Published:Updated:

`திருமண வாக்குறுதியை நம்பி ஓர் ஆணுடன் உடலுறவுகொண்டால்?'-டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

Delhi High court
Delhi High court

`திருமணம் செய்துகொள்வதாக ஓர் ஆண் வாக்குறுதி கொடுத்துவிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து அந்த ஆணுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டால் அதைப் பாலியல் வல்லுறவாகக் கருத முடியாது’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த ஓர் இளம்பெண் தொடுத்த வழக்கில்தான் இப்படியான அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. ``தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து ஓர் இளைஞர் பல மாதங்கள் நெருங்கிப் பழகி என்னுடன் உடலுறவில் ஈடுபட்டார். ஆனால், தற்போது அந்த ஆண் என்னைத் திருமணம் செய்துகொள்ளாமல் பிரிந்து சென்றுவிட்டார். எனவே, அவர்மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதுதான் அந்தப் பெண்ணின் புகார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபு பக்ரு, அந்தப் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில், ``திருமணம் செய்வதாக உறுதி அளித்ததை அடிப்படையாக வைத்து நீண்டநாள் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்கொடுமைக் குற்றமாகக் கருதமுடியாது. இருவரும் நீண்ட காலமாக பரஸ்பர சம்மதத்துடன்தான் உறவு கொள்கின்றனர். அதன் பின்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மாதக் கணக்கில் ஒன்றாக வாழ்ந்து உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால் அதன்பின்னர் பாலியல் வன்கொடுமைக் குற்றம் சுமத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது விவாதமாகி வருகிறது.

வழக்கறிஞர் சுமதி
வழக்கறிஞர் சுமதி

இந்தத் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் சுமதியிடம் பேசினோம், ``திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ஒரு பெண்ணிடம் ஒரே ஒருமுறை உடலுறவு வைத்துக்கொண்டால் அதைப் பாலியல் வல்லுறவாகக் கருதலாம். ஆனால், `ஒருவன் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னதால் நான் அவனுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டேன். ஆனால், இப்போது அவன் என்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்கிறான்’ என்று சொன்னால் அது பாலியல் வல்லுறவில் வராது. ஏனென்றால் ஒவ்வொருமுறையும் அந்தப் பெண்ணுடைய சம்மதம் இருந்திருக்கிறது. அந்த ஆண் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதற்காக இதற்கு முன்பு நடந்ததெல்லாம் அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமல் நடந்ததாகாது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

திருமணத்துக்குப் பிறகுதான் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வரையறை வைத்திருக்கிறார்கள்... அந்த ஆண் அந்தப் பெண்ணுடன் வாழப்போகிறான். அவளுக்கு குழந்தை பிறந்தால் அதை அவன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவனுடைய சம்பாத்தியத்தில்தான் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பத்து பேர் முன்பு உறுதிப்படுத்து வதற்காகத்தான் திருமணம். அதிலும் பலர் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் திருமணப் பதிவை கட்டாயமாக்கினார்கள். ஆண்கள் பெண்களைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்ததால்தான் பெண்களை பாதுக்காப்பதற்கு சட்டம் பல வழிவகைகளை ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆனால், அவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. நான் திருமணமெல்லாம் செய்துகொள்ள மாட்டேன். லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன் என்றார்கள். சட்டம் அதையும் அங்கீகரித்துள்ளது. இப்படியான சூழலில், ஓர் ஆணும் பெண்ணும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல இருந்துவிட்டு, இருவருக்குள்ளும் சண்டை வந்த பிறகு, `இவன் என்னை ரேப் பண்ணிட்டான்’ என்று வந்து நின்றால் நீதிமன்றம் என்ன செய்யும்?

Marriage
Marriage

திருமணத்துக்கு முன்பு உடலுறவுக்குத் தயாராகிவிட்டால், அதற்கான ரிஸ்க்கை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அந்தப் பெண் மனநிலை சரியில்லாமல் இருந்தாலோ, அந்த ஆணோ, அவனை சார்ந்தவர்களோ போதைப்பொருளைக் கொடுத்து அந்தப் பெண்ணை முடிவெடுக்க முடியாத நிலையில் தள்ளி அந்தப் பெண்ணின் அனுமதியுடன் உடலுறவு கொண்டிருந்தாலோ அது வேறு... ஆனால், ஓர் ஆணுடனான உடலுறவுக்குப் பிறகு எப்படியெல்லாம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பது தெரிந்தும் ஒரு பெண் அந்த ஆணுக்கு உடலுறவுக்கு ஒப்புதல் அளித்தால் அதை எப்படி பாலியல் வல்லுறவுக்குள் கொண்டுவர முடியும். நம்பிக்கையின் அடிப்படையில் அனுமதி கொடுத்துவிட்டேன் என்று அந்தப் பெண் சொல்வாராயின், ஒருமுறை நம்பிக்கையின் அடிப்படையில் உடலுறவு வைத்துக்கொண்டேன் என்றால் சட்டம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், நம்பிக்கையின் அடிப்படையில் ஓர் ஆணுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டால் அதைப் பாலியல் வல்லுறவாகக் கருத முடியாது. அது தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இந்தத் தீர்ப்பு சரியானதுதான்” என்றார்.

இதுகுறித்துப் பேசிய பெண்ணிய செயற்பாட்டாளரான சுகிர்தராணி, ``இந்தப் பிரச்னை காலங்காலமாக இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஓர் ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக நம்பிக்கை கொடுத்து பழகுவதும் அவள் உடலை அனுபவித்துவிட்டு பின்பு ஏமாற்றுவதும் இங்கு தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. சட்டபூர்வமாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் இந்த விஷயத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. நிறைய பெண்கள் இப்படியான விஷயங்களில் பாதிக்கப்படுகின்றனர். இது தெரிந்தும் பெண்கள் மீண்டும் மீண்டும் ஆண்களிடம் இப்படி ஏமாறக் கூடாது. ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அவளுடைய உடலை மட்டுமே குறிவைக்கும்போது பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்ணுடைய நோக்கம் திருமணம் செய்வதுதான் என்றால் இப்படித் திருமணத்துக்கு முன்பு தொடர்ந்து அந்த ஆணிடம் தன்னை இழக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

 சுகிர்தராணி
சுகிர்தராணி

இந்த விஷயத்தில் ஒரு பெண்ணியவாதியாகச் சொல்ல வேண்டுமென்றால், `இவ்வளவு தூரம் பழகியும் அவன் உன்னை திருமணம் பண்ணிக்கலைன்னா அவனை தூக்கியெறிஞ்சுகிட்டு போய்கிட்டே இரு... அதிலயே உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க முடியாது’ என்பதுதான் என் அட்வைஸ். ஆனால், சாதாரண பெண்ணின் பார்வையில் `நாம் ஏன் ஏமாற வேண்டும்’ என ஒரு கேள்வி வருகிறது. பிறந்ததிலிருந்து ஒரு பெண்ணின் உடல் அவளுக்கானதாக இருப்பதே இல்லை. பெண் உடலில் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருக்கின்றனர். இப்படியான சூழலில், தன்னுடைய உடலை யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதில் பெண்களுக்கு தெளிவான புரிந்துணர்வு இல்லை. அந்தப் புரிந்துணர்வை எல்லா தரப்பு பெண்களிடமும் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு