ஹைதராபாத் ஹயாத்நகர் பகுதியில் தன்னுடன் படிக்கும் 17 வயது மாணவியை, ஐந்து மைனர் சிறுவர்கள் சேர்ந்து சிறார்வதை செய்து, அதைப் படமெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஐந்து மாணவர்களும் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் நண்பர்கள். இவர்களுக்குப் பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் 17 வயது மாணவியும் அறிமுகமாகி இருக்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள், வீட்டில் மாணவி தனியாக இருந்தபோது, ஐவரும் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை ஒருவன் படமெடுத்தும் உள்ளான்.
10 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இரண்டு பேர் சென்று மீண்டும் அம்மாணவியை பாலியல் சிறார்வதை செய்துள்ளனர். அதையும் படமெடுத்துள்ளனர்.
படமெடுத்த வீடியோ காட்சிகளை, அவர்களின் நண்பர்களுக்கும், சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அப்பெண், தன்னுடைய பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணின் பெற்றோர் ஹயாத்நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், 5 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிறுவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐவர் மீதும் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னுடன் படிக்கும் மாணவியை, மாணவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை, பரப்ப வேண்டாம் என பொது மக்களுக்குக் காவல் துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.