Published:Updated:

`லவ் ஜிகாத்'தில் கைதான கணவர், கலைந்த பெண்ணின் கரு, கண்ணீரில் குடும்பம்... உ.பியில் நடப்பது என்ன?

Protest against Hathras gang rape
Protest against Hathras gang rape ( AP Photo / Rajanish Kakade )

கருவிலேயே கலைந்ததாகச் சொல்லப்படும் அந்த ஏழு வார சிசு, இந்தியாவின் ஜனநாயகத்திடம் கேட்கும் கேள்வி என்ன?

`லவ் ஜிஹாத்'... இதுதான் இப்போது உத்தரப் பிரதேசத்தில் தினம் தினம் தலைப்புச் செய்தி. மதங்கள் கடந்து காதல் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த இஸ்லாமிய ஆண்கள் பலர் இந்தச் சட்டத்தின் மூலம் கைதாகி வருவதால் இஸ்லாமிய மக்களிடையே அங்கே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மொரதாபாத்தில் ஓர் இந்துப் பெண் இஸ்லாமிய ஆணை காதல் திருமணம் செய்துகொள்ள, அந்த ஆண் போலீஸால் கைது செய்யப்பட்டு, அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் போலீஸால் அலைக்கழிக்கப்பட்டு கரு கலைந்தது என, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தக் குடும்பத்தின் கண்ணீர் காட்சிகள் செய்திகளாகி வருகின்றன.

Indian Prime Minister Narendra Modi, right, speaks with Chief Minister of Uttar Pradesh state Yogi Adityanath
Indian Prime Minister Narendra Modi, right, speaks with Chief Minister of Uttar Pradesh state Yogi Adityanath
AP Photo / Altaf Qadri, File

`மதமாற்ற தடைச் சட்டம்' என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் உத்தரப்பிரதேசத்தில் வேட்டையாடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அந்தச் சட்டம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஒரு மாதத்துக்குள், 8 வழக்குகள் இதன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் உண்மைத்தன்மை கேள்விகளையே எழுப்புகின்றன. சமீபத்தில், `கட்டாய மதமாற்ற திருமணம்' என்று கூறி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற மணமக்கள் இருவருமே, தலைமுறைகளாக இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்தான், மொரதாபாத்தில் அந்தக் குடும்பமே இந்தச் சட்டத்தால் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ரஷீத் அலியையும், அவரின் சகோதரரையும் போலீஸார் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். குடும்பத்தின் வருவாய் ஈட்டும் இருவருமே கைதானதால், வருமானத்துக்கு வழியில்லாமல் அந்தக் குடும்பம் தவிப்புக்குள்ளாகியுள்ளது. அக்கம் பக்கத்தினர்தான் இவர்களுக்குச் சாப்பாடு உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்தச் சகோதரர்களின் தாயார் கூறுகையில், ``என் மகன்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என் மூத்த மகன் கூலித் தொழிலாளி. இரண்டாவது மகன் முடிதிருத்தும் தொழில் செய்து வந்தான். எனக்கு நான்கு மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். இதில் 2 மகன்களை போலீஸார் சிறையில் அடைத்து விட்டனர். வருமானத்துக்கு வழியில்லை. நாங்கள் பெரும் சிரமப்படுகிறோம்" என்றிருக்கிறார் கண்ணீருடன்.

Marriage (Representational Image)
Marriage (Representational Image)
Photo by Jayesh Jalodara on Unsplash

கரன்ட் பில்கூட கட்ட இயலாத நிலையில், இவர்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அக்கம் பக்கத்தினர்தான் பரிவு காட்டி இவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள். வக்கீல் வைக்கக்கூட காசு இல்லை. இந்தச் சட்டம் மிகக் கடுமையாக இருப்பதாகவும், அப்பாவி இஸ்லாமியர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடந்த சம்பவம் என்னவென்றால்... ரஷீத் அலியும் ஓர் இந்துப் பெண்ணும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்தைக் கண்டித்த ஒரு வலதுசாரி இயக்கம், அந்தப் பெண்ணையும், அவர் கணவர், கணவரின் சகோதரரையும் போலீஸிடம் ஒப்படைத்தனர். அந்த ஆண்களைக் கைது செய்த காவல்துறை, அந்தப் பெண்ணை அரசு காப்பகத்துக்கு அனுப்பியது. சில நாள்கள் கழித்து, ஏழு வாரங்கள் கர்ப்பமாக இருந்த தனக்கு கஸ்டடியில் கருச்சிதைவு ஏற்பட்டது என்று தெரிவித்தார் அந்தப் பெண். மேலும், அவர் மாஜிஸ்ட்ரேட்டிடம், தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தன் கணவரை திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்ததை அடுத்து, அவர் அவரின் மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும், அவரின் கணவரும் கணவரின் சகோதரரும் தொடர்ந்து ஜெயிலிலேயே வைக்கப்பட்டனர்.

அந்தப் பெண் செய்தியாளர்களிடம், அரசு இல்லத்தில் தனக்கு வயிறு வலிக்குது என்று சொன்னபோது, அவர்கள் அதை சட்டை செய்யவில்லை என்றும், தனக்கு தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்ட பின்னரே தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு போடப்பட்ட ஊசிக்குப் பின்னரே தனக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் கூறினார். இரண்டு நாள்கள் கழித்து தனக்கு அதிக ஊசி போடப்பட்டதாகவும், தன் உடல்நிலை மோசமாகி தனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறினார். அரசு இல்லத்திலும் மருத்துவமனை தரப்பிலும் இது குறித்த தெளிவான விளக்கங்கள் இல்லை.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
கார்ட்டூன்: ஹாசிப்கான் / ஆனந்த விகடன்

`லவ் ஜிஹாத்' சட்டம் என்றால் என்ன?

திருமணத்துக்காக மட்டும் ஒருவர் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் தெரிவித்திருந்தது. அவ்வாறு திருமணத்தின்போது மதம் மாறுவது செல்லாது எனவும் உத்தரவிட்டிருந்தது. (பின்னர் இந்தத் தீர்ப்பு சரியானது இல்லை என்றும் நீதிமன்றத்தால் தெளிவுபடுத்தப்பட்டது)

இதையடுத்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் `லவ் ஜிஹாத்' தடை சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. உ.பியில் அது முதலில் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாகத் திருமணத்துக்காக மதம் மாறுதல் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும். மேலும், திருமணத்துக்காக மதம் மாறுவதும் சட்டப்படி ஏற்கப்படாது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படும்.

ஆதித்யநாத்களே... `லவ் ஜிகாத்’திடமிருந்து அல்ல; உங்களிடமிருந்துதான் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்!

சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டு, ஜாமீனில் வெளி வரமுடியாத குற்றமாகவும் கருதப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் உ.பியில் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதும், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் இதன் மூலம் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதும் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கருவிலேயே கலைந்ததாகச் சொல்லப்படும் அந்த ஏழு வார சிசு, இந்தியாவின் ஜனநாயகத்திடம் கேட்கும் கேள்வி என்ன?

- ஆனந்தி ஜெயராமன்
அடுத்த கட்டுரைக்கு