பிரீமியம் ஸ்டோரி
ன் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியைச் சேர்ந்த ராணி.

இருளர் சமூகத்தின் நம்பிக்கை வெளிச்சமான ராணியின் பாதங்கள், தன் சமூக மக்களின் மேன்மைக்காக 25 ஆண்டுகளாக ஓயாமல் தமிழகம் முழுக்கப் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. கொத்தடிமை முறை ஒழிப்பு, கல்வி, சுயதொழில், அடிப்படை வசதிகளைப் பூர்த்திசெய்து கொடுப்பது என அம்மக்களின் நலனுக்காகவே வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட சேவை மனுஷி.

தானே பாடியும் நடனமாடியும் நாடக வடிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவரை, சிறுசேரியிலுள்ள இருளர் குடியிருப்பு ஒன்றில் சந்தித்தோம்.

“வளர்ந்ததெல்லாம் பக்கத்துல இருக்கிற குடியிருப்புலதான். என் பெற்றோர் கொத்தடிமைகளா இருந்தவங்க. அந்தக் கஷ்டங்களை விளக்கி அதுபோல நாங்க மாட்டிக்கக் கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா, அவங்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால எங்களையும் படிக்க வைக்கல. அப்பா மூலிகை வைத்தியர். சிகிச்சை கொடுக்கவும், மூலிகை பறிக்கப் போறப்பவும் என்னையும் கூட்டிக்கிட்டுப்போவார். தவிர, அம்மாகூட விவசாய வேலைக்கும் போவேன். 15 வயசுல வயது வந்தோர் கல்வி முறையில எட்டு மாசம் மட்டும் படிச்சு எழுதப் படிக்கக் கத்துகிட்டேன். முறைப்படி எனக்கு வைத்திய முறைகளைச் சொல்லிக்கொடுத்தார் அப்பா. கல்யாணத்துக்குப் பிறகு, நானும் வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சேன்

இருளர் பழங்குடி பெண்களுக்கான நல அமைப்பு சார்புல, ஸ்கூல் குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் எழுதப் படிக்கக் கத்துக் கொடுத்தேன். அப்போதான் எங்க மக்களின் அறியாமை, கஷ்டநிலை பத்தி புரிஞ்சது. இனி எங்க சனங்களின் நலனுக்காகவே வேலை செய்யுறதுனு முடிவெடுத்தப்போ, அதே அமைப்பின் சார்பில் சுற்றுவட்டார அஞ்சு கிராமங்கள்ல இருக்கும் இருளர்களின் முன்னேற்றத்துக்கான வேலைகள் செய்ய மேற் பார்வையாளரா என்னை நியமிச்சாங்க. சாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு, வசிப்பிடத் துக்கான இலவச பட்டா, அடிப்படை வசதிகள்னு நியாயமான தேவைகள்கூட எங்களுக்கு எளிதா கிடைக்காது. உரிமைகளுக் காகப் போராடுறதுதான் ஒரே தீர்வுனு 1994-ல் களத்துல இறங்கினேன்”

ராணி
ராணி

- எழுச்சி குறையாமல் பேசும் ராணி, தன் சமூக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக சளைக் காமல் அதிகாரிகளைச் சந்திப்பது, சாலையில் போராடுவது, காவல் நிலையம், நீதிமன்றம் செல்வது எனச் சோர்வின்றி பணியாற்றுகிறார். சுனாமி யில் வீடு இழந்த 500-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங் களுக்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு வீடு கட்டிக் கொடுக்க உதவியிருக்கிறார். இந்த மக்கள் கொத்தடிமை களாகத் தொழிற்சாலைகளில் சிக்கித் தவிப்பது தொடர்கதை தான். இது குறித்த தகவல்களை ஆதாரத்துடன் திரட்டி, தேசிய ஆதிவாசி தோழமைக் கழகத்துடன் இணைந்தும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் சென்றும் தொழிற்சாலை களில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியைத் துணிச்சலு டன் செய்துவருகிறார். இதுவரை 6,000-க்கும் அதிக மானோரை மீட்டிருக்கிறார். பாம்புக்கடி, தேள்கடி, உடல் நலப் பிரச்னைகள் போன்ற அவசரகாலத் தேவைகளுக்கு முதலுதவி சிகிச்சைகளை மலிவான கட்டணத் திலும் இலவசமாகவும் செய்துவருகிறார்.

“கிழங்குகள் மற்றும் மூலிகைகள் சேகரிப்பது, பாம்பு மற்றும் எலி பிடிக்கிறது, வேட்டைத் தொழில் ஆகியவையே எங்க மக்களின் பிரதான வேலைகள். இப்ப மலைக்காடு களுக்குள்ள நுழைய எங்களுக்கு அனுமதியில்ல. சரியான வேலைவாய்ப்பு இல்லாம மக்கள் கஷ்டப்படுறாங்க. தினக்கூலி வேலை செய்யுற எங்க மக்கள் திடீர் பணத்தேவை, குடும்பக் கஷ்டத்துக்குக் கடன் கேட்கப்போய் கொத்தடிமையா மாட்டிப்பாங்க. இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளை யோசிச்சோம்.

50-க்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி, பெண்களுக்கு சேமிப்புப் பழக்கத்தைக் கத்துக்கொடுத்தோம். கூடவே சுயதொழில்கள் பலவற்றையும் அதே குழுக்கள் மூலம் செய்ய ஊக்கப்படுத்தினோம். சிறுசேரி சிப்காட் வளாகத்துல இயங்கும் கம்பெனிகள்ல செக்யூரிட்டி, துப்புரவுப் பணியாளர் உட்பட பல்வேறு வேலைகள்ல எங்க மக்களைச் சேர்த்துவிடுறேன். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 39 கிராமங்கள்ல 2,000-க்கும் அதிகமான இருளர் குடியிருப்பு மக்களின் தேவைகளுக்கு உதவிகிட்டிருக்கேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், ஆண்டுதோறும் மாசி மாதப் பெளர்ணமியில் மாமல்லபுரத்தில் நடைபெறும் இருளர்களின் ‘மாசி மகவிழா’வின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறார்.

இருளர் சமூகத்தில் பல்வேறு சடங்குகளிலும் திருவிழாக்களிலும் பாடப்படும் பாடல்கள் அழிந்துவருவதை அறிந்த ராணி, தமிழகம் முழுவதும் சென்று பாடல்களைச் சேகரித்துள்ளார். அந்தப் பாடல்களோடு கொத்தடிமை முறை ஒழிப்பு, கல்வி மற்றும் சேமிப்பின் அவசியம், அரசின் நலத்திட்டங்களைப் பெறும் வழிமுறைகள், பிறர் தயவின்றி வாழ்வது போன்ற மக்களின் முன்னேற்றத் துக்கான பயனுள்ள கருத்துகள் பலவற்றையும் பாடல்களாக இயற்றி, குழுவினருடன் சேர்ந்து தானும் பாடியும் நடனமாடியும் விழிப்புணர்வு நாடகங்களை நடத்திவருகிறார். இதற்காக, தனது ‘டோல்கட்டை இருளர் கலைக்குழு’ மூலம் தமிழகம் முழுவதும் ஏராளமான கிரா மங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

“அடிப்படைத் தேவைகளுக்காக எங்க மக்கள் இன்னும் போராடிகிட்டுதான் இருக்காங்க. இந்த நிலையை மாத்தவே, எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் அதிகாரிகள் உட்பட யாரா இருந்தாலும் தைரியமா குரல் எழுப்புறேன். இதே குணத்தை எங்க மக்களுக்கும் கத்துக்கொடுக்கிறேன். சின்ன வயசுலயே பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது, முற்போக்குச் சிந்தனை இல்லாததுனு எங்க மக்களின் முன்னேற்றத்துக் குத் தடையா இருக்கிற விஷயங்களை மாத்தவும் தொடர்ந்து குரல் கொடுக்கிறேன்.

சாதிப் பாகுபாடு, பயம், புறக்கணிப்பு, அவ மதிப்பு, அடக்குமுறை, வறுமைனு எங்களை வாட்டும் பிரச்னைகள் நிறைய இருக்கு. எனவேதான், மக்களோடு மக்களா இணைஞ்சு வாழாம ஒதுக்குப்புற குடியிருப்புலயே வாழு றோம். கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைச் சாலே போதும். எங்க சமூகமும் மேல வந்து டும். அதுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை”

- நியாயமான வேண்டுகோளை அழுத்தமாக முன்வைக்கிறார் ராணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்க மகிழ்ச்சிக்கு ராணிதான் காரணம்!

சேவைப் பெண்கள்! : 5 - இருள் நீக்கும் ராணி!

ராணியால் பயன்பெற்றவர்களில் ஒருவரான சம்பத்தம் மாள், “ஆரம்பத்துல சரியான வேலையில்லாம தொழிற் சாலையில கடன் கேட்டுப் போனேன். அதுக்குப் பின்னாடி இருக்கிற ஆபத்தைப் புரிய வெச்ச ராணிதான், ஒரு மகளிர் குழுவுல என்னைச் சேர்த்துவிட்டாங்க. அந்தக் குழு மூலமாவே கடனுதவியும் வேலைவாய்ப்பும் கிடைச்சது. குழுவுல தலைவியா ஏழு வருஷங்கள் இருந்ததுடன், 20 வருஷமா மகளிர் குழு மூலமா பயனடையறேன். ஆடு, கோழி வளர்த்தும் வருமானம் பார்க்கிறேன். அடிப்படைத் தேவைகளுக்கு உதவியதோடு, எங்க மக்களுக்குத் தைரியமா பேசவும் கத்துக் கொடுத்தாங்க. எங்க குடியிருப்புல மட்டும் அஞ்சு மகளிர் குழுக்கள் இருக்கு. இதனால, நிறைய குடும்பங்கள் பயனடைய ராணிதான் காரணம்” என்கிறார் நெகிழ்ச்சியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு