Published:Updated:

`பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் நகைச்சுவையா?' - கொதிக்கும் பெண்கள்

சு.சூர்யா கோமதி

நடிகர் சரவணன் தன் கைகளை உயர்த்தி ``நானும் கல்லூரி படிக்கும்போது பேருந்துகளில் பெண்களிடம் தவறாக நடந்திருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அது ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் தன்னிடம் சேரன் தவறாக நடந்துகொண்டார் என சக போட்டியாளரான மீரா மிதுன் புகார் அளித்திருந்தார். மீரா மிதுனின் புகார் தவறானது என்பதைக் குறும்படம் மூலம் விளக்கிய கமல்ஹாசன்.``இதையெல்லாம் அத்துமீறலாக எண்ணினால் கூட்ட நெரிசலிலான பேருந்துகளில் கூடப் பயணம் செய்ய முடியாது. அங்கு பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதற்காகவே ஒரு கூட்டம் இருக்கும்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, நடிகர் சரவணன் தன் கைகளை உயர்த்தி, `நானும் கல்லூரி படிக்கும்போது பேருந்துகளில் பெண்களிடம் தவறாக நடந்திருக்கிறேன்'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் கைதட்டி ரசிக்க, கமலும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்துக்கொண்டே நகர, பெண்களிடையே பலத்த எதிர்ப்புகளை சம்பாத்திருக்கிறது அந்நிகழ்வு.

ஸ்ருதி நகுல்
ஸ்ருதி நகுல்

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி, சின்மயி போன்றவர்கள் தங்களுடைய சமூகவலைதளப் பக்கங்களில் சரவணனுக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஸ்ருதியிடம் பேசினோம்.

``ஓர் ஆண், `தான் சில பெண்களிடம் பொது இடத்தில் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறேன்'ங்கிறதை சிரிச்சுட்டே சொல்லுற அளவுக்குத் தைரியத்தை யார் கொடுத்ததுனு தெரியலை. உலகம் முழுவதும் ஒளிப்பரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோவில் இப்படியொரு கருத்தை அவர் சொல்லும்போது, அவர் ஏதோ சாகசம் பண்ணிட்ட மாதிரி அங்கிருக்கும் மக்களும் கைதட்டி ரசிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். கைதட்டியவர்களில் பாதிப் பேர் பெண்கள் என்பது இன்னும் தலை குனிய வேண்டிய ஒன்று. இப்படி ஒரு நிகழ்வைச் சம்பந்தப்பட்ட சேனலும் ஒளிபரப்பு செய்றாங்கனா தமிழக கலாசாரம் பற்றியோ பெண்கள் பற்றியோ யாருக்குமே கவலையில்லைனுதான் அர்த்தம்.

பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகும் பெண்களை அந்நிகழ்வு அத்தனை எளிதில் நிம்மதியாக இருக்க விடாது. நான் பள்ளி படிக்கும்போது எனக்கும் பள்ளிப் பேருந்தில் வைத்து பாலியல் அத்துமீறல் நடந்திருக்கு. இப்போ வரை அந்த அருவருப்பான நிமிடத்தை என்னால் மறக்க முடியல. ஆனால், அதை ஓர் ஆண் பெருமையா நினைக்கிறான் என்பது எவ்வளவு தவறான விஷயம். மற்றவர்களின் தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டும் கமல் சார் ஏன், அதை சிரிச்சுட்டே கடந்து போனாருனு தெரியல. அவர் அந்த இடத்தில் சரவணனுக்கு எதிராகவும், கைத்தட்டிய மக்களுக்கு எதிராகவும் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

ஸ்ருதி நகுல்
ஸ்ருதி நகுல்
instagram

நாளைய வழிகாட்டி என அரசியலில் பிரவேசம் செய்திருக்கும் கமல் சாருக்கு அந்தக் கடமையும் இருக்கு. இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் `சரவணன் தன் தவற்றை ஒத்துக்கொண்டார், தவற்றை ஒத்துக்கொண்டவர்களை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்' எனப் பதிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் தன் தங்கையாகவோ, அக்காவாகவோ, மகளாகவோ இருந்தால் இப்படித்தான் பேசுவார்களா என தெரியவில்லை. இப்படிப்பட்ட சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கு இருக்கு சொல்லுங்க" என்று ஆவேசமாகப் பேசுகிறார் ஸ்ருதி.

இது குறித்து சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,``ஒரு பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததை ஓர் ஆண் பெருமிதமாக சொல்லுவதை ஒரு தமிழக சேனல் ஒளிப்பரப்புகிறது. அதை மக்களும் நகைச்சுவையாக எடுத்து கைதட்டி ரசிக்கிறார்கள். மட்டமானவர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

சின்மயி
சின்மயி
instagram

சாமானிய பெண்களும் சரவணனுக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.