மூன்று மாத கர்ப்பிணி என்ற காரணத்தால் ஒரு பெண்ணை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணியில் சேர அனுமதிக்க மறுத்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு அனுப்பிய கடிதத்தில், அவர் `தற்காலிகத் தகுதியற்றவர் (Temporarily Unfit)' என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்தச் செயலைக் கண்டித்து டெல்லி மகளிர் ஆணையம் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மாலிவால் வங்கியின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், ``கர்ப்பிணி பணியில் சேர அனுமதிக்க மறுத்து, தற்காலிக தகுதியற்றவர் என்று கூறிய வங்கியின் நடவடிக்கை பாரபட்சமானது, சட்டத்துக்கு விரோதமானது. மேலும் இது, சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் அந்தப் பெண் பணியாளருக்கு வழங்கப்பட வேண்டிய மகப்பேறு சலுகைகளையும் பாதிக்கும். பெண்களுக்கு எதிரான இந்த விதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி வங்கிக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட வழிகாட்டுதலில், ``கர்ப்பம் மூன்று மாதங்களுக்கு மேல் இருந்தால், அந்தப் பெண் 'தற்காலிக தகுதியற்றவராக (Temporarily Unfit) கருதப்படுவார். குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவர் பணியில் சேர அனுமதிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, `ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்தால் அவரை நிராகரிப்பது பாரபட்சமான செயல். மேலும், வங்கியின் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன, அதன் பின்னணியில் உள்ள செயல் முறை என்ன, இதை அங்கீகரித்த அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்' என்று டெல்லி மகளிர் ஆணையம் கேட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாரத ஸ்டேட் வங்கி இன்னும் பதிலளிக்கவில்லை. விரைவில் இந்த நோட்டீஸுக்கு செவ்வாய்க்கிழமைக்குள் பதில் அளிக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி ட்விட்டரில், ``பெண்கள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தால் பணியமர்த்த தற்காலிக தகுதி அற்றவர்கள் என்கிறது ஸ்டேட் வங்கி. இது அரசியல் சாசனத்தின் பாலின சமத்துவத்துக்கு எதிரான அப்பட்டமான மீறல்" என்று தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
ஸ்டேட் பேங்க்கின் இந்த விதிகள், அரசியல் சாசனம் மற்றும் பாலின சமத்துவத்திற்கு எதிரானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று அதைத் திரும்பப் பெற்றுள்ளது.