Published:Updated:

`சுசி கணேசனால் எனக்கு ஆபத்து தொடர்கிறது!' - லீனா மணிமேகலை

 சுசி கணேசன்
News
சுசி கணேசன்

``எனக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று தன் அம்மா ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை போன்செய்து விசாரித்துக்கொண்டே இருக்கிறார். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சுசி கணேசன்தான் காரணம்" என்று அண்மையில் லீனா பதிவிட்டிருந்தார்.

மீ டூ புயல்... கிளம்பிய வேகத்தில் அடங்கிவிட்டது. ஆனால், அப்படி புயல் கிளப்பிய பெண்களில் சிலருக்கு இன்னமும் சிக்கல்கள் தொடர்கின்றன. அவர்களில் ஒருவர்... கவிஞரும் திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை!

2005-ம் ஆண்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக, தொகுப்பாளராக வேலை செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், திரைப்பட இயக்குநர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக, பெயரைக் குறிப்பிடாமல் 2017-ம் ஆண்டில் முகநூல் பதிவாக வெளியிட்டிருந்தார் லீனா மணிமேகலை.

Leena Manimekalai
Leena Manimekalai

யார் அவர் என்று பற்பல யூகங்களும் கிளம்பின. இந்நிலையில், 2018-ம் ஆண்டு #MeToo புகார்கள் பலதரப்பிலிருந்தும் பிரபல ஆண்களுக்கு எதிராக வெடித்துக் கிளம்பின. தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களைப் பொதுவெளியில் உடைத்து, பல பிரபலங்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவித்து, போர் முரசு கொட்டினர் பெண்கள் சிலர். இதைத்தொடர்ந்து, முகநூலில் தான் குறிப்பிட்டிருந்தது திரைப்பட இயக்குநர் சுசி கணேசனைத்தான் என்று ட்வீட் செய்தார் லீனா மணிமேகலை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விஷயம் பரபரப்பான சூழலில், லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்குத் தொடுத்தார், சுசி கணேசன். அந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லீனா தனது சமூக வலைதளப் பக்கங்களில், ``எனக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று தன் அம்மா ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை போன்செய்து விசாரித்துக்கொண்டே இருக்கிறார். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சுசி கணேசன்தான் காரணம்" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், தனக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த நடிகை அமலாபால், சித்தார்த் இருவரையும் கடந்த காலங்களில் மிரட்டியது போல, இப்போது தனக்கு துணை நிற்கும் பத்திரிகையாளர்களுக்கும் மிரட்டல்கள் வருகின்றன" என்றும் அதில் பதிவிட்டார்.

Leena Manimekalai
Leena Manimekalai

இந்த விவகாரம் குறித்து லீனாவிடம் பேசினோம்.

``சுசி கணேசன் மீது #MeToo புகாரை ட்விட்டரில் பதிவிட்டதில் இருந்தே எனக்குத் தொடர்ந்து மிரட்டல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. எனக்கு ஆதரவாக ட்வீட் செய்த நடிகர் சித்தார்த்தை, அவருடைய வயது முதிர்ந்த தந்தையை மிரட்டியதை அவரே ட்வீட் செய்தார். `திருட்டுப்பயலே 2’ படப்பிடிப்பில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதைப் பதிவிட்டு என்னை ஆதரித்த அமலா பாலை சுசிகணேசனும் அவர் மனைவியும் சேர்ந்து மிரட்டியதாக அமலா பால் பதிவு செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் #MeToo குறித்து சமூகவலைதளங்களில் பதிவுகள் இடும்போது அதைப்பற்றி மட்டும்தான் பேசியிருந்தேன். அவரோ பொதுவெளியில் என் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து மிகத்தரக்குறைவாகவும் தகாதமொழியிலும் என்னை மனநிலை சரியில்லாதவர் என்ற ரீதியிலும் என் கேரக்டரை அவதூறு செய்து பேசியுள்ளார். அப்படிப் பார்க்கும்போது உண்மையில் மானநஷ்ட வழக்கை நான்தான் அவர் மீது தொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு பெண்ணாக எனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்த உண்மையைப் பொதுவில் பதிவு செய்ததற்காக மானநஷ்ட வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று ஆதங்கம் பொங்கச் சொன்ன லீனா, தொடர்ந்தார்.

சுசி கணேசன்
சுசி கணேசன்

``மானநஷ்ட வழக்கு என்பதை அதிகாரத்திலிருப்பவர்கள், பணமிருப்பவர்கள் இவர்களுக்குச் சாதகமான ஒன்றாகவே பார்க்கிறேன். ஏழைகளையும் அதிகாரமற்றவர்களையும் நசுக்கப்பயன்படுத்தும் ஆங்கிலேயர் கால சட்டமாகத்தான் அதைப் பார்க்கிறேன். இந்தச் சட்டம் பெரும்பாலும் தவறாகவே பயன்படுத்தப்படுவதால், இதை நீக்கவேண்டும் என்று கருதுபவள் நான். தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து பொதுவெளியில் ஒரு பெண் பதிவிட்டதற்காக, மானநஷ்ட வழக்குத் தொடுக்க முடியும் என்ற நிலை நம் நீதித்துறையில் நிலவுகிறது என்பதே இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆபத்துதான்.

வழக்கில், என் அரசியல் செயல்பாடுகளையும் சமூகம் குறித்த விமர்சனக் கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் நான் பதிவிட்டிருக்கும் படைப்புகளையும் இணைத்து என்னை ஏதோ தீவிரவாதி என்பது போல முன்னிறுத்தியிருக்கிறார். அதற்கும் நான் எழுப்பியிருக்கும் அவரின் பாலியல் அத்துமீறல் நடத்தை குறித்த குற்றச்சாட்டுக்கும் என்ன சம்பந்தம்? நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறேன். என்னுடைய `மாடத்தி’ படத்தின் வெளியீட்டுக்கு இடையிலும் வழக்கையும் எதிர்கொண்டேன்'' என்று சொல்லும் லீனாவின் மேற்படிப்புக்கும் இதனால் பிரச்னை கிளம்பியிருக்கிறது.

court case
court case

``செப்டம்பர் 2020-ல் கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தில் சினிமா குறித்த மேற்படிப்புக்கான முழு உதவித்தொகையும் அங்கீகாரமும் கிடைத்த சமயம், நாட்டைவிட்டே தப்பிக்க முயற்சி செய்கிறேன் என்று குற்றம்சாட்டி பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் சுசி கணேசன். பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் கோர்ட், செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்றம் என வாரத்துக்கு மூன்று முறை கோர்ட் வாசல்படி ஏறிக் கொண்டிருந்தேன். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல், என் அன்றாட வாழ்க்கையையே பாதித்தது. படைப்பு ரீதியாக ஒரு வரிகூட எழுத முடியாத அளவுக்கு வரிசையாக இந்த வழக்குகள் என் வாழ்க்கையை பாதித்தன.

இறுதியாக, `மேற்படிப்பு பாதிக்காத வகையில் மானநஷ்ட வழக்கின் வழக்கு விசாரணை அமைக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட்டை முடக்கியது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. குற்றவியல் நீதி அமைப்பை மிகத் தவறாகப் பயன்படுத்தியிருப்பது முறை தவறிய செயல்பாடு' என்றெல்லாம் குறிப்பிட்டு, பாஸ்போர்ட்டை ஒரே வாரத்தில் திரும்பத் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சுசி கணேசன். அங்கேயும் அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. பாஸ்போர்ட் பறிமுதல் தொடர்பான அனைத்து வழக்கிலும் எனக்கு வெற்றி கிடைத்தது. மானநஷ்ட வழக்கு மட்டும் நிலுவையிலேயே இருக்கிறது.

நான் படிக்கும் கனடா பல்கலைக்கழக அலுவலகத்துக்கும், அதன் பேராசியர்களுக்கும் மெயில் மேல் மெயில் அனுப்பி, கல்விக்காக எனக்குக் கொடுக்கப்பட்ட விசாவை கேன்சல் செய்யவேண்டும் எனத் தொந்தரவு செய்தார். என் தரப்புப் பற்றி செய்தி வெளியிடும் செய்தியாளர்களையும், என் ட்விட்டர் பதிவுகளை ரீட்விட் செய்யும் பிரபலங்களையும் தொடர்ந்து மிரட்டி வருகிறார். என் திரைப்பட குழுவில் வேலை செய்பவரிடம் என்னைச் சந்தித்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என அவருடைய குழுவில் இருந்து பேசியிருக்கிறார்கள். எனக்கு ஏதாவது நேர்வதைக்காட்டிலும், எனக்காகத் துணை நிற்பவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைதான் எனக்கு.

கலைதான் என் அடையாளம். எனக்கு எழுதத் தெரியும். சினிமா எடுக்கத் தெரியும். என் அக்கறை, கோபம், எதிர்ப்புகள், கருத்துகள் என அனைத்தையும் எழுத்தில்தான் கொட்டுவேன். மொழியை, சினிமாவை என் சுதந்திரமான வெளிப்பாட்டுக்கான கருவியாகத்தான் பயன்படுத்துகிறேன். அதை எக்காரணம் கொண்டும் நிறுத்தமாட்டேன்.

சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் துணிவும் தைரியமும் அரசியல் தெளிவும் எனக்கு இருக்கிறது. ஆனால், வேறு வகையில் எனக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தினால் எனக்கு என்ன பாதுகாப்பு? எல்லாவற்றையும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான் இத்தகைய துன்புறுத்தல் கலாசாரத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறார்கள்” என்று அழுத்தமாகச் சொன்னார் லீனா மணிமேகலை.

#MeToo
#MeToo

மிரட்டல் குற்றச்சாட்டுகள் குறித்தும், லீனாவின் சமீபத்திய ட்வீட் குறித்தும் விளக்கம் கேட்க இயக்குநர் சுசி கணேசனைத் தொடர்பு கொண்டோம். ``நான் லீகலாக இந்த வழக்கை எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறேன். எதுவாக இருந்தாலும் என் வழக்கறிஞரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்று முடித்துக் கொண்டவர், வழக்கறிஞரின் எண்ணைப் பகிரவில்லை. அதைக் கேட்டு அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒருவேளை, வழக்கறிஞரின் எண்ணைப் பகிர்ந்தால், அவருடைய தரப்பையும் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.