Published:Updated:

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

பணியிடப் பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
பணியிடப் பிரச்னை

#StopExploitingWomen

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

#StopExploitingWomen

Published:Updated:
பணியிடப் பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
பணியிடப் பிரச்னை

ஆரம்பக் காலங்களில் பொருளாதார பலன் கொடுக்கும் உழைப்பு மட்டுமே உழைப்பாக அங்கீகரிக்கப்பட்டதால், ஆண்களே உழைக்கும் வர்க்கம் என்று சொல்லப்பட்டது. அடுப்படியிலும், வீட்டிலும் வழிந்தோடும் பெண்களின் உழைப்பு, ‘வீட்ல சும்மாதானே இருக்க?’ என்று கேட்கப்பட்டது. ‘இதுவும் உழைப்பே’ என்று எதிர்க்குரல் கொடுக்க நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. மேலும், வீட்டைத் தாண்டியும் பெண்கள் உழைக்கக் கிளம்பிய காலமும் கைகூடியது. போஸ்ட்மேன் (Post`man’)முதல் சேர்மன் (Chair`man’) வரை பெண்பால் வார்த்தைகளே இல்லாத துறைகளில் எல்லாம் அதை உருவாக்கும் அவசியத்தை ஏற்படுத்தினர் உழைக்கும் மகளிர். இன்னொரு பக்கம், பணியிடங்களில் பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுகிறதா என்றால், இல்லை என்ற பதிலை 2022 மகளிர் தினத்திலும் சொல்லிக்கொண்டிருப்பது வேதனை.

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

பெண்களின் மீதான உழைப்பு சுரண்டல், அடுப்படியிலிருந்து ஏ.சி அறைக்கு மாறி யிருக்கிறதே தவிர அதில் மாற்றமில்லை. பணி யிடங்களில் பெண்களுக்கான உரிமை, அங்கீகாரம், ஊதியம் உள்ளிட்டவை பாலின பேதத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டு அவர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது, உரக்கப் பேச வேண்டிய பிரச்னை. இந்த மகளிர் தினத்தில், அந்த சுரண்டலுக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுப் போம், ஒருங்கிணைப்போம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காளிகளாக இருக்கிறார்கள் உழைக்கும் பெண்கள். ஆனாலும் பணியிடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கு எதிரான சுரண்டல்களை, அவர்களை எப்படிக் கையாள வேண்டும், எதிர்க்கேள்வி கேட்க வேண்டும், இல்லாமல் செய்ய வேண்டும் என்பது பற்றி துறை சார்ந்த ஆளுமைகள் பகிர்ந்து கொள்கிறார்கள் இங்கு. அவர்களுடன் சேர்ந்து நாமும் உரக்கச் சொல்வோம்... #StopExploitingWomen

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

பணிச்சூழல் பாலியல் தொல்லை, நீதிமன்றம் வரை செல்வோம்! - வழக்கறிஞர் அருள்மொழி

“பணியிடங்களில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்கள் பலர். அது குறித்துப் புகார் அளிப்பதற்கான அவர்களின் தைரியத்தை, ‘நீ என்ன பண்ணின?’, ‘இவ்வளவு நாள் ஏன் அமைதியா இருந்த?’, ‘சரி இனிமே நீ வேலைக்குப் போக வேண்டாம்’ போன்ற எதிர்வினைகள் பறித்துக்கொள்ளும் சூழல்தான் இங்கு இருக்கிறது. சாட்சி சாத்தியமில்லாத பாலியல் குற்றம் குறித்த புகார்களுக்கு ஆதாரங்கள் கேட்பது, ஒருவேளை ஆதாரத்தை அளித்தாலும் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணிசெய்வதில் அழுத்தத்தைத் திணிப்பது, அந்த வேலையை விட்டு வேறு நிறுவனங்களில் வேலை தேடினாலும், ‘வொர்க்ப்ளேஸ்ல செக்‌ஷுவல் ஹராஸ்மென்ட் புகார் கொடுத்த பெண்ணா?’ என்று வேலைகொடுக்க யோசிப்பது என... பாதிக்கப்பட்ட பெண் களுக்கு நேரும் அநியாயங்கள் பல. இந்த நிலையில், பணியிடங்களில் பாலியல் சுரண்டலுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகம் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் ‘விசாகா குழு’வை அமைத்திருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். அடுத்ததாக, அவை பெயரளவில் இல்லாமல் செயலளவில் இருப்பதை வலியுறுத்த வேண்டும். ஊதியப் பாகுபாடு, பி.ஃஎப் கணக்கு வழங்கப்படாதது, மகப்பேறு விடுப்புக்கு ஊதியம் கொடுக்காதது என இந்தப் பிரச்னைகள் மட்டும் உழைப்புச்சுரண்டல் அல்ல. பெண்களின் பாதுகாப்புக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாததும் உழைப்புச்சுரண்டல்தான். அதற்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையும் பெண்களுக்கு இருக்கிறது. நிறுவனங்கள் கேட்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். நமக்காகக் குரல்கொடுக்க, போராட வேண்டிய முதல் பொறுப்பு நமக்குத்தான் உள்ளது.

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

’’பெண் முன்னேற்றத்திலும் சாதிப்பாகுபாடு... கருத்தில்கொள்வோம்... களைந்தொழிப்போம்! -
பழங்குடிகள் நலச்செயற்பாட்டாளர் லீலாவதி தன்ராஜ்

“பணிச்சூழலில் பெண்கள் சாதிய பாகுபாட்டுக்கு ஆளாவது பேசப்பட வேண்டிய பிரச்னை. பெரும்பாலான நிறுவனங்கள் ஒடுக்கப்பட்ட, பழங்குடியினப் பெண்களுக்குப் பணி, பொறுப்புகள் கொடுப்பதில்லை. இந்த சமூகத் தடையை மீறி தங்கள் திறனால் பணி கிடைக்கப்பெற்றாலும், இந்தப் பெண்கள் பணியிடத்தில் சாதியப் பாகுபாட்டுக்கு உள்ளாவது அவலமான உண்மை. பழங்குடியின சமூகப் பெண்கள் அவர்களின் சமூகத்தில் மதிப்புக்குள்ளவர்களாகவே நடத்தப் படுகிறார்கள். ஆனால், பொதுச் சமூகத்திற்குள் வரும்போது, இந்தச் சூழலை அவர்கள் எதிர் கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. பெண் சமூகத்தின் முன்னேற்றத்தில் ஒடுக்கப்பட்ட, பழங்குடியினப் பெண்களையும் இணைத்துக்கொள்ளாமல் ‘பெண்கள் முன்னேற்றிவிட்டார்கள்’ என்று சொல்வது ஏற்புடையது அல்ல. கல்வி அவர்களை சமூகத்துடன் இணைக்கும் ஒரு கருவி. ஆனால், படிப்பு மட்டுமே மேஜிக்கலாக அவர்களை முன்னேற்றிவிடாது. ‘முன்னேறுங்கள்’ என்று வார்த்தைகளில் சொல்லாமல், அவர்களுக்கான வாய்ப்புகளைக் கொடுக்க முன்வாருங்கள். ஒரு நிறுவனத்தில் 50 சதவிகிதம் வேலை வாய்ப்பை பெண்களுக்காக ஒதுக்குகிறார்கள் என்றால், அதில் 25 சதவிகிதம், பழங்குடியினர், விளிம்புநிலை சமூக பெண்களுக்குக் கொடுக்க முன்வர வேண்டும். அரசு நிறுவனங்களில் இந்த முன்னெடுப்பு நிகழ்ந்தால், தனியார் நிறுவனங்களிலும் சாத்தியமாகும். சேர்ந்து முன்னேறுவோம். பணியிடங்களில் சாதி பாகுபாட்டை எதிர்கொள்ளும் பெண்களின் பிரச்னைகளைக் களைவோம்.”

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

ஆணுக்கும் பெண்ணுக்கு ஏன் இல்லை சம ஊதியம்? - சமூகச் செயற்பாட்டாளர் உ.வாசுகி

“ஒரே வேலைக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சம கூலி இல்லை என்ற நிலை கடந்த காலத்திலிருந்த அளவு தற்போது இல்லை. இந்த மாற்றத்தில் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. ஆனால், கூலி வேறுபாடு இப்போதும் நுட்பமாக அமலில் உள்ளது. உதாரணமாக, விவசாயத்தில் பெண்கள் செய்யும் நடவு, களையெடுப்புக்குக் குறைவான கூலியும், ஆண்கள் செய்யும் உழவு, அறுவடைக்கு ஒப்பீட்டளவில் அதிக கூலியும் சட்ட கூலியாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக விவசாயத்தில் நிலவிய கூலி வேறுபாடு, ஊரக வேலை உறுதி சட்டத்தில்தான் சம கூலியாக மாற்றப்பட்டது.

நாற்று நடும், சித்தாள் வேலை செய்யும் பெண்கள் மட்டுமல்ல, ஒயிட் காலர் வேலைகளில், உயர் பொறுப்புகளில் இருக்கும் பெண்களும் ஊதியப் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். ஊதியப் பாகுபாட்டுக்கு, ‘பெண்ணின் ஊதியம் குடும்பத்துக்கான கூடுதல் வருமானம்தானே’, ‘பெண்கள் அடிக்கடி விடுமுறை கேட்பார்கள்’, ‘வெளியிடங்களுக்குச் செல்ல தயங்குவார்கள்’, ‘ஆண்களைக் காட்டிலும் உடல்ரீதியாகப் பலவீனமானவர்கள்’, ‘அலுவலக நேரத்துக்குப் பின் பெண்களை வேலைவாங்க முடியாது’ என்று பல சாக்குகள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், இன்று எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக, அவர்களைவிட அதிகமாக உழைக்கிறார்கள் பெண்கள் எனும்போது, பாலின பாகுபாடற்ற சம ஊதியத்தைக் கேட்டுப் பெற வேண்டியது பெண்களின் உரிமை. வேலை கிடைத்தால் போதும், வேலையைத் தக்கவைத்தால் போதும் என்று நினைக்காமல், கூட்டு பேர உரிமையோடு எதிர்ப்புகளைத் தெரிவியுங்கள். உங்கள் உழைப்புக்கே நீங்கள் ஊதியம் கேட்கிறீர்கள். உங்கள் ஊதியம் உங்கள் உரிமை.”

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

ஆபீஸிலும் டீ ஊற்றிக்கொடுக்க வேண்டுமா? - காம்கேர் கே.புவனேஸ்வரி, சி.இ.ஓ., காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம்

‘’வீட்டு வேலைகளைப் பெண்களே செய்ய வேண்டும் என்ற ஆணாதிக்கம், அலுவலகத்தில் ஏதேனும் ஒரு விசேஷ தினம் என்றால் அங்கும் கோலம், அலங்காரம், உணவு பரிமாறுவது போன்ற வேலைகளை பெண்களையே செய்யவைப்பது வரை வியாபித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ‘இதையெல்லாம் ஆண் செய்வதா, பெண்தானே செய்ய வேண்டும்’ என்ற பெண் அடிமைத்தன சிந்தனைதான். அவற்றை உடைக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அலுவலகத்தில் எந்தப் பணியாக இருந்தாலும், ஆண், பெண் சேர்ந்து செய்ய வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருங்கள். நீங்கள் வாங்கும் சம்பளம், இதுபோன்ற ‘ஆபீஸ் ஹவுஸ்வொர்க்'குகளை (Office housework) செய்வதற்கு அல்ல. ஒரு மீட்டிங்கில், பெண் என்பதாலேயே உங்களை டீ பரிமாறச் சொல்கிறார்கள் என்றால், அதைச் செய்ய மறுத்துவிடுங்கள். ‘இத்தனை ஆண்கள் இருக்கும் இடத்தில் நான் மட்டும் ஏன் இதை செய்ய வேண்டும்?’ என்று துணிந்து கேளுங்கள். நாளை நம் மகள்களையும் இவர்கள் டீ பரிமாறச் சொல்லாமல் இருக்க, இன்று நாம் இந்தக் கேள்வியை ஆரம்பித்து வைக்க வேண்டியது முக்கியம். நியூ வெர்ஷன் பெண்களாக இருப்போம்!”

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

சபைக்கு வராத பெண்களின் உழைப்பு! - நடன இயக்குநர் கலா

‘`சினிமாவில் நடனத்துறையில் பெண்கள் அதிகளவு இல்லாத நேரத்தில் டான்ஸ் மாஸ்டராக என் கரியரைத் தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுவரை இந்தத் துறையில் பெண்கள் நடத்தப்படும் விதத்தை கவனித்து வருகிறேன். என்னுடைய ஆரம்பக்காலத்தில், திறமையும் உழைப்பும் இருந்தாலும், ‘சின்னப் பெண்ணுக்கு நடன இயக்குநர் வாய்ப்புக் கொடுக்கணுமா?’ என்றார்கள். என்றாலும், எனக்கும் என் வேலைக்கும் எப்படி ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவும் தைரியமும் எனக்கு இருந்தது.

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

சினிமா துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் பெண்களின் வேலையை சபையில் மறைப்பது, வாய்ப்புகளை மறுப்பது என்று அவர்கள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவது இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் பாடிஷேமிங் முதல் கேரக்டர் அசாசினேஷன் வரை நடக்கும். அவற்றுக்கெல்லாம் துவண்டு விடாமல் மேலே மேலே செல்வதுதான் நமக்கு வெற்றி. குரூப் டான்ஸராக என் கெரியரை ஆரம்பித்தபோது முதல் வரிசையில் நின்ற என்னை, கறுப்பாக, ஒல்லியாக இருப்பதாகச் சொல்லி தயாரிப்பாளர் கடைசி வரிசைக்குத் தள்ளினார். என் திறமையால், சில வருடங்களில் அதே தயாரிப்பாளரின் படத்துக்கு மாஸ்டராகப் பணியாற்றும் சூழலை உருவாக்கினேன். உழைப்புச்சுரண்டலை அதே உழைப்பாலேயே வெற்றிகொள்ளவோம்.’’

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

குடும்பம் முதல் லிவ்-இன் வரை... சுரண்டல்தான் உறவா? -
எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் கொற்றவை

“பணிக்குச் செல்லும் எந்த ஓர் ஆணிடமும் வொர்க் - லைஃப் பேலன்ஸ் பற்றிய கேள்வி முன்வைக்கப்படுவது கிடையாது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினராவே இருந்தாலும் அந்தப் பெண் இந்தக் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டே ஆவார். பெண் என்பவள் காலையில் குடும்ப வேலை, பின் அலுவலக வேலை, மீண்டும் குடும்பப் பொறுப்பு என்று சுழன்றால் மட்டும்தான் வேலைக்குப் போகும் அனுமதியைப் பெறுகிறாள். ‘என் மனைவி நல்லா சமைப்பா’, ‘அவ ரொம்ப பொறுப்பானவ’ என்ற வார்த்தைகளால் பெண்களின் உழைப்பைச் சுரண்டுவது குடும்ப அமைப்புகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குடும்ப அமைப்பிலிருந்து விடுபட்டு லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை தேர்ந் தெடுத்தாலும் அங்கும் பெண்ணே சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறாள். ஆக, உறவு என்ற பெயரில் பெரும்பாலான பெண்களுக்கு நடப்பது உழைப்பு, உணர்வுச்சுரண்டல்களே. இதற்குத் தீர்வு... உறவுகள் குறித்துப் புனிதப்படுத்தப்பட்டுள்ள ஸ்டீரியோடைப் சங்கிலி களிலிருந்து பெண்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்.’’

உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை, பணியிடப் பிரச்னை...

காட்சி ஊடகங்கள்... போகப் பொருள்களா பெண்கள்? -
நிகழ்ச்சித் தொகுப்பாளர், யூடியூபர் மோனிகா

“சினிமாவில் நடிப்பது முதல் செய்திகள் வாசிப்பது வரை ஊடகத்துறைப் பணிகளுக்கு வரும் பெண்கள், அவர்களுக்கான வேலை தாண்டியும் ஒரு காட்சிப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். ஊடகம் சார்ந்து இயங்கும் பெண்கள் மீது வரைமுறை இல்லாமல் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்களுக்கு அதனால் நேரும் மனக்காயம், அவர்கள் குடும்பத்துக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றி நெட்டிசன்கள் யோசிப்பதே இல்லை. சமூக வலைதளங்களில் பாடல், நடனம் என வீடியோக்கள் பதிவிடும் பெண்களை அடக்கும் ஆயுதமாக, ஆணாதிக்கவாதிகள் கமென்ட் பாக்ஸ்களைக் கையாள்கிறார்கள். இன்னொரு பக்கம்... நடப்புச் செய்திகள், அரசியல் என்று வீடியோ பதிவிடும் பெண்களையும், ‘பொம்பள என்ன கருத்து சொல்ற?’ என்று ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். சமூக ஊடகங்கள் இன்று பொருளீட்டும் முக்கியக் கருவியாகவும் மாறியுள்ள நிலையில், அங்குள்ள பெண்களை இப்படி அவதூறு செய்வது, அவர்கள் வளர்ச்சியைத் தடுக்கும் உழைப்புச்சுரண்டல். பேசுபவர்கள் தங்கள் நேரத்தை வீண் செய்து பேசிக்கொண்டிருக்கட்டும். ஊடகத்தில் அழகு தாண்டி, அறிவார்ந்த மற்றும் டெக்னிக்கல் துறைகளிலும் நமக்கான பாதைகளை உருவாக்குவோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism