archive / Getty Images

துறவிப் பெண்ணான அவர், தனது 36 வயதில், மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்தார். பிரிட்டிஷ் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் வங்காளத்தில் மாபெரும் பஞ்சம் ஏற்படக் காரணமாக அமைந்தன. அதே நேரத்தில், வங்காளம் இந்தியப் பிரிவினையால் துண்டானது. எளிய மக்கள் உணவு, உடை, வீடு என அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லாமல் மடிந்தனர். தெரசாவின் பார்வை அவர்களை நோக்கித் திரும்பியது. கிறித்துவத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவரான அவர், ஏழைகளுக்காக உழைப்பதே கடவுள் தனக்களித்த பணி என்று உறுதியாக நம்பினார். `பிறர் அன்பின் பணியாளர்' (Missionaries of Charity) அமைப்பு தொடங்கப்பட்டது.

அன்றைய கல்கத்தாவில் இருந்த மருத்துவமனைகள், ஆதரவற்றவர்களுக்கு இடமளிக்கவில்லை. தெருக்களில், மரணித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இடமளித்தார் தெரசா. இடம் போதவில்லை; கல்கத்தாவின் தலைமைச் சுகாதார அதிகாரியைச் சந்தித்து, இடம்கோரினார். காளிகாட் என்ற கோயிலின் மண்டபம் அவருக்கு அளிக்கப்பட்டது. `பிறர் அன்பின் பணியாளர்' (Missionaries of Charity) அமைப்பின் முதல் இல்லம் அதுதான்!

அன்னை தெரசா - பிறப்பு முதல் `புனிதர்' ஆனது வரை!
அன்னை தெரசா - பிறப்பு முதல் `புனிதர்' ஆனது வரை!
Vikatan Infographics

ஆதரவற்று, தெருவில் மரணித்துக்கொண்டிருப்பவர்களுக்காகத் தொடங்கப்பட்ட இல்லம், அடுத்த பத்தாண்டுகளுக்குள், தொழுநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், குழந்தைகள், உணவுக்கூடங்கள் என விரிவடைந்தது. அன்றைய கல்கத்தாவின் ஒவ்வொரு முக்கியப் பகுதிகளிலும், அன்னை தெரசாவின் இல்லங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன.

அன்னை தெரசாவின் சேவை உலகம் முழுவதும் பரவியது. `பிறர் அன்பின் பணியாளர்' (Missionaries of Charity) அமைப்பின் பெயரில் உலகம் முழுவதும் பாதிரியார்கள், மதப் போதகர்கள் தலைமையில் சிறிய அமைப்புகள் தொடங்கப்பட்டன. உலக அமைப்புகள், அரசுகள் தங்கள் உயரிய விருதுகளை அன்னை தெரசாவுக்கு அளித்தன.

நான் பிறப்பால், அல்பேனியாவைச் சேர்ந்தவள்; குடியுரிமையால், இந்தியர்; இறைநம்பிக்கையால், கத்தோலிக்கத் துறவி; ஆனால் நான் இந்தப் பூமிக்குச் சொந்தமானவள்.
அன்னை தெரசா
Mother Teresa
Mother Teresa
HT

போர்க்காலங்களில் ஆதரவற்றுக் கிடந்தவர்களையும் நோக்கிப் பயணித்தன, அன்னை தெரசாவின் கால்கள். பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான போரில், இருதரப்பினரிடமும் பேசி, 37 குழந்தைகளை நேரடியாகச் சென்று மீட்டார் தெரசா. இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு, மும்பைக் குண்டுவெடிப்பு, மஹாராஷ்ட்ரா பூகம்பம் முதலான மக்கள் பாதிப்படைந்த பெரு நிகழ்வுகள் அனைத்திலும் முன்னின்று, மக்கள் சேவையில் ஈடுபட்டார் தெரசா.

வயோதிகம், இருதயப் பிரச்னைகள் முதலானவற்றால் பாதிக்கப்பட்ட அன்னை தெரசா, 1997-ம் ஆண்டு, செப்டம்பர் 05- அன்று மரணித்தார். கல்கத்தாவில், அரசு மரியாதையுடன் அவர் அடக்கம் செய்யப்பட, இந்திய அரசு துணை நின்றது. வாடிகன் கத்தோலிக்கத் திருச்சபை தெரசாவை, `அருளாளர்' எனவும், `புனிதர்' எனவும் பின்னாள்களில் கௌரவப்படுத்தியது.

Mother Teresa's Death
Mother Teresa's Death
AFP

அன்னை தெரசாவின் பொது வாழ்வில் அவர்மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்துத்துவ அமைப்புகள் அன்னை தெரசாவின் நோக்கம் மதமாற்றம் மட்டுமே, எனக் குற்றம்சாட்டின. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, தெரசாவின் மரணத்தின்போது, அரசு மரியாதை அளிக்கப்படக் கூடாது எனப் பகிரங்கமாக அறிவித்தது.

மத அடிப்படையில் இப்படியான விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, உலகம் முழுவதும் தனது அமைப்புக்கு நிதிபெற்ற அன்னை தெரசா, வாட்டிகன் திருச்சபையின் முடிவுகளை நிறைவேற்றுபவராக மட்டுமே இருந்தார் என அவர் வாழும் காலத்திலேயே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. `நரகத்தின் தேவதை' என பிரிட்டிஷ் நாட்டின் `சேனல் 4' ஊடகம் அவரைப் பற்றி ஆவணப்படம் வெளியிட்டது. மக்களால் வெறுக்கப்பட்ட கொடுங்கோலர்களிடம் விருதுபெற்றபோது, அவர்களைப் பாராட்டியது, நோயாளிகளைப் பராமரிப்பதில் ஏற்படும் சுகாதார முறைகேடுகள், பெரு நிறுவனங்களிடம் நிகழ்ந்த பணப் பரிவர்த்தனைகள் எனப் பலவற்றைப் பேசியது அந்த ஆவணப்படம். அதற்கு அன்னை தெரசா சொன்ன பதில் - `நான் அவர்களை மன்னித்துவிட்டேன்!'

Mother Tereasa - Vajpayee
Mother Tereasa - Vajpayee
AFP

துறவியாக இருந்த தெரசாவுக்குக் கருத்தடை, கருக்கலைப்பு, விவாகரத்து, மறுமணம் முதலானவற்றில் அடிப்படைவாதக் கருத்துகளே இருந்தன. வெளிநாடுகளில் இவற்றைப் பேசிய அன்னை தெரசா, இந்தியாவில் நேரெதிராக இருந்தார். அவர் மத நல்லிணக்கம் பேசினார்; கிறித்துவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுத்தார்.

அன்னை தெரசா மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் மூன்றாம் உலக நாடுகளில் வேறு யாரும் செய்யாத பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். தெரசாவின் புறச்சூழல்களும், அரசியலும் வெவ்வேறானவையாக இருந்தாலும், அவர் செய்த பணி, இந்த நூற்றாண்டில் யாரும் செய்யாதது. அதுவே அவரைப் `புனிதர்' என்றழைக்கச் செய்கிறது.