என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

சேவைப் பெண்கள்! : 4 - பிறர் வலிகளைத் தீர்த்து என் கவலைகளை மறக்கிறேன்!

சேவைப் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சேவைப் பெண்கள்!

#Motivation

ன் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப் படுத்தும் தொடர் இது. இந்த இதழில் திருவள்ளூரைச் சேர்ந்த வனஜா முரளிதரன்.

தனக்கான இலக்கையும் பாதையையும் சரியாகத் தீர்மானிக்க முடியாததாலேயே, பலரும் தாழ்வுமனப் பான்மையில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் சிலர் தவறான முடிவுகளை எடுத்து, தன்னைச் சார்ந்தோருக்கும் தீராத வேதனையை விட்டுச் செல்கின்றனர். அத்தகைய முடிவைத் தேர்ந்தெடுக்கத் துணிந்த வனஜா, தான் செய்த தவற்றைப் பிறர் செய்யக் கூடாது எனத் தீர்க்கமாக முடிவெடுத்து மனநல ஆலோசகராக மாறியவர். பல ஆயிரம் பேருக்கு கவுன்சலிங் கொடுத்து அவர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை உயிர்ப்பித்திருக் கிறார்.

“ப்ளஸ் ஒன் படிக்கும்போது ஒருத்தரை விரும்பினேன். நான் கிறிஸ்துவர், அவர் இந்து. விஷயம் தெரிஞ்சு பெற்றோர் என் படிப்பை நிறுத்திட்டாங்க. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி நாங்க கல்யாணம் செய்துகிட்டோம். ஒருகட்டத்துல என் வீட்டுலயும் எங்களை ஏத்துகிட்டாங்க. தடைப்பட்ட ஸ்கூல் படிப்புடன், பி.ஏ சைக்காலஜி முடிச்சேன். கல்யாண வாழ்க்கையும் சிறப்பா போச்சு. ‘ரெண்டு குழந்தைகளுக்குத் தாய் என்கிறதைத் தாண்டி நமக்கான அடையாளம் என்ன’ன்னு எனக்குள் நிறைய கேள்விகள்.

கூடப்பிறந்த அக்காவும் தங்கையும் உடல்நிலை சரியில்லாம அடுத்தடுத்து மரணமடையவே ரொம்பவே தவிச்சேன். விரக்தியின் உச்சத்துல ஒருகட்டத்துல வாழப்பிடிக்காம அதிகளவுல தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன். காப்பாத்திட்டாங்க. அந்த முடிவால நானும், என் குடும்பத்தினரும் ரொம்பவே வேதனைப்பட்டோம். ‘நீ இழந்ததை மத்தவங்களுக்குக் கொடுத்து சந்தோஷப்படுறதே சிறந்த பணி’ன்னு குடும்பத்தினர் உட்பட பலரும் நம்பிக்கை கொடுத்தாங்க. என்னை மாதிரி இனி யாரும் தவறான முடிவை எடுக்காம இருக்க நம்பிக்கையளிக்கிறதே வாழ்நாள் கடமையா முடிவெடுத்தேன். அதுக்காக, எம்.பில் (சைக்காலஜி) உட்பட பல படிப்புகளை முடிச்சேன்”

சேவைப் பெண்கள்! : 4 - பிறர் வலிகளைத் தீர்த்து என் கவலைகளை மறக்கிறேன்!

- கசப்பான அந்த அனுபவத்திலிருந்து வனஜாவுக்குத் தெளிவு பிறக்க, தனக்கான பாதையைச் சரியாகத் தீர்மானித்து மனநல ஆலோ சகராகப் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்.

படிப்பைப் பாதியில் கைவிட்டு சரியான வேலைவாய்ப்பு இன்றி தவிப்பவர்கள், குடும்ப வன்முறை உட்பட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சென்னை ஒய்.டபுள்யூ.சி.ஏ கம்யூனிட்டி கல்லூரியில் தன்னம்பிக்கை மற்றும் மனநல ஆலோசனை களுடன் தொழில் பயிற்சியும் கொடுத்து உதவு கின்றனர். அந்தப் பணிகளைச் சில ஆண்டுகளுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார் வனஜா. அதே பணிகளைச் சென்னைப் புழல் சிறையிலுள்ள பெண் கைதிகளுக்குக் கொடுப்பதற்கும் 2010-ல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கூடவே, கைதிகளுக்கு எதிர்மறை மற்றும் வன்முறை எண்ணங்களைப் போக்கவும் கவுன்சலிங் கொடுத்துப் பக்குவப் படுத்துவது, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வது, தொழிற்பயிற்சி கொடுப்பது உட்பட பல்வேறு பணிகளையும் செய்திருக்கிறார். அந்தச் சிறையின் கெளரவப் பார்வையாளராக (Non-Official Visitor) எட்டு ஆண்டுகள் பணியாற்றி யவர், பல நூறு பெண் கைதிகளின் மறு வாழ் வுக்கு உதவியிருக்கிறார்.

சேவைப் பெண்கள்! : 4 - பிறர் வலிகளைத் தீர்த்து என் கவலைகளை மறக்கிறேன்!

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறையால் குடும்பநல ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் பெண் களுக்கும், குடும்ப வன்முறையால் பாதிக்கப் படுபவர்களுக்கும் மனநல ஆலோசனை களுடன், இலக்குகளைத் தீர்மானிக்கவும் சில ஆண்டுகள் பயிற்சி கொடுத்துள்ளார். ‘ஹார்ட்ஸ் டு கேர்’ என்ற அமைப்பைத் தொடங்கி, பல்வேறு பிரச்னைகளால் தவிக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் மனநல ஆலோசனை, தன்னம் பிக்கைப் பயிற்சிகளை வழங்கிவருகிறார். மேலும், தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி, 500-க்கும் மேற்பட் டோருக்கு சேவை நோக் கத்தில் வேலை வாய்ப்பும் பெற்றுக் கொடுத் துள்ளார். திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவராகவும் தற்போது செயல்படுகிறார்.

``குடும்பப் பொருளாதா சூழ்நிலை, அறியாமை, `பிள்ளை கலப்புத் திருமணம் செய்துடுமோ'ங்கிற எண்ணம் போன்ற பல காரணங்களால பெற்றோர் பெண் பிள்ளைகளுக்கு 18 வயசுக்கு முன்பே கல்யாணம் செய்து வைப்பது தொடர்கதையாகுது. நல்லது, கெட்டதைப் புரிஞ்சுக்கப் பக்குவமில்லாம ஸ்கூல் பருவத்துலயே காதலிப்பது, பெற்றோரை எதிர்த்துக் கல்யாணம் செய்துக்கிறதுனு சில பெண் பிள்ளைகளும் தவறான பாதையில் போறாங்க. சட்டப்படி செல்லாத இதுபோன்ற 18 வயசுக் குட்பட்ட கல்யாணங்களால, கற்றல் இடைநிற்றல் அதிகரிக்குது. தன் குழந்தைக்குச் சரியானதைக் கொடுக்கப் பக்குவமில்லாம இருப்பது, பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பது, கணவன் மனைவிக்கு இடையே புரிந்துணர்வு இல்லாம கருத்து வேறுபாடு ஏற்படுவது, இளம் வயசுலயே கைம்பெண் ஆவது, மன அழுத்தம், குடும்ப வன்முறை, திருமணம் தாண்டிய மற்றொரு துணை தேடுதல்னு குழந்தைத் திருமணமான 90 சதவிகிதப் பெண்களின் வாழ்க்கை மகிழ்ச்சியா இருப்பதில்லை.

பெண் குழந்தைங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து நடக்குது. இதனால தாயாகும் 18 வயசுக்குட்பட்ட குழந்தைகளின் வாழ்நாளும் உளவியல் ரீதியா ரொம்பவே பாதிக்கப்படுது. இது போன்ற சிக்கல்களால் பாதிக்கப் படும் பெண்களின் கண்ணீர்க் கதை களைத் தினமும் கேட்கிறேன். என்ன பிரச்னை இருந்தாலும், எல்லாக் குழந்தைகளுக்கும் குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியாவது முழுமையா கிடைக்கணும்'' என்று மெல்லிய சோகத்துடன் கூறுபவர், பாதிக்கப் பட்ட அத்தகைய பெண்கள் பல நூறு பேருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, சட்டத் தேவைகளுக்கும் உதவி புதிய வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

``இன்றைய இளைய தலைமுறை யினர் பெரும்பாலானோர் இலக்கே இல்லாம இருக்காங்க. இந்த விஷயத்தில் பெற்றோர்கூட கவனம் செலுத்தத் தவறிடுறாங்க. எட்டாவது படிக்கும்போதே எதிர்கால இலக்கைத் தீர்மானிச்சாதான், மேல்நிலைக்கல்வி, உயர்கல்வினு அடுத்தடுத்து சிறப்பான முறையில் உயர முடியும். இலக்கில் உறுதியா இருந்தா, மனசு தவறான பாதையிலும் தடுமாறாது. என்னை நாடிவரும் எல்லா தரப்பினரின் பிரச்னை தீரும்வரை தொடர்பில் இருந்து, அவங்களுக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பை பலப்படுத்துறேன். மத்தவங்களோட வலிகளைத் தீர்ப்பதில் என் கவலைகளை மறக்கிறேன். ஆதரவற்றவங்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து தன்னிச்சையா செயல்பட உதவுற வகையில காப்பகம் தொடங்கறதுதான் என் அடுத்த இலக்கு. எல்லோருக்குமே ஏதாச்சும் ஓர் அடையாளம் நிச்சயம் உண்டு. அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் நம்பிக்கையை இழக்காம உழைச்சா வெற்றி உறுதி”

- வனஜாவின் அனுபவ வார்த்தைகள் வாழ்க்கை மீதான பிடிப்பைக் கூட்டுகின்றன.

பாதை காட்டிய பயிற்சி வகுப்பு!

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

னஜாவால் பயன் பெற்றவர் களில் ஒருவரான உமா மகேஸ்வரி, “2017-ல் டிகிரி முடிச்சதும் வேலை கிடைக்காம சிரமப்பட்டேன். மேடம் பத்தி தெரிஞ்சுகிட்டு அவங்க நடத்தின வங்கிப் பணிக்கான இலவசப் பயிற்சியில் கலந்து கிட்டேன். வேலை வாய்ப்புக்கும் உதவினாங்க. சில மாசத்துலயே சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துல தகவல் பதிவேற்ற அலுவலரா வேலை கிடைச்சது.

புது வீட்டுக்கான லோன் கட்டவும், தம்பிங்க படிப்புக்கும் என் வருமானமும் பெரிசா உதவுது” என்கிறார் மகிழ்ச்சியுடன்.