Published:Updated:

சர்ச்சை: பாலியல் புகார் அளித்த பெண்ணை பணியிலிருந்து நீக்கிய சாகித்ய அகாதமி!

சாகித்ய அகாடமி
சாகித்ய அகாடமி

பாலியல் புகார் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருக்கும் நிலையில் அகாதமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ் மீது புகார் அளித்த அகாடமியின் பெண் ஊழியர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 2018 -ம் ஆண்டில் அகாடமி பணியில் சேர்ந்த அவரின் பணி நிரந்தரம் செய்வதற்கு இரண்டு தினங்களே இருந்த நிலையில் கடந்த 13 பிப்ரவரி அன்று அவருக்கு அகாடமியிலிருந்து பணிநீக்க உத்தரவு தரப்பட்டிருக்கிறது.

பாலியல் புகார் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருக்கும் நிலையில் அகாடமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சீனிவாசராவ்
சீனிவாசராவ்

புகார் அளித்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிப்ரவரி 2018 -ல் தொடங்கி, சாகித்ய அகாடமியின் துணைச் செயலாளர் அளவிலான பொறுப்பில் இருப்பவர். அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ், தான் நிறுவனத்தில் சேர்ந்தது முதலே தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துவந்தார் எனவும், பாலியல் அத்துமீறல், உடல்ரீதியாகத் தகாத முறையில் அணுகுவது மற்றும் பாலியல் ரீதியான சொற்களைப் பயன்படுத்துவது எனத் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், தன்னை இன ரீதியாகவும் கொச்சைப்படுத்தியதாகவும் அவர் தனக்கு மேலதிகாரி என்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீனிவாசராவ் மீது பணியிடப் பாலியல் அதும்மீறல்கள் தடுப்புச் சட்டம் பிரிவு 2(1)(g) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் புகார் அளித்திருப்பவரைப் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு