Published:Updated:

`அம்மா தந்த இன்ஸ்பிரேஷன்; 5,000 பேருக்கு உணவு!’- பிரதமர் ட்விட்டரை நிர்வகித்த அனுபவம் பகிரும் சினேகா

சினேகா
சினேகா

`பிரதமர் சமூகவலைதளக் கணக்கை நான் நிர்வகிப்பதன் மூலம் எங்கள் அமைப்பு இன்னும் வெளியில் தெரியவரும் என அதிக சந்தோசமாக இருந்தது' என தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் சினேகா.

சர்வதேச மகளிர் தினமான இன்று பிரதமர் மோடியின் சமூக வலைதளப் பக்கங்களை, இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சாதனைப் பெண்கள் காலை முதல் நிர்வகித்து வருகிறார்கள். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் என்ற இளம் பெண்ணும் ஒருவர். இவர் ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனராகவுள்ளார். `தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியாரின் வரிகளை ஏற்று ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் தஞ்சமடைந்தவர்கள், வீடுகள் இல்லாமல் இருப்பவர்கள் என அனைவருக்கும் தினமும் தேடிச் சென்று உணவளித்து வருகிறார்.

சினேகா
சினேகா

பிரதமரின் சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகித்த அனுபவத்தைப் பற்றி அறிந்துகொள்ள சினேகாவைத் தொடர்பு கொண்டோம். ஆனால் காலை, தன் முதல் ட்வீட் வெளியானதிலிருந்து சினேகா பிஸியாக இருந்ததால், அவரை தொடர்புகொள்வது சற்று கடினமாகவே இருந்தது. பிற்பகலில் தன் பிஸிக்கு மத்தியில் நமக்குச் சற்று நேரம் ஒதுக்கி தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

பிரதமர் கணக்கை நிர்வகித்த மகிழ்ச்சி மற்றும் பிஸியால் ஏற்பட்ட சோர்வு என இரண்டும் கலந்த குரலில் பேசத் தொடங்கினார். ``நான் சினேகா. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான்... விஸ்காம் படித்துவிட்டு தற்போது சமூகப் பணிகளில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளேன். ஃபுட் பேங் இந்தியா என்பதைக் கடந்த ஐந்து வருடங்களாகச் செய்து வருகிறோம். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு உணவு தருவது, ஆதரவற்றவர்களுக்குச் சத்தான உணவு வழங்குவது போன்றவைதான் எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம்.

எங்கள் வீட்டில் ஏதேனும் விஷேசம் நடந்தால் என் அம்மா, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நிறைய மக்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு உணவு வழங்குவார். என் சிறுவயதிலிருந்து இதைப் பார்த்து வளர்ந்ததால், இந்தச் செயலை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து, முதன் முதலாக ஃபுட் பேங் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கம் தொடங்கினேன். இதில், என்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் தன்னார்வலர்களாக இணைந்தார்கள். அவர்களின் உதவியால் முதலில் சிறிய அளவில் உணவு தயார் செய்து விநியோகிக்கத்தொடங்கினோம். பின்னர் நிறைய தன்னார்வலர்கள் இணைந்ததால் தற்போது இந்த அமைப்பு பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது.

தன்னார்வலர்களுடன் சினேகா
தன்னார்வலர்களுடன் சினேகா

தற்போது, தினமும் என் வீட்டில் அதிகமாக உணவு சமைத்து அதைப் பலருக்கு விநியோகித்து வருகிறோம். அதேபோல் மாதம் ஒருமுறை அனைத்து தன்னார்வலர்களும் இணைந்து 4,000 முதல் 5,000 உணவு பொட்டலங்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து சென்னை முழுவதும் வழங்குவோம். இதற்காகச் சென்னையில் மட்டும் 100 தன்னார்வலர்கள் உள்ளனர். இங்கு மட்டுமல்லாது கோயம்புத்தூர், மதுரை, சேலம் ஆகிய இடங்களிலும் ஹைதராபாத், நிசாம்பாத் போன்ற வெளி மாநிலங்களில் உள்ள நகரங்களிலும் உணவு சமைத்து அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து வருகிறோம்.

`வெற்றியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ - பிரதமரின் ட்விட்டரை நிர்வகித்த தமிழக பெண்

திருமண நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மிச்சமாகும் உணவை நாங்களே நேரடியாக வாங்கி இல்லாதவர்களுக்கு வழங்குகிறோம். ஒரு நாளைக்கு எங்களால் முடிந்த அளவு 10 முதல் 100 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். தன்னார்வலர்கள் தங்களின் ஓய்வு நேரங்களில் வந்து எங்களுக்கு உதவுவார்கள். இதேபோல் பிற மாநிலங்களிலும் தன்னார்வலர்கள்தான் இந்த அமைப்பைச் செயல்படுத்தி வருகிறார்கள் நான் அனைவரையும் இணைத்து வேலை செய்து வருகிறேன். எங்களுக்கு உதவ முன்வருபவர்களிடம் பணமாக எப்போதும் நாங்கள் வாங்குவது கிடையாது. அதற்குப் பதில் உணவு சமைக்கத் தேவையான பொருள்களைப் பெற்றுத்தான் இவ்வளவு நாள் இதை நடத்தி வருகிறோம்.

உணவு தயாரிக்கும் சினேகா
உணவு தயாரிக்கும் சினேகா

எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் சிறப்பாக இருக்கும். தற்போது ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விநியோகிப்பதற்காக 500 கிலோ கொண்டைக் கடலை வாங்கி வைத்துள்ளோம். அதைச் சேமித்து வைக்கக் கிடங்கு இல்லை. அந்தக் கிடங்கு அல்லது வாகனம் போன்ற உதவிகள் அரசு தரப்பிலிருந்து கிடைத்தால் நன்றாக இருக்கும். தற்போதுவரை பொதுமக்கள்தான் எங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அவர்களால்தான் இந்த அமைப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இதுவரை காய்கறிகள் நிறைந்த உணவு மட்டுமே விநியோகித்து வந்தோம். ஆனால், கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சிக்கன் பிரியாணி செய்து முதல்முறையாக அனைவருக்கும் வழங்கினோம்” எனப் பெருமை கலந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

`டியர் மோடி தயவு செய்து என்னைக் கொண்டாடாதீர்கள்!’- பிரதமரின் பெண்கள் தின மரியாதையை நிராகரித்த சிறுமி

தொடர்ந்து பிரதமர் கணக்கை நிர்வகிக்கும் வாய்ப்பு பற்றி பேசிய அவர், ``சில தினங்களுக்கு முன்பு பிரதமர் கணக்கிலிருந்து ஒரு பதிவு போடப்பட்டிருந்தது, அதில் சாதனைப் பெண்கள் பற்றி #SheInspiresUs என்ற ஹேஸ்டாக்கில் குறிப்பிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பார்த்து என்னுடன் இருக்கும் சில தன்னார்வலர்கள் மற்றும் என் கணவர், வீட்டில் உள்ளவர்கள் என அனைவரும் பதிவிட்டனர். இறுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து போன் செய்து என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தத் தருணத்தை விளக்க வார்த்தைகள் இல்லை.

பிரதமர் சமூக வலைதளக் கணக்கை நான் நிர்வகிப்பதன் மூலம் எங்கள் அமைப்பு இன்னும் வெளியில் தெரியவரும் என அதிக சந்தோசமாக இருந்தது. பிரதமரின் ட்விட்டரில் கருத்து பதிவிடவுள்ள முதல் பெண், நான்தான் என்பது இன்று காலைதான் எனக்கே தெரிய வந்தது. என்னிடம் கணக்கு ஒப்படைக்கப்பட்டதும் முதன் முதலாக எனக்கு உத்வேகம் அளித்த என் தாய்க்கு நன்றி சொல்லி அவரைப் பற்றி கருத்து பதிவிட்டிருந்தேன். பின்னர் என்னைப் பற்றியும் என் ஃபுட் பேங்க் இந்தியா பற்றியும் பேசியிருந்தேன்.

என் கருத்துகளைத் தெரியப்படுத்த பிரதமர் அலுவலகம் எனக்கு முழு சுதந்திரம் வழங்கியது. எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. உண்மையில் மகளிர் தினமான இன்று பிரதமரின் சமூக வலைதளக் கணக்கை நான் நிர்வகித்தது மறக்க முடியாத அனுபவம். முன்பு இருந்ததைவிட தற்போது எங்கள் ஃபுட் பேங் இந்தியா உலகம் முழுவதும் தெரிய இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மற்றும் அவரது அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. என் பெயரைப் பரிந்துரை செய்த என் சக தன்னார்வலர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தன்னார்வலர்கள்
தன்னார்வலர்கள்

நான் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். `ஒவ்வொருவர் உண்ணும் அரிசியிலும் அவர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கும்' எனக் கூறுவார்கள். அந்த உணவை வீணாக்காமல் உண்டால் நல்லது. நீங்கள் இங்கு உணவை வீணாக்கும் அதே வேளையில், வேறு இடத்தில் ஒருவர் உணவு இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பார். அதனால் உங்களுக்குக் கிடைத்த உணவை தயவு செய்து வீணாக்காதீர்கள். உங்களுக்கு அதிகப்படியான உணவு கிடைத்தால் அதை இல்லாதவர்களுக்கு அளித்து உதவுங்கள்” என்ற சிறந்த கருத்துடன் முடித்தார் சினேகா.

சினேகாவின் பணி மேலும் பெரிய அளவில் வெற்றி பெற நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்..!

அடுத்த கட்டுரைக்கு