Published:Updated:

Neerja Bhanot: கடத்தப்பட்ட விமானம்; பயணிகளைக் காத்த 22 வயது விமானப் பணிப்பெண் - இது நீர்ஜாவின் கதை!

Neerja Bhanot | நீர்ஜா பனோட்

அவர் நினைத்திருந்தால் அவசரக்கால வழியைத் திறந்தபோதே ​​​​சரட்டிலிருந்து கீழே சரிந்த முதல் ஆளாக அவரே இருந்திருக்கலாம். ஆனால் அவர்தான் அப்போது விமானத்திலிருந்த சீனியர் என்பதால் பயணிகளைக் காப்பதே தன் பணி என்று நம்பினார்.

Neerja Bhanot: கடத்தப்பட்ட விமானம்; பயணிகளைக் காத்த 22 வயது விமானப் பணிப்பெண் - இது நீர்ஜாவின் கதை!

அவர் நினைத்திருந்தால் அவசரக்கால வழியைத் திறந்தபோதே ​​​​சரட்டிலிருந்து கீழே சரிந்த முதல் ஆளாக அவரே இருந்திருக்கலாம். ஆனால் அவர்தான் அப்போது விமானத்திலிருந்த சீனியர் என்பதால் பயணிகளைக் காப்பதே தன் பணி என்று நம்பினார்.

Published:Updated:
Neerja Bhanot | நீர்ஜா பனோட்
செப்டம்பர் 5, 1986-ம் ஆண்டு அதிகாலை 5 மணி அளவில் கராச்சியிலிருந்து புறப்படவிருந்த பான் அமெரிக்கன் விமானம் (Pan Am), அன்று அப்படிப் புறப்படாமலிருந்து ஒரு வீரமான விமானப் பணிப்பெண்ணின் 17 மணி நேரப் போராட்டக் கதையை நம்மிடம் சொல்கிறது.

பெரும்பாலும் தீவிரவாதிகளால் சுலபமாகக் கையாளப்படும் எதிர்ப்பு முறைதான் விமானக் கடத்தல். விமானக் கடத்தல்களின் வழி தீவிரவாதிகளும் அரசும் பேரம் பேசும் சூழல் உருவாக, அதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் அதில் இருக்கும் பயணிகள்தான்.

1986-ம் ஆண்டு 22 வயதே நிரம்பிய விமானப் பணிப்பெண்ணாகிய நீர்ஜா பனோட் மட்டும் அவ்விமானத்தில் இல்லாமல் போயிருந்தால் அன்று பல உயிர்கள் அங்கே பறிபோயிருக்கும்.

Neerja Bhanot | நீர்ஜா பனோட்
Neerja Bhanot | நீர்ஜா பனோட்

யார் இந்த நீர்ஜா பனோட்?

ஹரீஷ் மற்றும் ரமா பனோட் ஆகிய இணையருக்குச் செப்டம்பர் 7, 1962 அன்று சண்டிகரில் பிறந்த பெண் குழந்தைதான் நீர்ஜா பனோட். ஹரீஷ், நீர்ஜா பிறந்த தருணத்தைப் பத்திரிகை ஒன்றில் பகிர்ந்த போது, "நான் பணியிலிருந்த போது மருத்துவமனையின் பிரசவ வார்டு செவிலியர் பெண் குழந்தை பிறந்த தகவலை எனக்குத் தெரிவிக்க என்னை அழைத்தார். தொலைப்பேசியில் அவர் பெண் குழந்தை பிறந்திருப்பதாகத் தெரிவித்தார். இதனைக் கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்த நான் அவருக்கு இருமுறை நன்றி கூறினேன். நான் தவறாகப் புரிந்து கொண்டதாக எண்ணி இறுதியாக ஒரு முறை அழுத்தமாக 'உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்" என்று கூறினார். பெண் குழந்தைகளாகப் பிறப்பதே பெரும் பாவமாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில் பிறந்த நீர்ஜா, பின்னாளில் பல உயிர்களைக் காப்பதற்காக தன் உயிரைத் தியாகம் செய்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிப் பருவம் முதலே நீர்ஜா தைரியத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர் போனவர் என்று அவர் இறந்த பிறகு பேட்டியளித்த அவரின் வகுப்புத் தோழிகள் கூறியிருக்கின்றனர். மும்பை ஸ்காட்டிஷ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த நீர்ஜா, செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொண்டார். கல்லூரி நாள்களில் ஒரு நாள் தனது வேலைக்காக வந்திருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் நிர்ஜாவைக் கண்டு மாடலிங் செய்வதில் விருப்பம் உண்டா என்று கேட்க, விளையாட்டாக மாடலிங் செய்யத் தொடங்கிய நீர்ஜா பின் நாள்களில் 'மனோரமா' போன்ற வார இதழ்களிலெல்லாம் மாடலாக இடம் பெற்றார். மேலும் பல விளம்பர பிரசாரங்களில் அறியப்பட்ட ஒரு முகமாகத் திகழ்ந்தார். தன் தன்னம்பிக்கையான புன்னகையுடன் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார்.

Neerja Bhanot | நீர்ஜா பனோட்
Neerja Bhanot | நீர்ஜா பனோட்

அவரது மாடலிங் வாழ்க்கை தொடங்கும் போது, ​​​​அவரது குடும்பத்தாரின் விருப்பப்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவின் விளம்பர நிறுவன ஊழியர் ஒருவருடன் அவரது திருமணம் முடிந்தது. திருமண வாழ்க்கை இனிதாக அமையாத காரணத்தால் இரண்டு மாதங்களிலேயே அதிலிருந்து வெளியேறினார். தனது கணவரால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெருந்துன்பத்தை எதிர்கொண்டு வந்த நீர்ஜா இரண்டே மாதங்களில் 5 கிலோ குறையும் அளவிற்குப் பலவீனமாகிப் போனார். கணவரின் தொடர் துன்புறுத்தும் செயல்பாடுகளால் மனம் உடைந்தவர் தனது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

அந்த மன அழுத்தத்திலிருந்து மீண்டுவர, தன்னை நிரூபிக்க முடிவு செய்தார். அப்போது கண்ணில் பட்ட ஒரு துளிர்தான் 'ஏர் ஹாஸ்டஸ்' பணிக்கான ஆளெடுப்பு. புகழ்பெற்ற 'பான் ஆம்' (Pan Am) நிறுவனத்திற்கான விமானப் பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்தார். தன் திறமையால் மொத்த 10,000 விண்ணப்பங்களிலிருந்து முதல் 80 இடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டார் நீர்ஜா.

பணி இனிதே தொடங்கிப் போய்க்கொண்டு இருக்க, எதிர்பாராத அச்சம்பவம் நிகழ்ந்தேரியது. செப்டம்பர் 5-ம் தேதி 1986 அதிகாலை, தான் 23 வயதை எட்ட இரண்டு நாள்களே இருக்கும் நிலையில் தனது அன்றைய பணியைத் தொடங்க வீட்டை விட்டுப் புறப்பட்டார். அப்போதைய பாம்பேவிலிருந்து கிளம்பி, கராச்சி மற்றும் ஃப்ராங்கஃபர்ட் வழியாக அமெரிக்கா சென்றடையும் 'Pan Am Flight 73' விமானம் அது. மொத்தம் 380 பயணிகள் மற்றும் 13 விமான ஊழியர்கள் உள்ளே இருந்தனர்.

கராச்சியிலிருந்து கிளம்பும்போது விமானத்தில் ஏதோ மாற்றங்களைக் கண்டறிந்த நீர்ஜா, கடத்தலை உணர்ந்து அதற்கான குறியீட்டை அதிகாரிகளுக்கு அனுப்பினார். விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் விமானிகளை எச்சரித்து காக்பிட் என்ற இயங்குதளத்திலிருந்து மேலே உள்ள ஹேட்ச் வழியாக அவர்களை வெளியேற்றினர். இதனால் விமானம் புறப்படாமல் நின்றது. பின்னர் விமானத்தைக் கடத்தியது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் என்று அறிந்தவுடன் அப்போது பயணிக்கவிருந்த அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்டை பாதுகாத்து அவர்களைக் காட்டிக் கொடுக்காமல் செயல்பட்டார் நீர்ஜா. அவரின் கட்டளையை ஏற்று மற்ற விமானப் பணிப்பெண்கள் 43 அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்டை சீட்டுக்கு அடியிலும், குப்பைத் தொட்டியிலும் மறைத்து வைத்தனர்.

Neerja Bhanot | நீர்ஜா பனோட்
Neerja Bhanot | நீர்ஜா பனோட்

விமானம் கடத்தப்பட்ட 17 மணிநேரங்கள் கழித்து, கடத்தியவர்கள் வன்முறையைக் கையில் எடுக்கத் தொடங்கினர். இதை உணர்ந்த நீர்ஜா விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்து பயணிகள் வெளியேற உதவி செய்தார்.

இந்த விமானக் கடத்தலிலிருந்து உயிர் பிழைத்த ஒரு பயணி பேசுகையில், "அவசரக்கால வழி மூலம் பலரை அவர் வெளியேற்றி வந்தார். கதவைத் திறந்ததால் கமாண்டோ படை உள்ளே வருகிறது என்ற எண்ணத்தில் தீவிரவாதிகள் சுடத் தொடங்கினர். அப்போதும் நீர்ஜா மூன்று குழந்தைகளைக் கட்டி அணைத்துக் காக்க முயன்றார். அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்த தீவிரவாதி ஒருவன், அவரின் நெற்றிக்கு அருகிலேயே துப்பாக்கியை வைத்து 'Point Blank'-ல் டிரிக்கரை அழுத்திவிட்டான்." ஆம், அங்கேயே நீர்ஜாவின் உயிர் பிரிந்தது.

அவர் நினைத்திருந்தால் அவசரக்கால வழியைத் திறந்தபோதே ​​​​சரட்டிலிருந்து கீழே சரிந்த முதல் ஆளாக அவரே இருந்திருக்கலாம். ஆனால் அவர்தான் அப்போது விமானத்திலிருந்த சீனியர் என்பதால் பயணிகளைக் காப்பதே தன் பணி என்று நம்பினார். அவரது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 6 அன்று அவரின் இறுதிச்சடங்கு நடந்தது.

"வழக்கமான தினமாக இருந்திருந்தால், நீர்ஜா தனது பிறந்த நாளான செப்டம்பர் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பம்பாய்க்குத் திரும்பியிருப்பார். ஆனால் அதற்குப் பதிலாக நாங்கள் அவளுடைய சவப்பெட்டியை விமான நிலையத்திலிருந்து சேகரித்தோம்" என்று அவரது தந்தை பேட்டி ஒன்றில் மனம் வருந்திக் கூறியிருந்தார்.

சோனம் கபூர் நடிப்பில் `நீர்ஜா' படம்
சோனம் கபூர் நடிப்பில் `நீர்ஜா' படம்
அவரின் வாழ்க்கை 2016-ம் ஆண்டு சோனம் கபூர் நடிப்பில் `நீர்ஜா' என்ற பெயரில் படமாக வெளியானது. அவரைப் பற்றி பல்வேறு புத்தகங்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

தான் தப்பியோடு வாய்ப்பிருந்த போதும் தன் உயிரைப் பெரிதாகக் கருதாமல் பல பயணிகளைத் துணிந்து காப்பாற்றி இருக்கிறார் இளம் பெண்ணாகிய நீர்ஜா பனோட். அவரின் இறப்புக்குப் பின்னர், அவரின் வீரத்தைப் பாராட்டி இந்திய அரசு, 'அசோக சக்ரா' விருதை வழங்கி கௌரவித்தது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்களிலேயே குறைந்த வயது நீர்ஜாவுக்குத்தான்! அவர் இருந்திருந்தால் இன்று அவருக்கு வயது 58!