Published:Updated:

சேவைப் பெண்கள்! 6 - புறக்கணிக்கப்படும் மனிதர்கள்... புகலிடம் கொடுக்கும் சுரைடா!

சுரைடா
பிரீமியம் ஸ்டோரி
சுரைடா

- தாய்மை பொங்கும் ‘ரெகோபோத்’

சேவைப் பெண்கள்! 6 - புறக்கணிக்கப்படும் மனிதர்கள்... புகலிடம் கொடுக்கும் சுரைடா!

- தாய்மை பொங்கும் ‘ரெகோபோத்’

Published:Updated:
சுரைடா
பிரீமியம் ஸ்டோரி
சுரைடா

என் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த சுரைடா.

தன்னிலை மறந்து வேற்று சிந்தனை உலகத்தில் வாழும் மனநலம் பாதித்தோருக்கு அடைக்கலமாகத் திகழ்கிறது சென்னை, பரணிபுத்தூரிலுள்ள ‘ரெகொபோத்’ காப்பகம். இந்தக் காப்பகத்தில் பராமரிக்கப் படும் பெண்களைக் குடும்ப உறவுகள்போல கவனித்துக்கொள்கிறார் சுரைடா. காப்பகத்துக்குச் சென்ற நம்மை, அங்கு பரா மரிக்கப்படும் பெண்கள் சூழ்ந்துகொண்டு தங்கள் சிந்தனை உலகத்தைப் பற்றி வெகுளி யாக விவரித்தது பரிதாபத்துக்குரிய சோகம்.

“அம்மா பிராமணர். அப்பா கிறிஸ்துவர். கலப்புத் திருமணம் செய்துகிட்டாங்க. பி.ஏ சைக்காலஜி படிக்கும்போது ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரின் தேவைகளையும் உணர்ந்தேன். ஒருநாள் சாலைப் பயணத்துல, சரியான உடையில்லாம மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் எதிர்கொண்ட கஷ்டங்களைக் கண்கூடா பார்த்தேன். தனக்கான தேவையையும் உதவியையும் பிறர்கிட்ட கேட்கக்கூட முடியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு முழு நேரமா உதவ முடிவெடுத் தேன். அதுக் காகவே, பெற்றோர் ஊக்கத்துடன் சோஷியல் வொர்க்ல மாஸ்டர் டிகிரி படிச்சேன். அடுத்து காதல் கல்யாணம். கணவர் கால்நடை மருத்துவர்.

சேவைப் பெண்கள்! 6 - புறக்கணிக்கப்படும் மனிதர்கள்...
புகலிடம் கொடுக்கும் சுரைடா!

காப்பகம் தொடங்குவதற்கான அடிப்படை விஷயங்களைக் கத்துகிட்டு, 2000-ல் சென்னையில குடியேறியதும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகத்தை ஆரம்பிச்சேன். ரெண்டு பெண்களுடன் தொடங்கிய காப்பகம் படிப்படியா வளர்ந்துச்சு. தனிக் கட்டடம் கட்டினது, பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வர்றதுனு இந்த வேலையில முழுமையா கவனம் செலுத்தினேன். 18 வயசுக்கு மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட, மனவளர்ச்சிக் குறைபாடு உடைய பெண்களை மட்டும் போலீஸாரின் அனுமதிச் சான்றிதழுடன் எங்க காப்பகத்துல சேர்க்கிறோம்” என்கிற சுரைடா, காப்பகத்தில் மதிய உணவு தயாரிக்கும் பணியில் பிஸியானார்.

காப்பகத்தில் புதிதாக அனுமதிக்கப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர். அவருக்கு வேறு உடல்நலப் பிரச்னைகள் உள்ளனவா என்று தெரிந்து கொள்கின்றனர். பாதிப்புகள் இல்லாத பட்சத்தில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தி அவருக்கு இருக்கும் மனநல பாதிப்பின் தன்மைக்கேற்ப உரிய மருத்துவ உதவியுடன் படிப்படியாகச் சரி செய் கின்றனர். பின்னர், அவர் களின் நினைவுத் திறனுக்கான பயிற்சியுடன், சுயதொழில் செய்யவும் பழக்கப்படுத்து கின்றனர். பேப்பர் பேக், ஜூட் பேக், ஃப்ளவர் மேக்கிங், கிஃப்ட் பாக்ஸ் உட்பட பலதரப்பட்ட பொருள் களையும் இங்குள்ள பெண்கள் தயாரிக்கின்றனர். இந்தக் காப்பகத்தில் இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர். தவிர, சுரைடா நடத்தும் இலவச சிறப்புப் பள்ளியில் தற்போது 80-க்கும் மேற்பட்ட குழந்தை கள் பயன்பெறுகின்றனர்.

“மனநலக் குறைபாட்டுடன் பிறந்த ஒருத்தரை முழுமையா குணப்படுத்துறது கடினம். இருப்பினும், அந்தப் பாதிப்பின் தன்மையைக் குறைக்க அவர்களுக்கும் மருந்து, மாத்திரைகள் அவசியம் தேவை. அதேநேரம், நல்லா இருந்த ஒருத்தர் ஏதாச்சும் ஒரு விபத்தால் அல்லது சம்பவத்தால் ஆழ்மனது கடுமையா பாதிச்சு சுயநினைவை இழக்கும்போது தான் மனநல பாதிப்புக்கு ஆளாகிறார். இவர்களை முறையான மருந்து, மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தலாம். அந்தப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். எங்ககிட்ட வரும்போது கர்ப்பமா இருக்கும் பெண்ணுக்குச் சிறப்பு கவனிப்பு கொடுத்துப் பராமரிப்போம். குழந்தை பிறந்ததும் அரசின் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைப்போம். ஓரளவுக்கு குணமானவங் களோட ஒப்புதலுடன் அவங்க குழந்தையை நாங்களே வேறு காப்பகத்தில் சேர்த்துப் படிக்க வைப்போம். அவ்வப்போது தன் குழந்தையைத் தாய் பார்க்கவும் ஏற்பாடு செய்வோம்.

சிலர் ரொம்பவே ஆக்ரோஷமா நடந்துப் பாங்க. மத்தவங்களைக் கடுமையா தாக்குவாங்க. அவங்களை இயல்புநிலைக்குக் கொண்டு வரும்வரை, தனிமைப்படுத்தி பத்திரமா பார்த்துப்போம். தனக்கான அடிப்படைத் தேவைகளை ஓரளவுக்கு தானே செய்துகிட்டு சுகாதாரத்துடன், சுயதொழில் செய்யுற பெண் களை ஊக்கப்படுத்த டோக்கன் கொடுப்போம். அதில், அவங்க ஆசைப்பட்ட பொருள்களை வாங்கிக்கலாம். இதனால, இங்குள்ள பெண்களின் நினைவுத்திறன், இலக்கை அடையும் திறன் மேம்படும். தவிர, போதிய நினைவாற்றல் இல்லாதவங்களுக்கு அடிப் படைத் தேவைகளைச் செய்துவிட்டு, அவங் களோட ஆசையை நிறைவேற்றவும் கவனம் செலுத்துறோம்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

சேவைப் பெண்கள்! 6 - புறக்கணிக்கப்படும் மனிதர்கள்...
புகலிடம் கொடுக்கும் சுரைடா!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் குணமானாலும்கூட பெரும்பாலான குடும்பத் தினர் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் அந்தப் பெண்களின் விருப்பத்துடன், சென்னையை அடுத்த சோமங்கலத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கின்றனர். அவர்களே கால்நடைகளை வளர்ப்பதுடன், அன்றாட சமையலுக்கான காய்கறிகளையும் தோட்டத்தில் விளைவிக்கின்றனர். சுரைடா நிர்வகிக்கும் இந்த மையத்துக்கு அருகிலேயே ‘ஆசையின் புதுமை’ என்ற விற்பனைக் கூடத்தையும் நடத்துகிறார். பயன்படுத்தாத பழைய பொருள்கள் எதுவும் எந்த நிலையில் இருப்பினும் போன் செய்தால் நேரில் வந்தே பெற்றுக்கொள்கின்றனர். அந்தப் பொருள் களைப் புதுப்பித்து விற்பனை செய்கின்றனர். காப்பகத்திலும் மறுவாழ்வு மையத்திலும் 300 பெண்கள் வசிக்கின்றனர்.

“மறு வாழ்வு மையத்துல, யாருக்கும் பாரமா இல்லாத உணர்வுடன், தனக்கான வாழ்வாதாரத் தேவைக்குத் தானும் உழைக்கும் நிறைவை ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுத்துறோம். மனநல பிரச்னைக்கேற்ப ஒவ்வொருத்தரும் முறையான மருந்து, மாத்திரைகள் கொடுத்தும், தொடர்ச்சியா பேச்சு கொடுத்தும், நினைவுத் திறனுக்குப் பயிற்சி கொடுத்தும் குறிப்பிட்ட காலகட்டத்துல பெரும்பாலானோரைக் குணப் படுத்த முடியும். எவ்வித புறக்கணிப்புகளும் இன்றி, இயல்பான மனிதர்களைப் போலவே மனநோய் பாதிப்புள்ளோரையும் அணுகணும். இந்த பாதிப்புள்ளோரைப் பார்த்தா, எங்களுக் குத் தகவல் கொடுத்தா போதும். அவங்களை மீட்டு நாங்க பார்த்துக்கிறோம்”

­- சுரைடாவின் வார்த்தைகளில் அன்பும் அக்கறையும்!

அருள்மதி
அருள்மதி

காப்பகமே என் வீடு!

சுரைடாவால் பயன் பெற்றவர் களில் ஒருவரான அருள்மதி, “பூர்வீகம் சேலம். பெற்றோர் இல்லாம நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். எம்.காம் முடிச்சுட்டு சேலத்துலயே சில வருஷம் வேலை செஞ்சேன். அப்புறம் உத்தரப்பிரதேசத்துல வேலை பார்த்தேன். அங்க சில பிரச்னைகளால மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தெரிஞ்சவங்க மூலமா இந்தக் காப்பகத்துக்கு வந்தேன். முறையான சிகிச்சையால் குணமானேன்.

என் விருப்பப்படி கணினி ஆபரேட்டரா வேலை கொடுத்தாங்க. புது வாழ்க்கை கிடைச்சு சந்தோஷமா இருக்குறதால, இந்தக் காப்பகமே என் வீடாகிடுச்சு” என்கிறார் நிறைவுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism