Published:Updated:

`மாதவிடாய் நாப்கின்கள் இனி முற்றிலும் இலவசம்!– மசோதா நிறைவேற்றிய ஸ்காட்லாந்து அரசு

நாப்கின்கள்
நாப்கின்கள்

இதன்மூலம் 31.2 மில்லியன் டாலர் மதிப்பிலான சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட மாதவிடாய்க் காலத்துக்குத் தேவையான பொருள்கள் இனி இலவசமாகக் கிடைக்கும்.

மாதவிடாய்க் காலத்துக்கான இலவசப் பொருள்கள் மசோதாவை அவை உறுப்பினர்களின் முழு ஒப்புதலுடன் நிறைவேற்றியிருக்கிறது ஸ்காட்லாந்து நாடாளுமன்றம். இதன்மூலம் 31.2 மில்லியன் டாலர் மதிப்பிலான சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட மாதவிடாய்க் காலத்துக்குத் தேவையான பொருள்கள் சமூகநலக் கூடங்கள், இளைஞர் விடுதிகள், மருந்தகங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் அந்த நாட்டுப் பெண்களுக்கும் மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் இனி இலவசமாகக் கிடைக்கும். முழு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் இந்த மசோதா இனி அடுத்தகட்டத்துக்குச் செல்கிறது. இதில் மேற்படி மாற்றங்கள் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கலாம்.

மசோதா இயற்றப்படக் காரணமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லென்னான் கூறுகையில், ``இயற்கையாக உடலில் நிகழும் மாதவிடாய் போன்ற சிக்கல்களுக்கு நாம் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. டாய்லெட் பேப்பர்கள் இலவசமாகக் கிடைக்கும் தேசத்தில் சானிட்டரி நாப்கின்கள் கிடைக்காதது ஏன்? மாதவிடாய் குறித்த புனிதப்படுத்துதல் மற்றும் கட்டுக்கதைகளை உடைக்க இந்த மைல்கல் மசோதா உதவியாக இருக்கும். பாலினச் சமத்துவத்துக்கு நமது நாடு முக்கியத்துவம் தருகிறது என்பதற்கு இது உதாரணமாக அமையும்” என்றார்.

மோனிகா லென்னான்
மோனிகா லென்னான்

சானிட்டரி பொருள்களுக்காக பிரிட்டன் அரசு 5 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது. இந்த வரியை விலக்கிக்கொள்வதாக 2016ம் ஆண்டிலேயே அந்த நாட்டு அரசு அறிவித்தாலும் இதுவரை அது அமலுக்கு வரவில்லை. 2018 ல் ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்திய இந்திய அரசு சானிட்டரி நாப்கின்கள் மீது 12 சதவிகித வரி விதித்து, பின்னர் அதை விலக்கிக்கொண்டது இதற்கிடையேதான் ஸ்காட்லாந்து அரசு தங்களது பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் இலவசமாக சானிட்டரி பொருள்கள் கிடைக்கும் என உலகிலேயே முதன்முறையாக அறிவித்தது. இதையடுத்து நேற்று மாதவிடாய்க் கால அடிப்படை உரிமைகளை நிறைவேற்றும் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது அந்த நாட்டு அரசு.

அடுத்த கட்டுரைக்கு