Published:Updated:

குழந்தைகளுக்காக குடிகாரக் கணவரைப் பிரிந்திருக்கிறேன்! - என் முடிவு சரியானதா?” #LetsSpeakRelationship

பிள்ளைகள், தங்கள் ரோல்மாடலாக அப்பாவை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். பல விஷயங்கள் தந்தையைப் பார்த்து கற்றுக்கொள்ளும் அவர்கள், தந்தை குடிகாரராக இருக்கும் சூழலில்..?

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

என் பெயர் ஜோதிலட்சுமி. எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அதனால், வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. குழந்தைகளின் பள்ளிப்படிப்பும் இதனால் பாதித்தது. அதனால் அவரிடமிருந்து தற்போது பிரிந்துவிட்டேன். நான் எடுத்த முடிவு சரியானதா... தினமும் தனது அப்பாவைத் தேடும் எனது பிள்ளைகளுக்கு, இதை எப்படிப் புரியவைப்பது?

நீங்கள் பிரிந்திருப்பதாக மட்டுமே சொல்லியிருக்கிறீர்கள். அது பிரிவு அல்லது விவாகரத்தா என்று குறிப்பிடவில்லை. பிரிவு என்கிற அடிப்படையிலேயே எனது பதில்களைத் தருகிறேன். தந்தையின் அரவணைப்பு என்பதைவிட, தந்தையால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருந்தால், அது நிச்சயம் குழந்தைகளுக்கு மன உளைச்சலாக இருக்கும். அவ்வப்போது குடிக்கிறார் என்று இல்லாமல், எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார் என்றால், அந்த தந்தை தன் குழந்தைகளுக்கு நிச்சயம் வழிகாட்டியாக இருக்கமுடியாது. அப்பா, குழந்தைகளை நெறிப்படுத்துபவராக, மனைவிக்கு அரவணைப்பு தருபவராக, அன்பு செலுத்துபவராக இருக்க வேண்டும்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

அப்படிப்பட்ட அப்பாதான் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாக இருப்பார். விடலைப்பருவத்தை அடையும் குழந்தைகள், பெரும்பாலும் தன் தந்தையைப் பார்த்துதான் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தந்தை குடிகாரராக இருக்கும் சூழலில், “அப்பா ஒரு குடிகாரர்... அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தார்” என்பதுதான் அந்தப் பிள்ளைகளுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும். அப்பா இல்லாமல் குழந்தை வளர்கிறது என்கிற ஏக்கம் சரிதான். சமூகம் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ளவேண்டிய சூழல் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

அதேசமயம் இந்த பிரிவு, தான் செய்வது சரியா தவறா எனச் உங்கள் கணவரை சிந்திக்கவைக்கலாம். இது அத்தனைக்குப் பிறகும் அவர் திருந்தவில்லை என்றால், குடிக்கு அடிமையானவர்களுக்காக நடத்தப்படும் alcoholic anonymous போன்ற குழுக்களில் அவரைச் சேர்த்துவிடலாம். அதில், அவரது நடத்தையில் ஏதேனும் மாற்றம்,முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று கவனித்து, உங்கள் அடுத்தகட்ட முடிவுகுறித்து யோசிக்கலாம். ஆனால், தற்போது வரை நீங்கள் எடுத்திருக்கும் முடிவு 100 சதவிகிதம் சரியானதே.

- மருத்துவர் ஜெயமேரி, உளவியல் நிபுணர்

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship