நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022- 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் இறுதியில் கேள்வி நேரம் தொடங்கியது. அதில் எம்பி பினோய் விஸ்வம் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்த கேள்வியை எழுப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதற்கு பதிலளித்த, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ``நாட்டில் நடக்கும் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்றோ, ஒவ்வோர் ஆணும் வன்புணர்வாளர் என்றோ அறிவிப்பது நல்லதல்ல. நாட்டில் பெண்களுக்கு உதவி செய்ய முப்பதுக்கும் மேற்பட்ட ஹெல்ப் லைன் நம்பர்கள் உள்ளன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே அரசின் முன்னுரிமை" என தெரிவித்தார்.
மேலும் பேசிய பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி, ``திருமண வன்புணர்வை குற்றமாக்குவது திருமண நிகழ்வுகளையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். திருமண உறவில் ஒரு மனைவி எப்போது சம்மதித்தாள், சம்மதிக்கவில்லை என்பதை நிரூபிப்பது கடினம்" என்று கூறினார். இந்த விவகாரம் நீதித்துறைக்கு உட்பட்டது, எனவே, விவாதப் பொருளாக விவரிக்க முடியாது என்று கூறவே அத்துடன் அந்த வாதம் நிறுத்தப்பட்டது.

ஏற்கெனவே 2017-ல் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ``திருமண பாலியல் வன்கொடுமை குறித்த எந்த ஒரு சட்டமும் வரையறுக்கபடவில்லை, மேற்கத்திய நாடுகளில் இது குற்றமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தியாவும் இதை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகபடுத்தும் அபாயமுள்ளது" என கூறியிருந்தது.
இந்தப் பிரமாணத்தைப் பெற்றுக்கொண்டு புதிய பிரமாண பத்திரம் வெளியிடப்படும்படி டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கலில் நடைபெற்ற இந்த விவாதம் பேசுபொருளாகியுள்ளது.