Published:Updated:

வரதட்சணை... குறைகிறதா, பெருகுகிறதா?

வரதட்சணை
பிரீமியம் ஸ்டோரி
News
வரதட்சணை ( Ashish Kumar )

மணமகளின் பெற்றோர் தாங்களாக விருப்பப்பட்டு தங்கள் மகளுக்குப் பரிசாக நகையோ, சொத்தோ, பணமோ கொடுப்பது சீதனம்.

விஸ்மயா, அர்ச்சனா, சுசித்ரா, ஜோதிஸ்ரீ... ஒரே வாரத்தில் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த பெண்கள் இவர்கள். ‘வரதட்சணையெல்லாம் இப்போ இல்ல...’ என்று கண்மூடித்தனமாகப் பேசிக் கொண்டிருந்த உலகுக்கு அதன் கோர முகத்தைக் காட்ட, தங்கள் உயிரைவிட்டவர்கள்.

முதல் மூவர் இந்தியாவிலேயே கல்வியறிவு மிகுந்த கேரளாவைச் சேர்ந்தவர்கள். நான்காவதாக உயிரை விட்டிருக்கிறார், சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ. கணவன், மாமியார் என்று ஒட்டு மொத்தக் குடும்பமும் நடத்திய கொடுமைகள் குறித்து இவர் பதிவிட்டிருந்த வீடியோ வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடுமை... ராஜஸ்தானில் நடந் திருக்கிறது சில தினங்களுக்கு முன். வரதட்சணை கிடைக்காத வெறுப்பில், நண்பர்கள் மூலமாக தன் மனைவிக்கே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் கணவன்(?). இதுவும் போதாதென்று மனைவியின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடியைத் தூவியும் சித்ரவதை செய்திருக்கிறான். இதிலும் நண்பர்களைக் கூட்டுச் சேர்த்திருக்கிறான்.

இவையெல்லாம் வெளியில் தெரிந்த கொடூரங்கள்... கொடுமைகள். வாசலைத் தாண்டாத கொடூரங்களும் கொடுமைகளும் எத்தனை எத்தனையோ!

படிப்பு, வேலை, பொருளாதார சுதந்திரம் என்று மாறி வரும் பெண்களின் நிலை கண்டு, `வரதட்சணை பிரச்னை இப்பவும் இருக்கா என்ன..?’ என்றே நம்மில் பலரும் நினைக்கிறோம். விஸ்மயா நகர்ப்புற, மருத்துவ மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வரதட்சணை யாகக் கொடுத்த காரின் விலை மதிப்புக் குறைவு என்பதால், கணவரால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கிராமங் களில், ‘காது, மூக்குத்துளைய தங்கத்துல மூடி கட்டிக்கொடுக்க முடியாததால பொம்பளப் புள்ள தீப்பெட்டி கம்பெனிக்கு/பட்டாசு ஆலைக்கு/மில்லுக்கு வேலைக்குப் போயிட்டிருக்கு’ என்று மருகும் அம்மாக் களின் புலம்பல்கள் நம் காதுகளில் விழுகின்றன இன்றும். ஆக, வரதட்சணைக் கொடுமை குறைந்திருக்கலாம், ஒழிய வில்லை.

வரதட்சணை... குறைகிறதா, பெருகுகிறதா?

வரதட்சணை என்றால் என்ன?

‘‘ஒரு திருமண உறவை ஏற்படுத்துவதற்காக ‘இவ்ளோ நகை போடுங்க, இவ்ளோ ரொக்கம் கொடுங்க, இவ்ளோ சொத்து கொடுங்க’ என்று மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் கேட்டு வாங்குவது வரதட்சணை. மணமகளின் பெற்றோர் தாங்களாக விருப்பப்பட்டு தங்கள் மகளுக்குப் பரிசாக நகையோ, சொத்தோ, பணமோ கொடுப்பது சீதனம். சீதனத்தில் கணவனுக்கு உரிமை கிடையாது’’ என்று விளக்குகிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

‘‘திருமணத்தின்போது, ‘கேட்டு’ வரதட்சணை தந்தாலும், ‘கேட்காமல்’ சீதனம் தந்தாலும், இரண்டு குடும்பமும் நகை, தொகையில் ஆரம்பித்து டீஸ்பூன் வரைக்கும் மணமகளுக்கு வழங்கப்படுபனவற்றை இரண்டு நோட்டுகளில் பட்டியல் போட்டு எழுதி, குடும்பத்துக்கு ஒரு நோட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். சில பகுதிகளில் இந்த ‘சீர் நோட்’ பழக்கம் வழக்கமாகவே உள்ளது. கூடுதலாக, பொது மனிதர்களின் முன்னிலையில் இருவீட்டாரும் அதில் கையெழுத்துப் போட்டுக்கொள்வதை வலியுறுத் துங்கள். இது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் ஒரு விதி. வரதட்சணைக் கொடுமை தாங்காமல் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வருகிற பெண்கள், `எங்கப்பா வீட்ல போட்ட நகை களைப் பிடுங்கிக்கிட்டாங்க. அதை எப்படியாவது வாங்கிக்கொடுங்க மேடம், நான் என் குழந்தைகளைக் காப்பாத்திக்குறேன்’ என்று அழு வார்கள். இப்போது புரிகிறதா, பட்டியல் எவ்வளவு அவசியம் என்று’’ என வலியுறுத்துகிறார் சாந்தகுமாரி.

தமிழகத்தின் நிலை என்ன?

தமிழ்நாடு காவல்துறை தரவுப்படி, 2006-ல் 32 வரதட்சணை மரணங் களும், 2007-ல் 43 மரணங்களும், 2008-ல் 53 (சென்னையில் மட்டும் 25) மரணங்களும், 2009-ல் 39 (சென்னையில் மட்டும் 19) மரணங்களும் பதிவு செய்யப்பட்டன. மெட்ரோபாலிட்டன் நகரமான சென்னையில் அதிகரித்த வரதட்சணை மரணங்கள் அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2020-ல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2018 தரவின்படி, தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூருவில் 53 பெண்களும், சென்னையில் 7 பெண்களும், ஹைதராபாத்தில் 17 பெண்களும், கொச்சியில் ஒரு பெண்ணும் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்திருந்தனர். டெல்லியில் 137 பெண்களின் உயிர்கள் பறி போயிருப்பது உச்சபட்ச அதிர்ச்சி.

வரதட்சணை... குறைகிறதா, பெருகுகிறதா?

என்ன செய்ய வேண்டும்?

வரதட்சணைக் கொடுமை தமிழகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது பற்றி, காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்), ‘‘இங்கு பதியப் பட்ட புகார்களைவிட வரதட் சணைக் கொடுமைக்கு ஆளாகி, குடும்ப, சமூக அமைப்புக் கட்டுப் பாடுகளால் வீட்டுக்குள்ளேயே வதைபட்டுக் கொண்டிருக்கும் பெண்களே இங்கு அதிகம். வரதட்சணைக் கொடுமை செய்வதில் படித்தவர், படிக்காதவர், கிராமம், நகரம் என எந்த வித்தியாசமும் கிடையாது.

விஸ்மயா, தன் கணவர் தன்னை அடித்த காயங்களின் புகைப் படங்களை போட்டோ எடுத்து அனுப்பிய நேரத்தில், அந்த வீட்டைவிட்டு வெளியேறும் வழிகளைக் கண்டடைந்திருந்தால், இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்.

எனவே, வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் முதலில் செய்ய வேண்டியது, அந்த வீட்டை விட்டு வெளியேறுவது. அப்படிப் பிறந்த வீட்டுக்கு வரும் பெண்களை, பெற்றோர்கள் குடும்ப கௌரவம், தங்கச்சி, தம்பியின் வாழ்க்கை என்றெல்லாம் சொல்லித் திருப்பி அனுப்புவதும், அந்தக் குற்றத்தில் பங்கெடுப்பது போலத்தான். புகுந்த வீட்டிலிருந்து வாழாமல் வரும் பெண்களை ஏற்றுக்கொள்ளாத குடும் பங்கள்தான், அவர் பிணமாக வரும் சூழலுக்கு அவரைத் தள்ளுகிறார்கள்’’ என்று இந்தக் கொடுமையின் மறுபக்கத்தையும் தோலுரிக் கிறார்.

விசாரணை எப்படி இருக்கும்?

வரதட்சணை தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஒன்பது வருடங்கள் பணியாற்றிய காவல்துறை பெண் அதிகாரி ஒருவர், நம்மிடம் சில தகவல் களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘திருமணமாகி ஏழு வருடங்கள் வரைக்கும்தான் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம் என்று சிலர் நினைக் கிறார்கள். அப்படியல்ல, வாழ்நாள் முழுக்க எப்போது வரதட்சணைக் கொடுமையைச் சந்தித்தாலும் புகார் கொடுக்கலாம். திருமணத்துக்கு முன் நகை, ரொக்கம், கார் என்று பெண் வீட்டாரிடம் கேட்டு வாங்கும் எல்லாமே வரதட்சணைதான். திருமணத் துக்குப் பின், `நான் தொழில் ஆரம்பிக்கணும், உங்கப்பா பணம் கொடுப்பாரானு கேளேன்’ என்பதை வரதட்சணை என்று சொல்ல முடியாது. அதுவே, `வாங்கிட்டு வந்தாதான் உன்கூட வாழுவேன்’ என்று சொல்லி கணவன், மனைவியை அடித்தால், அது வரதட்சணைக் கொடுமை.

சாட்சி வைத்துக்கொண்டு யாரும் வரதட்சணை கேட்பதில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மனைவி வரதட்சணைப் புகார் அளித்தால் ‘நான் கேட்கவில்லை’ என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு கணவனுக்குத்தான் இருக்கிறது. மிகச் சில பெண்கள் கணவர் வீட்டினருடனான மற்ற பிரச்னைகளின்போதும் அதை வரதட்சணைப் புகாராகப் பதிவு செய்வதால், காவல்துறையினர் மட்டுமல்லாமல் சமூகநல அலுவலர் ஒருவரும், உண்மையாகவே வரதட்சணைக் கொடுமை நடந்ததா என்பதை விசாரிப்பார். காவல் துறையும் சமூக நல அலுவலரும் கொடுமை நடந்திருக்கிறது என்று உறுதி செய்தால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். வரதட்சணை மரணங்களில் ஏழு வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம்’’ என்றார்.

வரதட்சணை... குறைகிறதா, பெருகுகிறதா?

தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்!

ஜனநாயக மாதர் சங்கத்தலைவரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான உ.வாசுகி, வரதட்சணையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான வழிகளை விவரித்தார்.

‘‘வரதட்சணைக்கு எதிரான அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து மக்களின் கருத்தில் பதிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஊடகங்கள், விளம்பரங்கள் மூலம் வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள், தண்டனைகள் குறித்து அரசு அறிவுறுத்தலாம். அரசியல் கட்சித்தலைவர்கள், தங்கள் கட்சிகளில் இருப்பவர்கள் வரதட்சணை வாங்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். அனைத்து மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் போன்றவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப் பவர்கள் வரதட்சணைக்கு எதிராகத் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கலாம். வரதட்சணையே இல்லாத ஊராட்சியை மக்கள் உருவாக்கலாம். இவையெல்லாம் தொலைநோக்குத் திட்டங்கள்.

உடனடியாகச் செய்ய வேண்டியது, வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான புகார்களின் மீது காலம் தாழ்த்தாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அது, ஓர் உயிரை கூடிய விரைவில் மரணத்திலிருந்து காப்பாற்றும். பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களின் புகாரின் மீது நடவடிக்கை எடுக் காமல், ‘அட்ஜஸ்ட் பண்ணிட்டு போம்மா’, ‘ஒரு தடவை மன்னிச்சு விடு’ என்று கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவல்துறையினர் மீது, ஐபிசி 166ஏ பிரிவின் கீழ், சம்பந்தப் பட்ட காவலர் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று புகாரளிக்கவும் முடியும்’’ என்கிறார்.

இது சமூக ஒழுங்குப் பிரச்னை!

வழக்கறிஞர் அருள்மொழி, ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங் களை சட்டம், ஒழுங்குப் பிரச்னை யாகப் பார்க்க முடியாது. இது சமூக ஒழுங்குப் பிரச்னை. வரதட்சணை கேட்டு கணவன் மனைவியை அடித்தால், ‘பொறுத்துப் போ’ என்றுதான் சொல்வார்கள் சுற்றியிருப்பவர்கள்.

குடும்ப வன்முறை, வரதட்சணை எனப் பெண்களுக்கு எதிரான குற்றங்களில், ஆணிடம் அவளை அடிப்பதற்கும் கொடுமைப்படுத்து வதற்கும் இந்தச் சமூக அமைப்பும், குடும்ப அமைப்பும் கொடுத்து வைத்திருக்கிற உரிமையைப் பறித்து, அவனை எதிர்க்கேள்வி கேட்க வேண்டும். அதுதான் தீர்வுக்கான முதல் படி. அது நிகழாதவரை, பெண்கள் வரதட்சணை உள்ளிட்ட ஏதோவொரு காரணத்துக்காக எங்கோ ஒரு வீட்டில் உயிரிழந்து கொண்டுதான் இருப்பார்கள்’’ என்கிறார்.

இனியும் இழக்காது இருப்போம் நம் மகள்களை!

***

எங்கு, எப்படி புகார் செய்வது?

வழக்கறிஞர் சாந்தகுமாரி கூறும்போது, ‘‘வரதட்சணைக் கொடுமை மட்டுமல்ல, குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் என்றில்லாமல், எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, அந்தக் காவல் நிலையத் தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, பின்னர் உரிய காவல் நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். இதை ஸீரோ எஃப்.ஐ.ஆர். என்போம். `உன் வீடு இருக்கிற ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடு’ என்று காவல்துறையினர் சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது. மேலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக் கலாம். காவலன் செயலி, மாநில மனித உரிமை ஆணையம், மாநில மகளிர் ஆணை யத்திலும் புகார் அளிக்கலாம். இந்த ஹெல்ப் லைன் எண்களைப் பயன்படுத்தலாம்...

100 - காவல்துறை ஹெல்ப்லைன் எண்.

1091 - கடத்தல், குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை, ஈவ் டீஸிங் சூழல்கள் உள்ளிட்ட பெண்களுக்கான அவசரகால உதவிக்கான தேசிய ஹெல்ப்லைன் எண்.

நீங்கள் இருக்கும் இடத்தை ட்ராக் செய்து அவர்களே வந்துவிடுவார்கள்.

வரதட்சணை கேட்டு வாங்குகிறார்கள்!

`உங்கள் குடும்பத்தில் வரதட்சணை வழக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது?’ - அவள் விகடன் முகநூல் பக்கத்தில் எழுப்பியிருந்த கேள்விக்கு, வாசகர்கள் பகிர்ந்த பதில்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சர்வே முடிவு.

வரதட்சணை... குறைகிறதா, பெருகுகிறதா?

வரதட்சணையே இல்லாத கிராமங்கள்!

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிராமத்தில் பெண் எடுக்கும்போது வரதட்சணை வாங்குவதில்லை. பெண் கொடுக்கும்போதும் வரதட்சணைக் கொடுப்பதில்லை. சொந்தக் கிராமத்துக்குள் மட்டு மல்ல, பெண்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கும் போதும் இவர்கள் வரதட்சணை தருவதில்லை. இதேபோல, வேலூரில் இருந்து திருவண்ணா மலை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள துருகம் மற்றும் ஒண்ணுபுரம் கிராமங்களிலும் வரதட்சணை வழக்கமில்லை.