`` இது வீராங்கனையின் வெற்றி அல்ல, ஒரு தாயின் வெற்றி!" - உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற ஷெல்லி

'தாய்மைக்காக திறமையை விட்டுக்கொடுக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை' என நிரூபித்திருக்கிறார், ஷெல்லி.
கத்தார் தலைநகர் தோஹாவில், உலக தடகளப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி, 10.71 விநாடிகளில் இலக்கைக் கடந்து தக்கப்பதக்கம் வென்றார். இந்த வெற்றியினால், 'உலக தடகளப் போட்டியில் நான்கு முறை தங்கம் வென்ற வீராங்கனை' என்ற பட்டத்தையும் ஷெல்லி பெற்றுள்ளார்.

1986- ம் ஆண்டு, ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டனில் பிறந்தவர் ஷெல்லி. குடும்பம் கடுமையான வறுமையான சூழலில் இருந்தாலும், தன் விளையாட்டுத் திறமையை மேம்படுத்திக்கொள்ள தொடர்ந்து போராடியவர். ஏனெனில், அதைத்தான் தன் எதிர்காலமாக வரையறுத்திருந்தார். உசேன் போல்ட்டுக்கு இணையாகக் களத்தில் சாதனைகள் புரிந்திருந்தாலும், பெண் என்ற காரணத்தினாலே பல இடங்களில் ஷெல்லியின் திறமை அங்கீகரிக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.
2017-ம் ஆண்டு நடந்த உலக தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் ஷெல்லி. அதன்பின், குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளானதும், மீண்டும் இந்த ஆண்டு தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற 'முதல் தாய்' என்ற புகழையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஷெல்லி பேசும்போது, "நான் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். நான் கருவுற்றதை உணர்ந்தவுடன், சில மணி நேரங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தேன். எதிர்காலம் குறித்த நிறைய கேள்விகள் மனசுக்குள் வந்துபோனது. சில மணி நேரம் அழுதேன். அவற்றுக்கெல்லாம் முடிவாக, என் குழந்தையுடன் நான் தடகளப் போட்டியில் தங்கம் வாங்குவேன் என்று நம்பினேன். 'தாய்மை என்பது பெண்கள் வாழ்வில் நடக்கும் இயல்பான ஒன்று. தாய்மைக்காகத் திறமையை விட்டுக்கொடுக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை' என்று முடிவெடுத்தேன்.
கருவுற்ற சமயத்தில்கூட மெதுவான பயிற்சிகள் எடுத்துக்கொண்டேதான் இருந்தேன். பிரசவ அறைக்குள் நுழையப்போகும் சில நிமிடங்களுக்கு முன்புகூட, வலியுடன் நான் தடகளப் போட்டிகளை ரசித்தேன். என் குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில், என் வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. அதிக வலி காரணமாக சில நாள்கள் பயிற்சி எடுக்காமலேயே இருந்தேன். ஆனால், வெகு விரைவில் பழைய ஷெல்லியாக மாறி தடம் பதிக்க ஆரம்பித்தேன். தாய்மைக்குப் பின் எனக்கான புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினேன்.

உலக தடகளப் போட்டிக்காக, கத்தார் வந்த பின்பும்கூட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. மைதானத்துக்குள் வந்ததும் ஜெயித்தே ஆக வேண்டும் என்று துணிந்து ஓடினேன். என்னுடைய பலநாள் கனவு இந்த வெற்றியின் மூலம் நிறைவேறியது. என் தங்கப்பதக்கத்தை என் தாய்நாட்டுக்காக மட்டுமல்லாமல், பல நேரங்களில் என்னுடைய அரவணைப்பை என் லட்சியத்துக்காக விட்டுக்கொடுத்த என் மகனுக்கும் சமர்ப்பிக்கிறேன். இது ஒரு வீராங்கனையின் வெற்றி மட்டுமல்ல; ஒரு தாயின் வெற்றியும்கூட. என்னைப் பொறுத்தவரை இன்றுதான் எனக்கு அன்னையர் தினம்" என்று நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ளும் ஷெல்லி, பல நிறங்களில் கலரிங் செய்த கூந்தலுடன், தனக்கே உரிய சிக்னேச்சர் ஸ்டைலில், ஜமைக்கா நாட்டின் கொடியைப் பிடித்தபடி தம்ஸ்அப் செய்து சிரிக்கிறார்.
இன்னும் பல வெற்றிகள் வந்தடையட்டும்!