Published:Updated:

பெண்ணின் திருமண வயது 18... 21... 23?

பெண்ணின் திருமண வயது
பிரீமியம் ஸ்டோரி
பெண்ணின் திருமண வயது

விவாத மேடை

பெண்ணின் திருமண வயது 18... 21... 23?

விவாத மேடை

Published:Updated:
பெண்ணின் திருமண வயது
பிரீமியம் ஸ்டோரி
பெண்ணின் திருமண வயது
“இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18. இளவயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடும் ரத்தச் சோகையும் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு பரிசீலனை நடக்கிறது. இதுகுறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பெண்களின் திருமண வயது உயர்த்தப்படும்” - இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இந்த அறிவிப்பு, இப்போது பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரதமர் பேசிய சில மணி நேரத்திலேயே பெண்களின் திருமண வயது 18-லிருந்து 21ஆக உயர்த்தப்படவிருப்பதாகச் செய்திகள் பரவின.

தி.மு.கழக எம்.பி-யான கனிமொழி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு உட்பட இந்தியா முழுவதும் பல பெண் ஆளுமைகள் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

‘திருமண வயதை உயர்த்துவது பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரிய அளவில் உதவும்’ எனப் பலரும் இந்த அறிவிப்பை வரவேற்றாலும், ‘இதனால் பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது’ என்ற எதிர்க் கருத்துகளும் எழுந்துள்ளன. இதன் பின்னணியில் வைக்கப்படும் காரணங்கள் என்ன... நிபுணர்களும் சாமானியர்களும் சொல்வது என்ன?

பெண்ணின் திருமண வயது 18... 21... 23?

முதல் ஆளாக வரவேற்பேன்!

17 வயதிலேயே தனக்கு நடக்கவிருந்த கட்டாயத் திருமணத்தை ‘சைல்டு லைன்’ உதவியுடன் நிறுத்தி படிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நெளமியா. “என் அப்பா வேறொரு கல்யாணம் பண்ணிகிட்டுப் போயிட்டார். வெளியூரில் கூலி வேலை செஞ்சுதான் என்னைப் படிக்கவைக்கிறாங்க என் அம்மா. சொந்தக்காரங்க வீட்டில் தங்கிப் படிக்கிறேன். டாக்டர் ஆகணும். நல்லபடியா செட்டிலாகி அம்மாவைப் பாத்துக்கணும்கிறதுதான் லட்சியம். 10-வதுல 410 மார்க் எடுத்தேன். 12-வது போனதுமே சொந்தக்காரங்க என் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுட்டாங்க.

‘எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்’னு எவ்வளவோ சொல்லியும் அவங்க கேக்கலை. மாப்பிள்ளை சொந்தக்கார பையன்தான் டிப்ளோமா படிச்சிருக்கார். 29 வயசு... ஓரளவுக்கு வசதி. அதுக்காக என் கனவைப் புதைச்சு கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்க முடியுமா... சைல்டு லைனுக்கு கால் பண்ணி எனக்கு நடக்கவிருந்த கல்யாணத்தைத் தடுத்துட்டேன்.

15 வயசுல எங்க அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்க அம்மா, இப்போ ஆதர வில்லாம நிக்கிறாங்க. என் அம்மா மட்டுமல்ல சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட யாருமே இங்கே நல்லா இல்லை. படிப்பு ஏறாத பொண்ணுங்க, வசதியான வரன் வருது, கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகிடலாம்னு நினைக்கிறவங்க. கல்யாண ஆசை உள்ளவங்களெல்லாம் மறுப்பு சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிறாங்க. சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிறவங்க, வாழ்நாள் கைதிபோல வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிடுறாங்க. சட்டத்தாலதான் இவற்றையெல்லாம் தடுக்க முடியும். பொண்ணுங்க கட்டாயமா படிக்கணும். படிப்பு ஏறலைன்னா 21 வயசு வரைக்கும் வேலைக்குப் போகணும். சட்டத்தைக் கடுமையாக்கணும்” என்றார் உறுதியுடன்.

தடையை மீறி ரகசிய திருமணங்கள்!

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது பின்தங்கிய பகுதிகளில் எந்தளவுக்குப் பலன் தரும் என சைல்டு லைன் அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.

“தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவு நடைபெறுகின்றன. கிராமப் பகுதி, மலைவாழ் பகுதிகளில் பெண்களுக்கு 14, 15 வயதில் திருமணம் செய்துவிடுகின்றனர். மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பிள்ளைகள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல போதிய போக்குவரத்து வசதி இருப்பதில்லை. பல கிலோமீட்டர் நடந்து சென்று படிக்கின்றனர். ஏழைப் பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதுதான் தங்கள் பெண்ணுக்குப் பாதுகாப்பு என நினைக்கின்றனர்.

குழந்தைத் திருமணம் குறித்து எங்களுக்கு ஒரு மாதத்துக்கு சராசரியாக 40 புகார்கள் வருகின்றன. எனில், வெளியில் தெரியாமல் நடக்கும் குழந்தைத் திருமணங்கள் எத்தனை என்று யூகித்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு வரும் புகாரின் அடிப்படையில் போலீஸாருடன் சென்று ஆய்வு செய்வோம். புகார் உண்மையெனில், சம்பந்தப்பட்ட திருமணத்துக்குக் காரணமானவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின்படி அவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய்வரை அபராதமும் விதிக்க முடியும். ஆனால், நடைமுறையில் சூழல் கருதி சிறைத் தண்டனையெல்லாம் விதிக்கப்படுவதில்லை. அறிவுரைகள் வழங்கப்பட்டு, தேவைப்பட்டால் அந்தப் பெண், 18 வயது முடியும்வரை அரசுக் காப்பகத்தில் வைக்கப்படுவார்.

இப்படித் தடுக்கப்படும் திருமணங்கள், அடுத்த சில மாதங்களிலேயே ரகசியமாக நடத்தப்படுவதும் உண்டு. ஆய்வுக்குச் செல்லும் போது அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கான எந்த ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்காது. அந்தச் சூழலில் எங்களால் எதுவும் செய்ய முடியாது.

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து பெண்கள் கல்வியை ஊக்கப்படுத்த, தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்களை அரசு கொண்டுவந்தாலும்கூட, அதற்காக இரண்டு மூன்று வருடங்கள் பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்க பல பெற்றோர்கள் தயாராக இல்லை. பின்தங்கிய பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்’’ என்றனர்.

 சுதா ராமலிங்கம் -  சாந்தி
சுதா ராமலிங்கம் - சாந்தி

சமூக மாற்றமும் முக்கியம்!

மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கத்திடம் பேசினோம், “ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது 21 என்பது என்னைப் பொறுத்தவரையில் வரவேற்கத்தக்கதுதான். பெற்றோர் பார்க்கும் பையனுடன் 18, 19 வயதிலேயே திருமணம் நடக்கும்போது அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான சூழலே இல்லாமலாகிவிடுகிறது. அதையும் மீறி பெற்றோர் பார்க்கும் பையனை நிராகரித்து தங்கள் விருப்பத்தைச் சொன்னால், ‘நீ சின்ன பொண்ணு. உனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்க உன் நல்லதுக்குத்தான் பண்ணுவோம்’ எனச் சொல்லி வாயை அடைத்துவிடுவார்கள். ‘அதான் ஒண்ணும் தெரியாத சின்ன பொண்ணுன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் இப்பவே கல்யாணம் பண்றீங்க?’ என்றும் பெற்றோரிடம் கேட்க முடியாது.

இங்கே ஒரு சட்டம் கொண்டு வருவதைவிட அதைச் செயல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. வரதட்சணை தடைச் சட்டம் கொண்டுவந்து எத்தனையோ வருடங்கள் ஆனபிறகும் வரதட்சணை கொடுமைகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு எனச் சட்டம் சொல்கிறது. எத்தனை வீடுகளில் சமபங்கு சொத்தை பெண்களுக்குத் தருகிறார்கள்? சட்டம் போடுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதும் முக்கியம்!” என்றார்.

சட்டம் போட்டு தடுக்கக் கூடாது!

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும் மருத்துவருமான சாந்தி வேறொரு பார்வையை முன்வைக்கிறார்.

‘`பெண்ணின் திருமண வயதை 15-லிருந்து 18ஆக உயர்த்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் குழந்தைத் திருமணங்களை நிறுத்த முடியவில்லை. லாக்டெளன் காலத்தில் ஆகஸ்ட் 11-ம் தேதிவரை மட்டும் 9,500 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டிருக் கின்றன. எனில், இப்போதுள்ள சட்டத்தையே முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என்றுதானே பொருள்.

திருமண வயதை உயர்த்துவதற்கான காரணமாக, பெண்களுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டையும், கல்வி முடக்கத்தையும் சொல்கிறார்கள். உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறை இருந்தால் கல்லூரிவரை இலவச கல்வியையும், காலை, மதிய உணவையும் கொடுங்கள். வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குங்கள். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குங்கள். படிக்காத பெண்களுக்கு குறு, சிறு தொழில் சார்ந்த பயிற்சிகள் கொடுத்து அவர்கள் தொழில் தொடங்குவதற்கு மானியங்கள் வழங்கி அவர்களை முன்னேற்றுங்கள். மது இல்லாத சமுதாயத்தை உருவாக்குங்கள். பெண் பொருளாதார சுய சார்புடன் இருக்க வழி செய்யுங்கள்.

‘பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் காதலித்து தடம் மாறிவிடுவது தடுக்கப்படும்’ எனச் சிலர் அபத்தமான கருத்துகளை முன் வைக்கின்றனர். ஹார்மோன் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொது. அந்தப் பிரச்னைக்கு முறையான பாலியல் கல்விதான் தீர்வு.

சட்டம் போடுவதைவிட, ‘நான் படித்து முடித்துவிட்டு சுய சார்பு பொருளாதாரத்தை அடைந்த பிறகு, திருமணம் செய்துகொள்வேன்’ என அவர்களே முடிவெடுக்கும் வகையில் அவர் களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுதான் சரி” என்றார்.

உடல் மட்டுமல்ல உளவியலும் பிரச்னை!

மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம், “ஒரு பெண் பூப்பெய்துவிட்டால் குழந்தைப் பெற்றெடுக்கத் தயாராகிவிடுவாள். ஆனாலும் 18 வயது பூர்த்தியாகும்வரை அவள் குழந்தைதான். அந்த வயதில் ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு இன்னொரு குழந்தையைப் பெற்றெடுப்பது சரியானது அல்ல. உடல்ரீதியாக மட்டுமல்ல; உளவியல்ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படு்ம்.

ஒரு குடும்பத்தை நடத்தும் பக்குவமும் குழந்தையை வளர்க்கும் பக்குவமும் அவர்களுக்கு அந்த வயதில் இருக்காது. அதைவிட முக்கியமாக அவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வியைப் பெற்றிருக்க மாட்டார்கள். திருமண வயது உயர்த்தப்பட்டால், பெண்கள் அதிகளவில் கல்லூரி படிப்புக்குள் நுழைவார்கள். கல்வியில் பெண்கள் மேம்பட்டால் சமுதாயமும் மேம்படும்” என்றார்.

 சிவபாலன் இளங்கோவன் -  முருகவேல் ஜானகிராமன்
சிவபாலன் இளங்கோவன் - முருகவேல் ஜானகிராமன்

தாமத திருமணங்களும் தவறானவையே!

திருமணத் தகவல் நிலையங் களின் பார்வை இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பேசும் `பாரத் மேட்ரிமோனி'யின் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், “ஒரு நாட்டில் பொருளாதாரம் வளர வளர ஒவ்வொரு 10 வருடத்துக்கும் சராசரி திருமண வயது அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும். பொருள் தேடவும், செட்டில் ஆவதற்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதன் பிறகே, திருமணம். அந்த வகையில் பொதுவாகவே இந்தியாவில் பெண், ஆண் இருவரின் திருமண வயதும் இயல்பாகவே அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மத்திய அரசு நியமித்துள்ள குழுவின் ஆலோசனையின்படி பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட்டால் நிச்சயம் நல்ல மாற்றம் உருவாகும்'' என்று சொன்னவர்,

``அதேநேரம், இளவயது திருமணம் எப்படித் தவறானதோ, தாமதமாகத் திருமணம் செய்வதும் தவறானதுதான். தாமதமாகத் திருமணம் செய்வதும் பல்வேறு சமூகச் சிக்கல்களுக்கு வழி வகுக்கும்” என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

இன்றைய வாழ்க்கைச் சூழலைவைத்து யோசிக்கும்போது, திருமண வயதை உயர்த்துவதில் தவறில்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. அதேநேரம், `18 வயதுத் திருமணம்தான் சரியானது' என்பவர்கள்... இயல்பான வாழ்க்கை, பெண்களின் உடல் பிரச்னைகள், குடும்பச்சூழல், பெற்றோர் மீதான சமூக அழுத்தம் உள்ளிட்டவற்றைத் துணைக்கு அழைக்கின்றனர். அதேநேரம்... நாகரிக வளர்ச்சி, நவீனவாழ்க்கை, படிப்பு, பணத்தேடல் போன்றவை ஏற்கெனவே பெண்களின் திருமண வயதை 25-க்கும் மேலாகவே கொண்டு சென்றுவிட்டன என்பதுதான் நிதர்சனம். இதற்காக உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் நாம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதும் நிதர்சனமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாமானியர்கள் என்ன சொல்கிறார்கள்?

வைஷ்ணவி, கோவை

“கிராமப்புறங்கள்ல பெண் களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருக்கு. அதன்பிறகு, படிப்பைத் தொடர முடியாமப்போன பெண்கள் இங்கு ஏராளம். அதனால என்னைப் பொறுத்தவரை பெண்களின் திருமண வயதை 23 என்று கொண்டு வந்தாலும் தவறில்லை. மத்திய அரசு, இந்த முடிவின் பலனா அனைத்துப் பெண் குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்யணும்.’’

மணிமேகலை, ஒருவானேந்தல் - ராமநாதபுரம் மாவட்டம்

‘`கிராமப்புறங்கள்ல எல்லாம் பொண்ணுங்களை சீக்கிரம் கல்யாணம் செஞ்சு கொடுத் திடணும்னுதான் நெனப்போம். ஏன்னா, ஒரு குடும்பத்துல ரெண்டு, மூணு பொம்பளப் புள்ளைங்க இருப்பாங்க. மூத்த புள்ளை வயசுக்கு வந்து அஞ்சு வருஷத்துக்குள்ள கல்யாணம் செஞ்சு கொடுத்தாத்தான், அடுத்த மூணு, நாலு வருஷத்துல ரெண்டாவது புள்ளைக்குக் கல்யாணம் செய்ய முடியும். இப்போல்லாம் 13 வயசுக்குள்ளாவே புள்ளைங்க பூப்படைஞ்சிடுறாங்க. அவங்கள எத்தனை வருஷம் வீட்டுல வெச்சுக்க முடியும்? பொண்ணுங் களுக்குக் கல்யாணம் செய்யுற வயசை அதிகரிச்சா கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்படும்.’’

வைஷ்ணவி - மணிமேகலை - வனிதா - சுவாதி
வைஷ்ணவி - மணிமேகலை - வனிதா - சுவாதி

வனிதா, சேலம்

``பெண்கள் தங்களோட கல்யாணத்துக்கு சுய சம்பாத்தியத்தில் இருந்தும் இப்பல்லாம் பங்களிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, 18 வயசு கல்யாணத்தில் இந்த வாய்ப்பு அவங்களுக்குக் கிடைக்கிறதில்ல. படிக்க வைக்காம, வேலைபார்க்க முடியாம கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதால பெண்கள் பிறந்த வீட்டுக்கு பாரமா இருக்கிறது தொடரும். ஆண்களைப்போல பெத்தவங்களுக்குப் பெண்களால எந்தக் கைம்மாறும் செய்ய முடியல. இது பெண்ணா பொறந்த ஒவ்வொருவருக்கும் மனசுல இருக்கிற தீராத வடு. ஆனா, பெண்ணின் திருமண வயசை 21 ஆக அதிகரிக்கும்போது, பெண்கள் படிக்கிறதுக்கான வாய்ப்பு அதிகமாகும்; பொருளாதார பலம் கிடைக்கும்.’’

சுவாதி, பழைய சுக்கம்பட்டி, மேலூர்

“இது நல்ல விஷயம்தான். ஆனா, நடைமுறைக்கு ஒத்துவராது. ஒரு பொம்பளப் புள்ளையைக் கல்யாணம் கட்டிக்கொடுக்குறதுல இருக்கிற பொறுப்பு, கடமை, பயம் எல்லாம் பெத்தவங்களுக்கு மட்டும்தான் தெரியும். நாட்டுல நடக்குற பெண்களுக்கு, குழந்தை களுக்கு எதிரான வன்முறைகளைப் பார்க்கும் போதெல்லாம் திக்குனு இருக்கு. இந்த நெலமையில, 18-லிருந்து 21 வயசு வரை மூணு வருஷம் திருமணத்துக்காகப் புள்ளையை வெச்சிருக்கணுமே. பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பில்லாத இந்தச் சூழல்ல, பெத்தவங்க மடியில் நெருப்பைக் கட்டிட்டுதான் இருக்கணும்.”

சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்கும்

சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு
சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு

சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு

“பொதுவாக பெண்கள், 16-வது வயதிலேயே உடல்ரீதியாகக் குழந்தைப்பேற்றுக்குத் தயாராகி விடுகிறார்கள். 20 வயதுக்குள் முதல் பிரசவம் நடந்துவிட வேண்டும். பெண்களின் உடலில் உள்ள `பெல்விக்’ என்ற இடுப்பெலும்பு 20 வயதுவரைதான் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும். அதன்பிறகு முதிர்ச்சியடையத் தொடங்கு வதால் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் இப்போதெல்லாம் பெண்ணுக்கு 27 வயதுக்குமேல்தான் வரன் தேட ஆரம்பிக்கிறார்கள். 25 வயதுக்கு மேல் திருமணம் செய்த பெண்களில் 80 சதவிகிதம் பேருக்கு அறுவைசிகிச்சை மூலம்தான் பிரசவம் நடக்கிறது. திருமண வயதை உயர்த்தினால் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism