Election bannerElection banner
Published:Updated:

`எங்கம்மாவைப் பார்த்து மரம் ஏறக் கற்றுக்கொண்டேன்' - கேங்மேன் தேர்வில் சாதித்த சேலம் லதா!

லதா
லதா ( எம். விஜயகுமார் )

தமிழகத்தில் முதன் முறையாக மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கான உடல் தகுதி தேர்வில் சேலத்தைச் சேர்ந்த லதா என்ற இளம்பெண் தேர்வாகி இருக்கிறார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

தமிழக மின்வாரியத்தில் கம்பம் நடுதல், புதிய மின் பாதை அமைத்தல் உள்ளிட்ட களப்பணிகளுக்கு 5,000 கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதற்காக மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களுக்கான உடல்தகுதித் தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலும் மேட்டூரில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலும் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

மின்வாரியம்
மின்வாரியம்
எம்.விஜயகுமார்

இந்த உடற்தகுதி தேர்வில் கம்பம் ஏறுதல், மின்சாதன பொருள்களை தூக்கிக்கொண்டு 100 மீட்டர் ஓடுதல், உயர் அழுத்த மின் கம்பியை குறிப்பிட்ட நேரத்தில் இணைத்தல் போன்ற பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறும். கடந்த 29-ம் தேதி சேலம் உடையாப்பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு உடற்தகுதி தேர்வில் 26 வயதுடைய லதா என்ற இளம்பெண் கலந்துகொண்டார்.

இங்கு 30 மீட்டர் உயரம் கொண்ட மின் கம்பத்தில் ஏறி இறங்க 8 நிமிடம் கொடுக்கப்பட்டிருந்தது. லதா 6 நிமிடத்தில் ஏறி இறங்கினார். அதேபோல 31.5 கிலோ எடைகொண்ட மின்சாதனங்களைத் தூக்கிக்கொண்டு 100 மீட்டர் தூரத்தை 1 நிமிடத்தில் கடக்க வேண்டும். ஆனால், லதா 46 நொடியில் கடந்தார். உயர்அழுத்த மின் கம்பிகளை 2 நிமிடத்தில் இணைக்க வேண்டும். ஆனால் லதா 1.46 நிமிடத்தில் இணைத்து அசத்தினார். மின்வாரிய கேங்மேன் உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை பெற்றதால் மின்வாரிய அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

`தந்தை பியூன்... மகள் நீதிபதி'- குழந்தையில் சொன்னதை தாயான பின் செய்துகாட்டிய பெண்!

இதுபற்றி கேங்மேன் உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற லதாவிடம் பேசினோம்.``நான் தொப்பூர் அருகே கம்மம்பட்டி காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர். எங்க அம்மா பேரு சுமதி, அப்பா தம்புசாமி, என் கூடப் பிறந்தவர்கள் 2 சகோதரிகள், ஒரு சகோதரன். எங்க தென்னந்தோப்பில் அம்மா மரம் ஏறி தேங்காய் பறிப்பார்கள். அம்மா மரம் ஏறுவதைப் பார்த்து நானும் சின்ன வயசுலையே தென்னை மரம் ஏறக் கற்றுக்கொண்டேன்.

லதா குடும்பத்தினர்
லதா குடும்பத்தினர்
எம். விஜயகுமார்

எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஏறிவிடுவேன். பிறகு எனக்கும் சந்திரசேகருக்கும் திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்கிறார்கள். அம்மா வீட்டுக்கு வரும்போது மரம் ஏறுவேன். என் வீட்டுக்காரர் பார்த்து அசந்து போனார். இந்த நிலையில்தான் கேங்மேன் தேர்வு அறிவிப்பு வந்தது. அதையடுத்து நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், மின்சார கம்பம் ஏறிப் பழக்கம் இல்லாததால் என் கணவர் எனக்கு மின் கம்பம் ஏறக் கற்றுக்கொடுத்தார். அதையடுத்து, உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். `போலீஸாகி காக்கிச் சட்டை போட்டு கம்பீரமாக நிற்க வேண்டும்' என்பது எனது கனவாக இருந்தது. தற்போது மின்சார வாரியத்தில் சேர்ந்து காக்கிச் சட்டை போட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறேன். அதற்காகத் தினந்தோறும் படித்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு