டோலிவுட் எனப்படும் தெலுங்கு திரைப்பட உலகில் பாலின பாகுபாடு, பாலியல் அத்துமீறல், பெண்கள் மீதான வெறுப்பு உள்ளிட்டவை பரவலாக மேலோங்கி இருப்பதாக, இதுகுறித்து விசாரிக்க தெலங்கானா அரசால் நியமிக்கப்பட்ட தெலுங்கு திரைப்படகுழு தெரிவித்துள்ளது.
அரசின் பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், பெண்கள் இன்றளவும் பணிபுரியும் இடங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள். தெலுங்கு திரைப்பட உலகில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகளவில் இருப்பதாக முன்னணி நடிகை ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து, 2019-ம் ஆண்டில் அரசு சார்பில் தெலுங்கு திரைத்துறையில் நிலவும் பாலியல் அத்துமீறல்களை விசாரித்து அறிக்கை அளிக்க, உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் மாநில காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு சாரா அமைப்பு பிரதிநிதிகள், திரைத்துறை உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கான அத்துமீறல்கள் இருப்பதை, அரசால் அமைக்கப்பட்ட குழு உறுதி செய்துள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சட்டம்-2013 (POSH)கீழ், தொழில் நிறுவனங்கள், பணிபுரியும் இடங்களில் உள்வள புகார் தெரிவிக்கும் குழு (ICC) அமைப்பது கட்டாயம் ஆகும். எனினும், தெலுங்கு திரைப்படத் துறையிலோ, அது சார்ந்த சங்கங்களிலோ புகார் தெரிவிக்க குழு இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள அரசுக்குழு, பெண்களைப் பாதுகாக்கும் வகையில் உடனடியாக பாடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. எனினும், உயர் அதிகாரிகளிடம் இந்த அறிக்கை அளித்து 3 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, குழுவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிவர்த்தி செய்வதற்கான உரிய அமைப்பு இல்லாத நிலையில், திரைத்துறையில் உள்ள பெண் கலைஞர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும், மோசமான வார்த்தைகளால் அவமதிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவதாகவும், உரிய போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படாமல் தேவையின்றி இரவு நேரப்பணிகளில் பெண்கள் அமர்த்தப்படுவதாகவும் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இக்குழுவானது படப்பிடிப்புகள், அரங்குகளில் நடக்கும் அத்துமீறல்கள், சில தயாரிப்பாளர்கள் திறமைக்கேற்ற ஊதியத்தை நடிகைகளுக்கு வழங்காதது, பெரும்பாலான திரைத்துறை சார்ந்த தொழிற்சங்கங்களில் 1 முதல் 4 சதவிகிதம் பெண்களே இடம் பெற்றிருப்பது உள்ளிட்டவற்றை தனது கள விசாரணையில் கண்டறிந்தது. இளம் திரைத்துறை கலைஞர்களுக்கு ஊதியம் குறைவாக இருக்கும் நிலையில், இது குறித்து பேச்சு நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவதாகவும், இந்த ஒருங்கிணைப்பாளர்கள் எந்தவொரு தொழிற்சங்கம் சார்ந்தவர்களோ, பொறுப்பிலோ இல்லை எனவும் குழுவைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

இக்குழு தனது பரிந்துரைகளாக, `திரைத்துறை பெண்கள் தங்களின் குறைபாடுகளைத் தெரிவிக்க, உள்வள புகார் குழுக்களை அமைக்க வேண்டும். அத்தகைய குழுவில் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாலியல் புகாரை பதிவு செய்யும் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிடக்கூடாது, அவர் மீது எந்தவொரு பாகுபாடும் காட்டக்கூடாது, உறுப்பினர் எண்ணிக்கையில் பாலின விகிதத்தை மதிப்பாய்வு செய்து மேலும் பெண் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை சேர ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.