Published:Updated:

`அன்னிக்கி அப்பா சொன்னபடி இப்போ போட்டோ எடுத்துக்கிட்டோம்!’- நெகிழும் முதல் கடற்படை பெண் விமானி

உன் ஆசை நிறைவேறும் போது, நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி யூனிபாஃர்ம் அணிந்து போட்டோ எடுத்துப்போம்னு அப்பா சொன்னார்.

பெண் விமானி
பெண் விமானி

இந்தியக் கடற்படையின் முதன் பெண் விமானியாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவாக, முப்படைகளில் ஆண் வீரர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், 2016ம் ஆண்டு மத்திய  பாதுகாப்பு அமைச்சகம் இந்தியத் தரைப்படை, கடற்படை, விமானப்படையில் பெண் விமானிகளையும் பணியாளர்களையும் அதிக எண்ணிக்கையில் நியமிக்க முடிவு எடுத்தது.

சுபாங்கி
சுபாங்கி

இதன்படி, தரைப்படையிலும் விமானப்படையிலும் பெண்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே நியமிக்கப்பட்டனர். இப்போது, அதன் தொடர்ச்சியாக இந்தியக் கடற்படையிலும் பெண் விமானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சுபாங்கி பேசும் போது, ``எல்லாப் பெண்களுக்கும் அவர்களின் அப்பாதான் முதல் ஹீரோவாகவும் ரோல் மாடலாகவும் இருப்பாங்க. எனக்கும் அப்படித்தான். என் அப்பா இந்தியக் கடற்படை வீரர். அம்மா பள்ளி ஆசிரியை. சின்ன வயசிலிருந்தே, 'நீ உனக்கான அடையாளத்தை சொந்த முயற்சியால் உருவாக்கணும் அதுதான் என்னோட கனவு'னு அப்பா சொல்லிட்டே இருப்பாங்க. அதனால் படிப்பு தாண்டி எனக்கு ஆர்வம் இருக்கும் எல்லாவற்றிலும் என் முத்திரையைப் பதிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

`கனவுகளைத் தொலைக்க விரும்பாமல் துணிந்து போராடினோம்!' - முதல் பழங்குடியின பெண் விமானி அனுப்பிரியா
பெண் விமானி
பெண் விமானி

சிறுவயதிலிருந்தே தேசிய அளவிலான  டேக்வாண்டோ விளையாட்டில் பதக்கங்களைக் குவிக்கத்தொடங்கினேன். எல்லோரும் விளையாட்டுதான் என்னோட கரியராக இருக்கும்னு நினைச்சாங்க. ஆனால், எனக்கு அப்பா மாதிரி பணி புரியணுங்கிறது ஆசையா இருந்துச்சு. அப்பா கடற்படை உடையை அணிவதைப் பார்க்கும் போதெல்லாம் என்னோட ஆசை லட்சியமாக மாறிடுச்சு. என் ஆசையை அப்பாகிட்ட சொல்லும்போது, 'நீ வளர்ந்த பிறகு நிச்சயம் உன் ஆசை நிறைவேறும், அப்போ நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி யூனிபாஃர்ம் அணிந்துகொண்டு போட்டோ எடுத்துப்போம்'னு சொல்வார்.

அப்பாவின் அந்த ஆசையை நான் இப்போ நிறைவேற்றியிருக்கேன். பயோ டெக்னாலஜி இன்ஜினீயரான நான் 2017-ம் ஆண்டு ஷார்ட் சர்வீஸ் ஆணையம் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியக் கடற்படையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன். ஹைதராபாத்தில் நடந்த ஒரு வருடப் பயிற்சிக்குப் பின், இப்போது இந்தியக் கடற்படையில் விமானியாகப் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

விமானி
விமானி

என் அப்பாவைப்போலவே நானும் இன்று இந்தியக் கடற்படை வீராங்கனை. அப்பா அன்னிக்குச் சொன்னதுபோல ரெண்டு பேரும் ஒண்ணா நின்னு போட்டோ எடுத்துக்கொண்டோம். இது என்னோட அடையாளம் மட்டுமல்ல அப்பாவின் கனவும்தான்" என்றார் வெற்றியின் பெருமிதத்தோடு.

டிசம்பர் 2-ம் தேதியிலிருந்து இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக சுபாங்கி செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.